Pa Chidambaram’s Petrol Medicine – Maalan


Dinamani.com – Editorial Page :: மாலன்

கசப்பது மருந்தா? உண்மையா?

இந்திய அரசியல் கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய அநேக தருணங்களில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பல கட்சிகளின் – அநேகமாக எல்லாக் கட்சிகளின் – பொய் முகத்தை மட்டுமல்ல, அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதையும் ஒருசேரப் பகிரங்கப்படுத்திய நிகழ்வு அது. அந்த நாடகத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு “டாக்டர்’ பாத்திரம்.

“பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்து விடும்… எனவே கசப்பு மருந்தை மக்கள் கனிவோடு ஏற்க வேண்டும்” என்று “டாக்டர்’ சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

அவர் பேச்சைப் படிக்கிற எவருக்கும் ஏதோ நம் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே நொடித்துப் போய் நஷ்டத்தில் நடந்து கொண்டிருப்பதைப் போலவும், அவற்றின் மீது இந்தச் சுமையும் ஏறினால் அவை நொறுங்கிப் போய்விடும் என்பது போலவும் தோன்றும். ஆனால் உண்மை என்ன?

இந்த ஆண்டு (மார்ச் 31 அன்று முடிவடைந்த 2005-06 நிதி ஆண்டு) இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ள

  • ஈவுத் தொகை (டிவிடெண்ட்) 125 சதவீதம்.
  • ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • விற்பனை மதிப்பு ரூ. 1,83,204 கோடி
  • கடந்த ஆண்டை விட 21.6 சதவீதம் அதிகம்.

    லாபம், மத்திய அரசு கடனாக வழங்கிய 6,571 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்திய பிறகு, லாபத்தின் மீதான வரிகளைக் கழித்துக் கொண்டதற்குப் பிறகு கையில் மிஞ்சும் நிகர லாபம்.

    இந்தத் தகவல்கள் எல்லாம் இந்தியன் ஆயில் நிறுவனமே, பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்குப் பத்து நாள்களுக்கு முன் (மே 26ம் தேதி) அறிவித்தவை. இவற்றை இப்போதும் அதன் இணைய தளத்தில் காணலாம்.

    ஏதோ இந்த ஆண்டு மட்டும் அது லாபம் ஈட்டிவிடவில்லை. கடந்த ஐந்தாண்டுக் கணக்கை எடுத்துக் கொண்டால் ஒவ்வோர் ஆண்டும் அது லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபம் அளவில் அதிகரித்தும் வருகிறது.

  • 2000 – 01ல் அது ஈட்டிய லாபம் ரூ. 2,720 கோடி.
  • கடந்த ஆண்டு அது ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • 2000 – 01ல் அதன் வசம் இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 17,510 கோடி.
  • கடந்த நான்காண்டுகளில் ரூ. 6,000 கோடி அதிகரித்திருக்கிறது.
  • கடன் சுமார் ரூ. 3,000 கோடி குறைந்திருக்கிறது.

    கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அதிகரித்து இருக்கிறது (Debt Service ratio குறைந்திருக்கிறது). இப்போது அதன் வசம் உள்ள “ரிசர்வ்’ ரூ. 28,134 கோடி.

    உலகின் பெரிய 500 நிறுவனங்களில் (Fortune 500) 170-ம் இடத்தில் உள்ள நிறுவனம் இந்தியன் ஆயில். உலகில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் 18-வது பெரிய நிறுவனம். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனம்.

    இவ்வளவு ஆரோக்கியமான நிறுவனத்தால், ரூ. 28 ஆயிரம் கோடிக்கு மேல் கையிருப்பு (ரிசர்வ்) உள்ள, 125 சதவீதம் டிவிடெண்ட் அறிவிக்கிற, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிற நிறுவனத்தால் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாது! இந்த உயர்வு இல்லாவிட்டால் அது நசிந்துவிடும்! எனவே இந்த நிறுவனத்தை விடப் பலமடங்கு நிதி ஆதாரம் குன்றிய மக்கள், மாதச் சம்பளம் வாங்குகிற மக்கள், ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளர்கள், இந்த விலை உயர்வையும், இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான விலை உயர்வுகளையும் ஏற்க வேண்டும் என்கிறார் அமைச்சர்!

    அமைச்சர் தனது பேச்சில் தெரிவித்திருக்கும் இன்னொரு விஷயம், இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பேரல் 23 டாலராக இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது 69 டாலராக, உயர்ந்து விட்டது என்பதாகும்.

    மத்திய அரசு அதன் தீர்வைகளை இறக்குமதி செய்யப்படும் விலையின் அடிப்படையில்தான், இத்தனை சதவீதம் எனக் கணக்கிட்டு வசூலிக்கிறது. ஒரு பொருள் இந்தியாவில் வந்திறங்கும் போது அதன் விலை 100 ரூபாய்; தீர்வை 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் அப்போது அரசுக்குக் கிடைப்பது 30 ரூபாய். அதே பொருள் விலை உயர்ந்து 300 ரூபாய் ஆகும் போது, அரசுக்குக் கிடைக்கும் தீர்வை 90 ரூபாய். கூடுதலாகக் கிடைக்கும் இந்தத் தொகையைப் பெற அரசுக்குக் கூடுதல் செலவு ஏதும் இல்லை. அதே அதிகாரிகள், அதே அமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம். கூடுதல் செலவு இல்லாத நிலையில் கிடைக்கும் இந்த வருவாய் உபரி வருவாய். இன்னும் சொல்லப்போனால் எதிர்பாராமல் கிடைக்கும் வருவாய்.

    இதைக் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் நலிவைச் சமாளிக்க முடியும். வேறு சில விதங்களிலும் அரசு இந்த “நலிவை’ எதிர்கொள்ள முடியும்.

    மத்திய அரசு தனது இறக்குமதித் தீர்வைகளைக் குறைத்துக் கொண்டும், நான்கு சக்கர வாகனங்கள் மீதான தீர்வையை அதிகரித்தும், அவற்றின் விலையில் ஒரு சதவீதத்தை “செஸ்’ ஆக (இப்போது கல்வி செஸ் வசூலிக்கப்படுவது போல) வசூலித்தும், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், கையிருப்பு (ரிசர்வ்) இவற்றின் மூலமும் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நலிவு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்தும் அரசும் அமைச்சர்களும், விலை உயர்வு இல்லை என்ற நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற கணக்கை வெளியிட முன் வருவார்களா?

    கசப்பது மருந்தா? உண்மையா?
    கசக்கும் மருந்துகள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சில காய்ச்சல்கள் ஏற்படும்போது, இனிப்புக்கூடக் கசக்கும் என்பதும்! நமது அரசு இப்போது தாராளமயமாக்கல் பொருளாதாரம் என்ற ஒரு விஷக் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறது. அதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே கசக்க ஆரம்பித்திருக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்களின் நலன்களைக் காக்க மக்கள் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோருகிறார். அவை நம் (மக்களின்) நிறுவனங்கள். எனவே அவற்றைக் காக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுமானால் மக்கள் நிச்சயம் “தியாகம்’ செய்ய முன் வருவார்கள். மக்களின் தேசப்பற்று இன்றுள்ள எந்த அமைச்சரின் நாட்டுப்பற்றுக்கும் குறைவானதல்ல.

    ஆனால் இன்று மக்களுக்கு மருந்து கொடுக்கும் அமைச்சர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பேண முற்படுகிறார்களா? அல்லது அவற்றை காவு கொடுக்க முற்படுகிறார்களா? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை நம் நவரத்தின நிறுவனங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று அமைச்சர்களால் உறுதி அளிக்க முடியுமா?

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.