அல் ஜர்காவி இறந்ததை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் ‘ஆஹா… ஓஹோ… பலே… பேஷ்… அமர்க்களம்.. என்ன சாதனை… வாவ்… சூப்பர்… நீட்… அது! அப்படி போடு… போட்டுத் தாக்கு… தல!! கலக்கல்… அடுத்து ஒஸாமாதான்… வெற்றி… நொறுக்கிட்டீங்க… பிச்சுட்டீங்க!!!‘ என்று மிதமாகப் பாராட்டும் சமயத்தில் பா. ராகவனின் ‘குமுதம் ரிப்போர்ட்டர்‘ மாயவலை கட்டுரையில் இருந்து:
அல் காயிதாவின் ஈராக் பிரிவு தளபதி அபூ மூசாக் அல் ஜர்காவி (Abu Musab al – zarqawi) அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்கிற செய்தியால் கடந்த வியாழக்கிழமை செய்திப் பத்திரிகைகள் சாபல்யமடைந்தன. (பலபேர் ஜர்காவியை ஜவாஹிரியுடன் போட்டுக் குழப்பிக்கொண்டு, அல் காயிதாவின் முதன்மைத் தளபதியைச் சுட்டுவிட்டார்கள் என்று அலறினார்கள்!)
மீடியா இத்தனை உரக்கப் பேசுமளவுக்கு ஜர்காவி ஒன்றும் ரொம்பப் பெரிய ஆள் இல்லை. மிகவும் சாதாரணமான லோக்கல் ரவுடிதான். 2004ம் ஆண்டு வரை அவன் பெயர் யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள் ஒசாமா பின்லேடனுக்கே தெரியாது! Tawhid என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி ஈராக்கில் குண்டுபோட்டுக்கொண்டிருந்தவன். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபிறகு ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கலவரங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தபடியால் உள்ளூரில் கொஞ்சம் பிரபலமானான்.
ஈராக்கில் அமெரிக்கப் படையின் ஆட்சிதான் உண்மையில் நடக்கிறது என்கிறபடியால் அல் காயிதாவால் நேரடியாக அங்கே எந்தத் திருவிளையாடலையும் நிகழ்த்தமுடியாத சூழ்நிலை. ஆகவே ஜர்காவியை வாடகைக்கு எடுத்தார்கள். சொல்லிக்கொள்ளும்படி அல் காயிதாவுக்கு இப்போது ஈராக்கில் ஒரு நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் ஜர்காவியையும் அவனது அடியாள்களையுமே on behalf of al qaeda வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். இதனடிப்படையில்தான் ஜர்காவியை அல் காயிதாவின் ஈராக் தளபதி என்று மீடியா சொல்கிறது.
ஆனால் ஜர்காவிக்கு அல் காயிதாவின் தொடர்பும் தரவும் கிடைத்தபிறகு நிறைய நாசவேலைகளைக் குறுகிய காலத்தில் செய்தான் என்பதை மறுக்கமுடியாது. ஜோர்டனிலும் ஈராக்கிலும் பணியாற்றிக்கொண்ட பல பெரிய அமெரிக்க அதிகாரிகளைத் தீர்த்துக்கட்டியது இவனது திருப்பணிகளில் முதன்மையானது. ஈராக்கில் மட்டும் எழுநூறு பேரைப் படுகொலை செய்ததில் ஜர்காவியின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நவம்பர் 2005ல் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் குண்டு வெடித்துப் பலபேர் இறந்த சம்பவம் நினைவிருக்கிறதா? அது ஜர்காவியின் காரியம்தான். ஜோர்டன் நீதிமன்றம் ஜர்காவிக்கு பதினைந்து வருட சிறைத்தண்டனை எல்லாம் விதித்து உள்ளே தள்ளியது. தப்பித்து எப்படி வெளியே வந்தான் என்பதை அவனே ஒரு வாழ்க்கை வரலாறு எழுதியிருந்தால்தான் தெரிந்துகொண்டிருக்க முடியும்!
ஆகவே…..?!






















