Chat Meet – Chokkan


விகடனில் வல்லினம்… மெல்லினம்… இடையினம் என்று தற்கால கணினியாதிக்கத்தை நுட்பமாக எழுதுபவர். தினம் ஒரு கவிதை தொடங்கி விகடன் தொடர் வரை எது எடுத்துக் கொண்டாலும் சிரத்தையும் உழைப்பும் பளிச்சிடும். சொக்கனுடன் மின்னஞ்சல் பேட்டி:

1. அயோத்தி, வீரப்பன், ஹமாஸ், ருஷ்டி என்று பிரச்சினையை புத்தகமாக்கி சுமக்கிறீர்களே… சுவாரசியமாய் இருக்கிறாய்;பயமாய் இருக்கிறது? என்பது போல் மிரட்டல் ஏதாவது?

கதையல்லாத படைப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறவர்கள் எல்லோருக்கும், இந்தப் பிரச்னை ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்தே தீரும் என்று நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை, எந்தப் பிரச்னையிலும் சார்பு நிலை எடுக்காமல் எழுதுவதில் கவனமாக இருக்கிறேன். ஆகவே, இருதரப்பு வாதங்களையும் (சில சமயங்களில் ஊகங்களையும்கூட) தெளிவாக, நேர்மையாக முன்வைத்துவிடுவதால், அயோத்திபோன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளைக்கூட, முழுமையாகவும் நடுநிலைமையோடும் பதிவு செய்வது சாத்தியமாக இருக்கிறது.

மற்றபடி, படைப்பாளிபற்றிய முன்முடிவுகளோடு படைப்புகளை அணுகுகிறவர்கள் சிலர் எப்போதும் இருக்கிறார்கள். அதுபற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை, செய்வதற்கில்லை.

2. இருபது, முப்பது வருடம் முன்புவரை பிரபலமான தமிழ் எழுத்தாளர் என்றால் நாவல் / சிறுகதை எழுதுபவர். இன்று இது மாறி இருக்கிறதா? உங்களை எப்படி இந்த காலச்சக்கரம் பாதித்திருக்கிறது?

புனைவு, அபுனைவு ஆகிய இருவகைகளிலுமே எழுத்தாளரின் முக்கியத்துவம் குறைந்து, படைப்புக்கு அதிக கவனம் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

அதாவது, இதற்குமேல் ‘என்னுடைய ரீடர்ஸ்’ என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் வரமுடியும் என்று தோன்றவில்லை. படைப்பில் தரம் இல்லாவிட்டால், எத்தனை பெரிய எழுத்தாளராக இருந்தாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகிற சாத்தியங்கள்தான் அதிகமாகத் தெரிகின்றன. இது ஆரோக்கியமான முன்னேற்றம்தான்.

நாவல் / சிறுகதைகளைப் பொறுத்தவரை அவற்றைக் கதைகளாகப் படித்து ரசித்துக்கொண்டிருந்த பெரும்பான்மையினர், இப்போது அதேமாதிரியான, சொல்லப்போனால் இன்னும் அதிகத் திருப்பங்களோடு கூடிய சம்பவங்கள், புனைவுக் காட்சிகளைத் தொலைக்காட்சிவழியே பார்த்துவிடுகிறார்கள். அநேகமாக எல்லாப் பிரபல இதழ்களும் புனைவு சார்ந்த படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டதை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

ஆகவே, சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத, மொழியழகில் கவனம் ஈர்க்கும் புனைவுப் படைப்புகளுக்குதான் இனி வரவேற்பு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

3. ஒரு புத்தகம் எழுத எத்தனை நாள்/நேரம் ஆகிறது? வீட்டையும் வேலையையும் வாசகனையும் எப்படி மேய்க்கறீர்கள்? முழு நேர புத்தக ஆசிரியராகக் காலந்தள்ள முடியுமா?

புத்தகம் எழுதுவதற்கான கால அளவு, முழுக்க முழுக்க, நாம் எடுத்துக்கொள்ளும் தலைப்பைப் பொறுத்ததுதான். ஒரு வாரத்தில் எழுதியதும் உண்டு, மாதக்கணக்கில் நீட்டி முழக்கியதும் உண்டு.

நேர நிர்வாகம்மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, வாசகன் ஆகிய மூன்றையும் கட்டி மேய்ப்பது அப்படியொன்றும் சிரமமில்லை. காலம்காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்துவருகிற காரியம்தானே ஸ்வாமி? 🙂

முழு நேர எழுத்தாளராக இருப்பது சாத்தியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துணிந்து ஆற்றில் இறங்கிப் பார்க்காதவரை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை, இந்தக் கேள்வியைமட்டும், தகுதியுள்ள இன்னொருவரிடம் ரீடைரக்ட் செய்துவிடுங்கள்!

4. புத்தகம் வெளிவந்ததின் ஆய பயன், ‘the special moment’ என்று எந்த தருணத்தை சொல்வீர்கள்?

அபூர்வமாகக் கிடைக்கும் சில வாசகர் கடிதங்கள்!

காரணம், வீடுமுழுதும் சமையலறைதவிர எல்லா இடங்களிலும் புத்தகங்களை நிரப்பிவைத்திருக்கும் நான், எந்த எழுத்தாளருக்கும் வாசகர் கடிதம் எழுதியதில்லை. காரணம், புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே அந்த எழுத்தாளருக்குச் செய்யும் கௌரவம் என்று நினைக்கிற படுசோம்பேறி நான்.

அப்படியிருக்கையில், என்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒருவர் நேரம் செலவழித்துக் கடிதமோ, மின்னஞ்சலோ எழுதுகிறார் என்று நினைக்கையில், நிஜமாகவே மெய்சிலிர்க்கிறது.

5. விரும்புவதை எழுதுவதற்கு நூல்கள்; வாசகனின் விருப்பத்திற்கு வளைவதற்கு பத்திரிகைத் தொடர்கள் – ஸ்டேட்மண்ட் சரியா…?

பத்திரிகைத் தொடர்களில் எல்லாவிதமான விஷயங்களையும் எழுதமுடிவதில்லை என்பது உண்மைதான். அதோடு ஒப்பிடுகையில், நேரடிப் புத்தகங்களில் கனமான தலைப்புகளைக் கையாளமுடிகிறது.

ஆனால், புத்தகங்களை, அவை பேசும் தலைப்புகளுக்காகவே காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பத்திரிகைத் தொடர்களின் விஷயம் அப்படியில்லை. எல்லாவிதமானவர்களுக்கும் பொருந்தும்படியாக எழுதவேண்டியிருக்கிறது, கலகலப்பான உதாரணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், துணுக்குச் செய்திகளில் கவனம் கவரவேண்டியிருக்கிறது. அதேசமயம், தகவல் ஒழுங்கு சிதறிவிடாமலும் சொல்ல வந்த விஷயம் நீர்த்துப்போய்விடாதபடியும் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இப்படி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தாலும், பத்திரிகைத் தொடர்களின் வீச்சு அதிகம் என்பதால், No Complaints!

***

என். சொக்கன்
20 06 2006


| |

4 responses to “Chat Meet – Chokkan

  1. அருமையான சொக்கன் ஸ்டைல் பதிலகள்.

    எளிமை + தெளிவு + சுவாரஸ்யம்.

    // அதாவது, இதற்கு மேல்
    ‘என்னுடைய ரீடர்ஸ்’

    உங்களுக்கு நிச்சயம் இப்படி ஒரு கூட்டம் சேரும். அன்பால சேரப்போகும் கூட்டம்.

    // முழு நேர எழுத்தாளராக இருப்பது சாத்தியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துணிந்து ஆற்றில் இறங்கிப் பார்க்காதவரை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை, இந்தக் கேள்வியைமட்டும், தகுதியுள்ள இன்னொருவரிடம் ரீடைரக்ட் செய்துவிடுங்கள்!

    நீங்கள் தற்போது செய்யும் முறையே சிறந்த வழி என்று தோன்றுகிறது.

    முழு நேர எழுத்தாளர்களாக வெற்றி இப்போது தான் தொடங்கியுள்ளது.

    எஸ்.ரா,பாரா போன்றோர்கள்.

    கணிணி வேலை வீட்டை கவனிக்க. வீடு நிம்மதியாக இருந்தாலே கதை / புத்தகம் எழுத கற்பனையும், வீட்டில் ஒத்துழைப்பும் தானாய் கிடைக்கும்.

    என் கணிப்பில் பிற்காலத்தில் நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவராய் வருவீர்கள்.

    போஸ்டன் பாலா : கேள்விகளில் குசும்பே இல்லையே.. உடம்பு சரியில்லையா ?

  2. இந்த வாரம் (கேள்வி) கேட்டு (பதில்) வாங்கி (பதிவில்) போட்ட அனைத்து நேர்முகங்களுமே அருமையாக இருந்தன. உங்கள் உழைப்பிற்கு நன்றிகள் பல.

  3. ஸ்ரீகாந்த், அழைத்தவுடன் ஒப்புக்கொண்டு, பதில்களை மின்மடல் செய்த அனைவருக்கும் நம் நன்றிகள் 🙂

    —என் கணிப்பில் பிற்காலத்தில் நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவராய் வருவீர்கள்.—-

    மிகச் சரியான கணிப்பு. சொந்தப் பெயரிலேயே சொல்லியிருக்கலாம்.

    —உடம்பு சரியில்லையா —

    அடப்பாவீகளா… எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? :-))

  4. போஸ்டன் பாலா : கேள்விகளில் குசும்பே இல்லையே.. உடம்பு சரியில்லையா ?

    If you are always so ‘abnormal’ people think something is wrong with you if you are normal’ sometimes 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.