Vikadan on Mr. Voter


தேர்தல் குதிரைகள் :: மாண்புமிகு வேட்பாளர் – எஸ். உமாபதி (2004-இல் எழுதியது)

‘இவர் காரெக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!’ என்று ராஜதந்திரிகளான அரசியல் தலைவர்களே ஆதங்கப் படுகிறார்கள். ‘அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர் என்றெல்லாம் இவரை எடை போட முடியாது. ரொம்ப சாமர்த்தியசாலி. புத்திசாலித்தனமாக முடிவெடுப்பார். தப்பு செய்யும் அரசியல்வாதிகளைத் தன் கையிலிருக்கும் வோட்டு என்ற ஆயுதத்தால் கடுமையாகத் தண்டித்து, மண்ணைக் கவ்வ வைப்பார்’ என்று அரசியல் விமரிசகர்கள் அடிக்கடி இவரைப் பற்றி எழுதுவார்கள்.

சில அரசியல்வாதிகள் இந்த வாதத்தை அப்படியே அலட்சியப் படுத்திவிட்டு,

‘அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை… பட்டைச் சாராயத்தையும் பத்து ரூபாய் நோட்டையும் கொடுத்து இவரைச் சுலபமாக விலைக்கு வாங்கி விடலாம்’

என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் ரேஸிலும் எத்தனையோ குதிரைகள் ஓடினாலும் அதில் எந்தக் குதிரையை ஜெயிக்க வைப்பது, எதைத் திணறடிப்பது என்று தீர்மானிப்பது இவர்தான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. இந்தத் திருவிழாவில் இவர் தான் ராஜா.. ஒரு நாள் ராஜா!

இவரை அலட்சியப்படுத்திய, காத்திருக்கவைத்த, கண்டுகொள்ளாத பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் அந்தச் சமயத்தில் கூழைக்கும்பிடு போடுவார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இவர் நிற்பார். இவர் வாழ்த்துவாரா… வீழ்த்துவாரா எனப் புரியாமல் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் கும்பிடு தலைவர்கள்.

‘நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி’ என்பதால், இவர் ஆயுசு முழுக்க காங்கிரஸுக்கு விசுவாசமாக இருப்பார் என அந்தக் கட்சி நம்பியது. ஆனால், எமர்ஜென்ஸி கொடுமைகளை அனுபவித்த பிறகு, ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியைத் தோற்கடித்தது இவர் கொடுத்த பெரிய ‘ஷாக்’! ஒரு பிரதமரையே தோற்கடிக்கிற பயங்கரமான ஆசாமி இவர் என்பதை அப்போதுதான் உலகமே உணர்ந்தது.

இந்திராவைத் தோற்கடித்த இவர், அங்கு தேர்ந்தெடுத்தது ராஜ்நாராயண் என்ற அரசியல் ஜோக்கரை! இந்திராவைத் தோற்கடித்தது மிஸ்டர் வாக்காளர்தான் என்பதை உணராமல், தன் ‘பலத்தின்’மீது அபார நம்பிக்கை கொண்டு ராஜ்நாராயண் ஆடியபோது, அவரை அரசியலில் பெரிய குழிதோண்டிப் புதைத்து மீளவே முடியாமல் செய்தார்.

‘மேதாவித்தனம் பாதி… பாமரத்தன்மை பாதி.. கலந்து செய்த கலவை இவர்’ என்பது இவரது பயோடேட்டா. இதனாலோ என்னவோ இவர் பல சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்துவிட்டு லேட்டாக வருத்தப்படுவார். ஆனால், செய்த தவற்றை மறு தேர்தலிலேயே திருத்திக் கொள்வார். ராஜீவ் காந்திமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவரைத் தோற்கடித்த பெருமைக்குரியவர் இவர்தான். அப்புறம் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் அடித்துக்கொண்ட போது, தன் தவற்றை உணர்ந்து அடுத்த தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவரும் இவர்தான்!

ஆனால், இவரது பெரிய மைனஸ் பாயிண்டே அடிக்கடி பொங்குகிற அனுதாப உணர்வுதான். யாராவது தலைவர் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுபோல அவர் சார்ந்த கட்சிக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளி விடுவார். அந்த விஷயத்தில் கடல் அலை மாதிரி கண்ணீர் அலை கிளப்புவார்.

அடிக்கடி மாற்றங்களை விரும்புகிற டைப் இவர். அதனால் சமயங்களில் குயுக்தியாக யோசிப்பார். ‘நான் உங்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கேன். எனக்கு வோட்டுப் போடுங்க’ என்று யாராவது வந்து கேட்டால், ‘இவரே இவ்வளவு செய்திருக்காரே… இவரை எதிர்க்கறவரை ஜெயிக்கவெச்சா அவர் இன்னும் ரெண்டு மடங்கு செய்வாரோ?’ என யோசிப்பார். அதிலும் சிலசமயம் மோசம் போவார்!

ராம்விலாஸ் பாஸ்வான் ஒரு தடவை இவரைப் பற்றி வெறுத்துப்போய் அடித்த காமெண்ட் ரொம்ப பிரபலம். ‘அமைச்சராக இருந்து பல நன்மைகள் செய்தபோதும் ஜெயிக்க வெச்சாரு. எதிர்க்கட்சி எம்.பி.யா இருந்து ஒண்ணுமே செய்யாதபோதும் நாலு லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வெச்சு, என் பெயரை கின்னஸ் புக்கிலும் போட வெச்சாரு. இவரு என்ன நினைக்கிறார்ன்னே புரிஞ்சுக்க முடியலை.’

‘ராமன் ஆண்டால் என்ன… ராவணன் ஆண்டால் என்ன’ என்பது இவர் அடிக்கடி பாடும் பாட்டு. மிக நேர்மையான தலைவர்கள் இவரிடம் வந்தால்கூட, ‘போப்பா! நீயெல்லாம் அரசியலுக்கு வேஸ்ட்’ என தோற்கடித்து துரத்துபவர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கிரிமினல் சட்டத்தில் இருக்கிற எல்லா செக்ஷன்களிலும் சிக்கி சிறையிலிருக்கிற ஆசாமியை ஜெயிக்கவைப்பார்.

இந்தியாவில் ஒரு பொதுத்தேர்தலின் செலவு ஆயிரம் கோடிக்கு மேல். அரசியல் கட்சிகள் தேர்தலுக்குச் செலவழிப்பது அதைவிடப் பத்துமடங்கு அதிகமான பணம். பலருக்கு செலவு கட்டுப்படியாகவில்லை. ‘இவரை எப்படித் திருப்திப்படுத்துவது என்று தெரியவில்லையே. அது தெரிந்தால், அதை மட்டும் செய்துவிட்டு ஜெயித்துக்கொண்டே இருக்கலாமே’ என்று யோசிக் கிறார்கள். ‘கொஞ்சம் பர்ஸனல் டச்… கொஞ்சம் அன்பான பேச்சு… பெயர் சொல்லிக் கூப்பிடுகிற அளவு நெருக்கம் காட்டிவிட்டால் போதும்… இவரைக் கவிழ்த்து விடலாம்’ என்று தேர்ந்த தேர்தல் நிபுணர்கள் பலர் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம்கூட வேலைக்கு ஆகாது என்று நிரூபித்துவிட்டார் நம்ம ஆள்.

இப்போதும் அப்படித்தான்.. ‘ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே. இந்தியா ஒளிர்கிறது. உனக்காக நல்ல ரோடு போட்டாச்சு.உன் எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கு’ என்று சொல்லி பி.ஜே.பி. (அதிமுக?) இவரை வளைக்கப் பார்க்கிறது.

‘உனக்கு வேலையில்லை… சாப்பாடு இல்லை… எதிர்காலம் இல்லை… எல்லாத்தையும் நாங்க தர்றோம்’ என்கிறது காங்கிரஸ் (திமுக?).

இவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, மையமான ஒரு மர்மப் புன்னகையுடனே அலைகிறார். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாமல் ஆளாளுக்கு கருத்துக் கணிப்பு பூதக்கண்ணாடி வைத்து இவர் மனசைப் படிக்கப் பார்க்கிறார்கள்.

அது லேசில் பிடிபடுகிற விஷயமா என்ன?!

2 responses to “Vikadan on Mr. Voter

  1. இது செம காமெடி யா இருக்கு. இதுக்கு மேல என்ன சொன்னாலும், இது செம்ம காமெடி தலைவா. இவனுங்க போற நிலைமையை பார்த்த போர போக்குல, தலையில துண்டுதான்.

  2. Unknown's avatar நன்மனம்

    விகடனுக்கு ஒரு வேண்டுகோள். இந்த கட்டுரைய ஒரே ஒரு மாற்றம் செய்து((பி.ஜே.பி/அ.தி.மு.க/காங்கிரஸ்/தி.மு.க ஆகிய இடங்களை காலியாக வைத்து)) 2060ல இதையே ரீபப்ளிஷ் செய்ய வசதியாக archive செய்யவும். 2060ல் composing cost அதிகம் ஆனா கவலை கவலைஇல்லயே.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.