தொடர்புள்ள பதிவு:
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாற்கடல் – Bharathiraja, Kamalahasan
Vairamuthu Question & Answer – Incidents, Detractors
வைரமுத்து கேள்வி பதில் – MSV, Rajaraja Chozhan
பாடலாசிரியர் வைரமுத்து lists his favorite Movie Lyrics & Songs
ப.முரளிகிருஷ்ணா, சமயபுரம்.
அப்துல் ரகுமான் _ மீரா _ நா.காமராசன் _ சிற்பி _ தமிழன்பன் _ மேத்தா இவர்கள் கவிதைகளில் நீங்கள் ரசித்த வரிகள்?
‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
– அப்துல் ரகுமான் (பால்வீதி)
‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’
– மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)
வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
– நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)
‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
– சிற்பி (இறகு)
‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
– ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)
காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
– மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)
கே.சுந்தரேசன், உத்தமதானி.
பாரதியார் கவிதைகளை அவர் எழுதிய காலத்தில் யாரும் விமர்சித்தது உண்டா?
உண்டு.
கண்ணன் பாட்டில் _
‘‘தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி _ பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’’ என்று எழுதினார் பாரதி.
வக்கீல் நண்பர் ஒருவர் கேட்டார்: ‘‘நீங்கள் எழுதியது கண்ணன் பாட்டு, கண்ணன் கதை நிகழ்ந்த காலம் முற்காலம்; தில்லிக்குத் துருக்கர் வந்தகாலம் பிற்காலம். கண்ணன் பாட்டில் துருக்கர் பற்றிய குறிப்பு வருவது காலமுரண் இல்லையா?’’
கண்சிவந்த பாரதி அள்ளி வீசினார் அனல் வார்த்தைகளை : ‘‘ஏங்காணும்… பணியாரம் கொடுத்தால் ருசி பார்த்துச் சொல்வீரா… மாவு எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்று கேட்பீரா? கவிதையைக் கவிதையாய்ப் பாரும் ஓய்…’’
ஆவேசத்தின் சிகரங்களிலிருந்து காட்டாறாய் இறங்கி வருகிறது கவிதை. அதில் நுரை பார்க்கும் கூட்டம் நதி பார்க்காது.
என்.பார்கவி, தேவகோட்டை.
ஓர் ஆணோ பெண்ணோ அதிகபட்சம் எத்தனை குழந்தைகள் பெற முடியும்?
18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888.
1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள்; ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்; நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகள்.
இனவிருத்திக்கான ஆற்றல் இயங்க முடிந்த எல்லாருக்கும் உண்டு.
மதம் அரசு என்ற நிறுவனங்களாலும், நாகரிகம் பண்பாடு என்ற கருத்தியல்களாலும் நம் சக்தி நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.
க.ஞானசேகரன், கதிராமங்கலம்.
நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னப் பறவைதானே பறவைகளில் அறிவாளி?
அதே அன்னப் பறவையை முட்டாள் என்கிறான் பர்த்ருஹரி.
இரவில் குளத்தில் தெரியும் நட்சத்திரங்களை ஆம்பல் முனை என்று கடித்து ஏமாந்து போகும் அன்னம், பகலில் நட்சத்திரம் என்று கருதி ஆம்பலைக் கடிக்காமல் பட்டினி கிடக்குமாம். மதி அன்னங்களும் உண்டு மட அன்னங்களும் உண்டு மனிதர்களைப் போலவே.
பி.புகழேந்திரன், மேலவழுத்தூர்.
பல இசையமைப்பாளர்கள் இசையமைத்ததில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல்…
நீண்…..ட பட்டியல். உங்கள் பொறுமையை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.
கே.வி.மகாதேவன் _வானம் எங்கே முடிகிறது (பாய்மரக்கப்பல்)
எம்.எஸ்.விஸ்வநாதன் _ கண்ணான பூமகனே (தண்ணீர் தண்ணீர்)
இளையராஜா _ பொன்மாலைப்பொழுது (நிழல்கள்)
சங்கர் கணேஷ் _ மேகமே மேகமே (பாலைவனச்சோலை)
கங்கை அமரன் _நீ தானா நெசந்தானா (நாளெல்லாம் பௌர்ணமி)
சந்திரபோஸ் _மனிதன் மனிதன் (மனிதன்)
ஷியாம் _ ஆனந்த தாகம் (வா இந்தப் பக்கம்)
வி.எஸ்.நரசிம்மன் _ ஓடுகிற தண்ணியில (அச்சமில்லை அச்சமில்லை)
ஆர்.டி.பர்மன் _ அடடா வயசுப்புள்ள (உலகம் பிறந்தது எனக்காக)
லட்சுமிகாந்த் பியாரிலால் _ தேனூறும் ராகம் (உயிரே உனக்காக)
சக்கரவர்த்தி _ சமையல் என்பதொரு தத்துவம் (தேன்கூடு)
மனோஜ் கியான் _ அழகான புள்ளிமானே (மேகம் கறுத்திருக்கு)
அம்சலேகா _ சேலைகட்டும் பெண்ணுக்கொருவாசம் உண்டு (கொடிபறக்குது)
சம்பத் செல்வம் _ சந்தனப் பூவச் சம்மதம் கேட்கப்போறேன் (ஓடங்கள்)
தேவா _ புல்வெளி புல்வெளி தன்னில் (ஆசை)
தாயன்பன் _ ஸ்ரீராமனா (அன்று பெய்த மழையில்…)
ஜெர்ரிஅமல்தேவ் _ என் கண்மணி (நினைவோ ஒரு பறவை)
வித்யாசாகர் _ மலரே மௌனமா (ஜெய்ஹிந்த்)
ஏ.ஆர்.ரஹ்மான் _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா)
தேவேந்திரன் _ மாட்டுவண்டிச் சாலையிலே (வேதம் புதிது)
எஸ்.பி.பாலசுப்ரமணியம் _ வண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)
எல்.வைத்திய நாதன் _உழுதானே உழுதானே(ஏர்முனை)
சங்கீத ராஜன் _ நாடு நாடு (பூவுக்குள் பூகம்பம்)
ரவீந்திரன் _மனமே மயங்காதே (லட்சுமி வந்தாச்சு)
மரகதமணி_ ஜனகணமன (வானமே எல்லை)
எஸ்.ஏ.ராஜ்குமார் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாத மனமும் துள்ளும்)
பரத்வாஜ் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)
பாலபாரதி_தாஜ்மஹால் தேவையில்லை (அமராவதி)
ஆதித்யன் _ ஒயிலா பாடும் பாட்டுல (சீவலப்பேரிபாண்டி)
சிற்பி _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)
மகேஷ் _ பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் (நம்மவர்)
ஆனந்த்_அச்சு வெல்லமே(சக்தி)
சுரேஷ் பீட்டர் _ பூப்பூவாப் பூத்திருக்கு பூமி (கூலி)
விஜய்ஆனந்த் _ தேவி தேவி (நான் அடிமை இல்லை)
சிவாஜி ராஜா _ சின்னச் சின்ன மேகம் (காற்றுக்கென்ன வேலி)
இனியவன் _ அருவிகூட ஜதியில்லாமல் சுதியில் பாடுது (கௌரி மனோகரி)
சௌந்தர்யன் _ கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை (சிந்து நதிப் பூ)
ரஞ்சித் பரோட் _ மின்னல் ஒரு கோடி (வி.ஐ.பி.)
ஹாரீஸ் ஜெயராஜ் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)
மணிசர்மா _ மெல்லினமே (ஷாஜகான்)
தினா _ அன்பே அன்பே (கண்ணும் கண்ணும்)
சபேஷ்முரளி _ விளக்கு ஒன்று அணைந்து போனால் (அடைக்கலம்)
தேவி ஸ்ரீ பிரசாத் _ மண்ணிலே மண்ணிலே (மழை)
ஷிவா _ என்ன அழகு எத்தனை அழகு (லவ் டுடே)
விஜய் ஆண்டனி _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யூம்)
ஸ்ரீகாந்த் தேவா _ பொட்டுவைத்த முகத்தை (சிலநேரங்களில்)
டி.இமான் _ ஏ.தமிழா ஏ.தமிழா (தமிழன்)
பால்ஜே _ பேனாக்காரன் வருகிறேன் (தலைமகன்)
ஜி.வி.பிரகாஷ் _ நீயே சொல் (பொல்லாதவன்)
எஸ்.மகாலட்சுமி, வல்லக்கோட்டை.
பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்?
- மதிக்கப்படுவதை;
- தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை;
- நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப் படுவதை;
- தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை;
- தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை;
- ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும் தான் என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை.
- சபையில் கொடுக்கும் கௌரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை;
- தாம்பத்யம் முடிந்த தருணங்களில் ‘குளியல் அறைக்கு முதலில் நீ போ’ என்று வழங்கப்படும் முன்னுரிமையை.
எஸ். உஷாராணி, துவாக்குடி.
எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா?
சாமர்த்தியசாலி.
ஒரு படப்பிடிப்புக் கூடத்துக்குள் நடித்துக் கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஒரு லாரியில் வந்து இறங்குகிறது ரசிகர் கூட்டம். தேநீரும் வடையும் தந்து உபசரிக்கிறார். கையெடுத்துக் கும்பிட்டும் வந்த கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. நெருக்கமான காதல் காட்சி வேறு. வரவர ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களை வெளியேற்றவும் முடியவில்லை. என்ன செய்வதென்று எம்.ஜி.ஆர். யோசிக்கிறார். வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த உதவி இயக்குநரை அழைக்கிறார்; அவர் வைத்திருந்த வசனத் தாளை வாங்குகிறார். என்னவோ எழுதுகிறார். கூடியிருந்த கூட்டம் கும்மி கொட்டி ஆரவாரிக்கிறது.
‘‘வசனகர்த்தாங்கறவன் சும்மா, வாத்தியார் படத்துக்கு வாத்தியார்தாண்டா எழுதுறாரு வசனத்த’’ என்று பெருமை பேசுகிறது கூட்டம். கொஞ்ச நேரத்தில் ஒரு சிறிய போலீஸ் பட்டாளம் வருகிறது; ரசிகர்களைக் கலைக்கிறது; லாரி புறப்படுகிறது.
இப்போது வசனத்தாளை எம்.ஜி.ஆர். மீண்டும் வாங்குகிறார். தான் எழுதிய வரிகளை அவரே அடிக்கிறார்.
‘‘போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்து அத்தனை பேரையும் மென்மையாக அப்புறப்படுத்தவும்.’’
வெளியே லாரிக்காரர்களின் கோஷம் சாலையைக் கிழிக்கிறது: ‘எம்.ஜி.ஆர். வாழ்க!’
ஆர். ரூபநாதன், சின்ன காஞ்சிபுரம்.
இந்திய வாழ்க்கை என்பது…?
கடைசி ஐந்து வருடத்தைத் தனக்குப் பிடித்தமாதிரி வாழ்வதென்னும் போராட்டத்தில் தனக்குப் பிடிக்காத மொத்த வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பது.
பி. நேருதாசன், பல்லாவரம்.
தலைவர்கள் யாரைப்பார்த்து அஞ்சுகிறார்கள்?
பத்திரிகைக்காரர்களைப் பார்த்து,
பிரதமரான பிறகுதான் பண்டித நேரு முதன் முதலில் அமெரிக்கா சென்றார்.
‘‘எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையாளர்களிடம் மட்டும் கவனமாயிருங்கள்’’ என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள்.
அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு. எல்லாக் கேள்விகளும் ஓய்ந்த பிறகு கடைசியாகக் கேள்வி கேட்கிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் லிப்மேன்:
‘‘இந்தியப் பிரதமருக்கு அமெரிக்காவின் இரவு விடுதிக்குச் செல்லும் எண்ணம் உண்டா?’’
நேரு சிரித்துக் கொண்டே திருப்பிக் கேட்டார்.
‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா?’’
மறுநாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி:
‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா? இந்தியப் பிரதமர் ஆவல்’’
பத்திரிகையாளர்கள் பொல்லாதவர்கள்..
verey cood
echarikai marupeyyavargl
ar reporters
unmai elhuvadhai via poiil nattam ud
பிங்குபாக்: Vairamuthu Question & Answer – Incidents, Detractors | Snap Judgment