1. கலர் டிவியும், கம்ப்யூட்டரும் கவருமா மக்களை?
இந்தத் தேர்தலுக்கு மல்லு கட்டியுள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் பலப் பல “பளபள’ அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தி.மு.க., சார்பில் இலவச கலர் “டிவி’ கவர்ச்சிகரமான அறிவிப்பாக உள்ளது. அ.தி.மு.க.,வில் மிகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அறிவிப்பு தான் மிகக் கவர்ச்சியாக உள்ளது. பொழுதுபோக்கு, படிப்பு என்ற இரு தேவைகளில் எதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது வரும் 11ம் தேதி தெரிந்துவிடும். இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின், பிரசாரங்களின் “ஹைலைட்ஸ்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா :
ஜெயலலிதா பிரசாரத்தில் மக்களிடையே பேசிய விவரம் வருமாறு:
* ரேஷனில் அரிசியை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசம்.
* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேலை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.
* மாநில அரசின் வருவாயை பயன்படுத்தி, விவசாய கூட்டுறவு கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
* நெசவாளர் நலன் காக்க பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
* பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படும்.
* பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும்.
* இரண்டாயிரத்து 900 கோடி ரூபாயில் இரண்டு நீர்வள ஆதார திட்டம் அமைக்கப்படும்.
* உழவர் பாதுகாப்பு திட்டம் போல மீனவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
* தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த தொழிற்சாலைகளிலும் சமூக விரோதிகள், ரவுடிகள் பண வசூலில் இறங்கியது இல்லை.
* தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
* வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம்/ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தை எதிர்த்து சாலை மறியல், துப்பாக்கிச் சூடு போன்ற கலவரம் ஏற்பட்டதுண்டு. பஸ் எரிப்பு சம்பவங்களும் நடந்ததுண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை.
* சுனாமி ஏற்பட்டதும் தமிழக அரசின் பணியை உலக நாடுகளே பாராட்டின.
* மழையால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், தமிழக அரசின் மீட்புப் பணிகள் வேகமாக நடந்ததை மக்களே அறிவார்கள்.
* பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம் வழங்கியது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
* சென்னையில் மக்கள் குடிநீருக்காக குடத்தை எடுத்துக் கொண்டு அலைவது தடுத்து நிறுத்தப்பட்டது எங்கள் ஆட்சியில் தான். வீராணம் குடிநீர் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் நிறைவேற்றி, சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்த்தது எங்கள் ஆட்சியில் தான்.
* பல்வேறு தொழில்நுட்ப பூங்காக்கள் இந்த ஆட்சியில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஐந்து ஆண்டில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
* சென்னையில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியே விடுதிகள் கட்டப்படும்.
* சென்னைக்கு அருகில் இரண்டு சேட்டிலைட் நகரங்கள் அமைக்கப்படும். இதனால் பல தொழிற்சாலைகள் உருவாகும்.
* சென்னைக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைவது போல, மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
* அ.தி.மு.க., ஆட்சியில் தான் தொழிலதிபர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வளர முடியும். நேரடி வேலை வாய்ப்பும், மறைமுக வேலை வாய்ப்பும் பல லட்சம் பேருக்கு கிடைக்க இந்த ஆட்சி பாடுபடும்.
* ஏழைகளுக்கு இலவச நிலம் தருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வதாக உள்ளது.
* சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் திட்டத்தை ஒழிப்போம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு தனது பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரசாரத்தில் இதுவரை கூறியது என்ன? அதன் விவரம் வருமாறு:
* ஜெயலலிதா தினந்தோறும் கற்பனையான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார்.
* எங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கதாநாயகன் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருக்க வேண்டும். அந்த வில்லன் ஜெயலலிதா தான்.
* இந்திய வரலாற்றில் மாநிலத்திலிருந்து 13 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றதே சாதனை தான்.
* வியாபாரிகளின் நலனுக்காக “மறுவிற்பனை’ வரியை ரத்து செய்தது தி.மு.க., ஆட்சி தான்.
* அரிசி விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பு செய்திருப்பது ஏட்டிக்கு போட்டி.
* தனி ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ, எப்படி அமைந்தாலும் பரவாயில்லை. இந்த ஆட்சி ஒழிய வேண்டும்.
* தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் வாரம்தோறும் சத்துணவில் இரண்டு முட்டை வழங்கப்படும்.
* ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்க முடியுமா. இலவச டிவி தர முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும். முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது.
* கல்வி கட்டணத்தை கண்டிப்பாக குறைப்போம்.
* “தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்’ என்று ஜெயலலிதா அறிவித்தார். முதலைகள் மாநிலமாக மாற்றிவிட்டார்.
* மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்கள் திருமண நிதிஉதவி திட்டம் கொண்டுவரப்படும்.
* தாய்மார்கள் பொது அறிவு பெற கலர் “டிவி’ தருகிறோம்.
* “கலர் “டிவி’ கொடுப்பாய், கேபிள் இணைப்பு கொடுக்க முடியுமா என்று ஒருவன் கேட்கிறான். அவசியம் ஏற்பட்டால், அதையும் கொடுப்போம்.
* காஸ் ஸ்டவ் தருவோம்.
* விவசாயி இயற்கையாக மரணமடைந்தால், அவர் பெற்ற கூட்டுறவு கடனை ரத்து செய்வோம்.
* நிலமற்ற ஏழை விவசாய குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களை போல, இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துவோம்.
* கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்துவோம்.
* சென்னை நகரில் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மேலும் பாலங்கள் கட்டப்படும்.
* சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ளுவோம்.
* சுனாமி நிவாரண நிதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவோம்.
* மீண்டும் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவுவோம்.
* மீண்டும் சட்டசபை மேலவையை கொண்டு வர பாடுபடுவோம்.
* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வருவோம்.
* காலியாக உள்ள பணியிடங்களில் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.
* எதிர்முகாமில் இருப்பவர்கள், பிரபல நடிகர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் பேரம் பேசி, பிரசாரத்துக்கு அழைத்தனர். அவர் வரமறுத்துவிட்டார்.
* எங்கள் ஆட்சியில் ஜாதி கலவரங்கள் ஏற்பட, எதிர்க்கட்சிகள் தான் காரணம்.
இவ்வாறு அவர் பிரசாரம் செய்தார்.
2. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் தலைகீழ் திருப்பம்? அடுத்த காட்சி :: அணி மாற கட்சிகள் இப்போதே வியூகம் அமைப்பு –
கடந்த பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து பேசினார். காங்கிரஸ் தலைவர்களையும், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் கடுமையாக சாடினார். ஆனால், இந்த முறை முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது தனது ஆட்சியின் சாதனைகளை மட்டுமே எடுத்துக் கூறியுள்ளார். தி.மு.க.,வைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் ஜெயலலிதா பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.
டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் டாடா தரப்பில் இருந்து மறுப்பு வெளியாக வேண்டும் என்பது தி.மு.க.,வின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்காக எவ்வ ளவோ நெருக்கடி கொடுத்தும் காங்கிரஸ் தலைமை அதற்கு இசையவில்லை. இது தி.மு.க.,வுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மகாஜன் இறுதிச் சடங்கிற்கு தயாநிதி சென்ற விவகாரம் காங்கிரசிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.














