தேர்தல் பத்து
தமிழகத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, அமைச்சரவை ஆருடங்களும் தொடங்கிவிட்ட தேர்தல் குறித்து எனக்கு மனதில் உதித்து எழுத்தில் வெளியான பத்து பிட்ஸ்.
- கடைசி நாளன்று இட்லி-வடை இன்னும் சிறப்பாக செய்திகளைத் தொகுத்திருக்கலாம். காலையில் எழுந்தவுடன் முடிவுகளை அறிய ‘வலைப்பதிவுகளை மட்டுமே நம்புவது’ என்று மேய்ந்ததில் தமிழ்மணம் தேர்தல் 2006 சிறப்பு பக்கம் மட்டுமே மேலோட்டமாய் அம்சமாகப் பட்டது.
- வழக்கமான ஊடகங்களை சாம்பார் மாஃபியா மூலம் சென்று, அலுவல் கிளம்பும் அவசரத்திலும் விடைகளைப் பெற முடிந்தது. மிகத் தெளிவான இடைமுகமாக ஐ.பி.என்.னும், அரிதான செய்திகளை சிஃபி.காமும் கொடுத்தது.
- கட்சி நிலைப்பாடுள்ளவர்கள் தங்கள் வேட்பாளர் நிலவரம் குறித்து தொடர்ந்து இற்றைப்படுத்தி இருக்கலாம். உடனடி அரட்டையாக ‘கேள்வி-பதில்’ போன்ற வசதியும் வலைப்பதிவுகளில் நிகழ்ந்திருந்தால் இணையத்துக்கே உரிய அன்னியோன்யம் கைவசமாகியிருக்கும். (நான் கேட்க நினைத்த கேள்வி: மயிலாடுதுறையில் விஜய டி ராஜேந்தர் எத்தனை ஓட்டுகள்? தளி (அல்லது) இந்தியன் எக்ஸ்பிரசில் தவறாய் சொன்னது போல் அவினாசியில் வென்ற சுயேச்சை யார்… எப்படி வென்றார்?)
- பொறுமையாக குளம்பி அருந்திக் கொண்டு, காலை சந்திப்புக் கடன்களை முடித்துவிட்டு மேய்ந்ததில், பரவலான கவரேஜுக்கு மாலை மலரும், லே-அவுட் மற்றும் புள்ளி விவரங்களுக்கு சிஃபியும், தமிழ் முரசு-ம், வரைபடங்களுடன் துல்லியமான தகவலுக்கு தேர்தல் ஆணையமும் பயன்பட்டது.
- சாதி, இன அரசியல் செய்யாமல் வெல்ல முடியும் என்று நிரூபித்த விஜய்காந்த்தை நினத்தால் சந்தோஷமாக இருக்கிறது, திராவிட கலாசாரத்தில் ஊறித்தான் திராவிட நாட்டில் வெல்ல முடியும் என்பது போல், பெரிய கட்சிகளைப் போலவே நடந்து கொண்டாலும் கருணாநிதிக்குப் பிறகு தோன்றப்போகும் வெற்றிடத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். வைகோ மாதிரி ஆகி விடுவாரா அல்லது இன்னொரு பாக்யராஜா/டி. ராஜேந்தரா என்பது காலத்திற்கே வெளிச்சம்.
- இலவசம், பந்தா பொதுக்கூட்டம், சுடு மொழி, மகிழுந்து பவனி என்று திராவிட அரசியலின் சின்னங்களைக் கடைபிடிக்காமலும் லோக் பரித்ராண் மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பது மேலும் மகிழ்ச்சியை அளித்த நிகழ்வு.
- சன் டிவி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும். டாடாவை மிரட்டினால் என்ன… விகடனை வாங்கினால் என்ன… அரட்டை அரங்கத்திற்கு பாக்யராஜ் மாறினால் என்ன… நிச்சயம் லாபகரமாக செயல்படும்.
- கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் கூட தேர்தல் நடந்திருக்கு போல 😉
- ஜெயலலிதா இரண்டு தொகுதியில் போட்டியிடாதது போல சோனியா போன்ற தியாகிகள் மீண்டும் மீண்டும் ராஜினாமா செய்து… மீண்டும் மீண்டும் தேர்தல்களில் நின்று… மீண்டும் மீண்டும் ப்ரியங்காவும் ராகுலும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து… மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் காலம் என்று விடியுமோ?
- 10 ஸ்போர்ட்ஸ் பார்க்க கிடைக்காத அதிருப்தி வாக்குகளில் நிறைய சதவீதம் லோக் பரித்ரானுக்கும், Anti-incumbency வாக்கு மட்டுமே தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துக்கும் கிடைத்திருக்காது என்று நம்புகிறேன்!










