ஈழத் துயரம்!
அனுராதபுரம் கண்ணிவெடி கொடூரத்துக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் விடுதலைப் புலிகள். சின்ன குழந்தைகூட இதை நம்பாது! புலிகள் தலைவர் பிரபாகரன், தமது வன்முறைப் போக்கை உறுத்தலின்றி ஒப்புக் கொண்டவர். பத்திரிகையாளர் கூட்டம் கூட்டியே பிரகடனப்படுத்தியவர்.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு, புலிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? ஒரு பாவமும் அறியாத பொது மக்கள் பலியாகிறபோது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் வேதனையான விஷயம், இலங்கை ராணுவமும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைப்பதாக வெளிவரும் செய்திகள்! எனினும், இப்பழிவாங்கும் உணர்வு, புலிகளின் முதல் தூண்டுதலாலும் மூடப் பிடிவாதத்தினாலும் விளைவதுதான் என்பதை மறுக்க முடியாது.
எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், புலிகள் தங்கள் வறட்டுப் பிடிவாத நிலையிலிருந்து இறங்கத் தயாராயில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. அல்லது தோல்வியுற்றன.
பேச்சுவார்த்தை காலகட்டத்தை ஒரு சாதகமான இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தாங்கள் இழந்த இடத்தை மீட்டார்கள்; அல்லது புதிய தாக்குதல்களை நடத்த தங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.
இலங்கையில் அமைதி திரும்ப பாடுபட்ட நார்வே அமைதிக் குழுவே வெறுத்துப் போய்விடும் அளவுக்கு, புலிகளின் இந்த நாடகம் தொடர்ந்து, சமீபத்திய அனுராதபுர கொடூர நிகழ்வில் ஓர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.
ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களின் துயர் பெருகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள் பாதுகாப்பின்றித் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில், இலங்கை அகதிகள் வரவு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வேறு பல சிக்கல்கள் விளையும்.
ஐரோப்பிய யூனியன் நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கிட்டிய, அல்லது பலவந்தமாக வசூலிக்கப்பட்ட பொருளாதார உதவி (வரி?!) பெறப்படுவது கடினமாகியிருக்கிறது. இயலாமை, புலிகளின் கோபத்தைத் தூண்டி மேலும் வன்முறையில் ஈடுபடச் செய்யும். அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் நிலை பலவீனப்படவும் செய்யும்.
இத்தருணத்தை, இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற தோழமை நாடுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி செய்வது நல்லது.
ஆனால், தமிழகத்து அரசியல் கட்சிகள் சில, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபோல் மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் உட்புகுந்து செயலாற்ற முடியாது.
இலங்கை மக்களின் துயரைப் போக்குங்கள் என்று இலங்கை அரசுக்கு மற்றொரு தீர்மானம் மூலம் அறிவுறுத்துவதால் மட்டுமே பிரச்னை எவ்வாறு தீரும்? பிரச்னையின் முளையும் வேரும் விடுதலைப் புலிகள்தான் என்னும்போது, இந்திய அரசு செய்யக் கூடியது என்ன? ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? அது இயலாத காரியம்.
ஆனால் தமிழகத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளும் அதன் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் என்று அறியப்பட்டவர்கள். இந்தத் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களை இலங்கை அரசுடன் முறையான பேச்சு வார்த்தைக்கு அழைப்பதுடன், தனி தமிழ் ஈழ பிடிவாதத்தைக் கைவிடும்படியும் வலியுறுத்த வேண்டும். கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழர்களின் துயர் தீர்க்க இவர்கள் தான் பாடுபட வேண்டும். மத்திய அரசும் இவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, மேம்போக்காக தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றுவதில் ஒரு பிரயோஜனமுமில்லை.












