காசி – சில டிப்ஸ்
- காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் திடகாத்திரமான உடல்நிலை தேவை. கடைசி காலம் வரை காத்திருக்காமல், காலும் உடலும் ஒத்துழைக்கும் வயதிலேயே காசிக்கு விஸிட் அடிப்பது உங்களுக்கு நல்லது.
- விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாஷி கோவில்களுக்கான வழி, ஸ்கூட்டர்களுக்கு right of way கொடுக்கும் சந்து பொந்துகள் நிறைந்தது. ஆங்காங்கே எச்சில் துப்பல், மனித சாணம், மாடு போல் முட்டும் மனிதர்கள், மனிதர் போல் வழிவிடும் கூர்கொம்பு
மாடுகள் கொண்டவை. கொஞ்சம் அலங்காநல்லூர் அனுபவம் இருந்தால் உதவலாம்.
- ‘தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை‘ என்று சொல்லுமளவுக்கு வடமொழியை பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- கங்கையை அடைய உதவும் படிக்கட்டுகள் வழுக்கும். மற்றவர்களின் கையைப் பிடித்துக் குளிக்க உதவுவதற்குமுன் இன்னொருவரின் உதவியை நாடுவதற்கு கூச்சப்பட வேண்டாம்.
- வாரநாசியில் இருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாகவேக் கிளம்பும்
என்பதை அனுசரித்தே திட்டமிடுங்கள்.
- சென்னை விமான நிலைய ப்ரீ-பெய்ட் வாடகை வண்டிகளை நாடாமல், குடிமகன்களின் ரதமான ஆட்டோவைப் பிடியுங்கள்.
- விமானத்திற்கு செல்வதானால் சாப்பிடாமல் செல்லவும். ‘அந்நியன்‘ அம்பி இருவுள் வாயில் சாப்பாட்டுக்கு தண்டனைக் கொடுப்பார் என்னும் பயத்தாலோ என்னவோ… ஒரு மணி நேரப்பயணத்திற்குக் கூட அறுசுவை கொடுக்கிறார்கள். கூடவே சோமபானமும் கொடுத்தால் முக்தி கிட்டும்.
- ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று சீஸன். மகேஸ்வரி வேண்டுமானால் நனையலாம். ஆனால், கங்கைப் பெருக்கெடுத்து ஓடுவாள். கொசுறு துப்பு: கறந்த பாலை கங்கையில் கொட்டினால் வெள்ளம் வடிந்துவிடும்.
- விடியற்காலையில் சாரநாத் புத்தாவைப் பார்ப்பது நிம்மதியைக் கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏபடுத்தி விடலாம்.
- கயாவில் எச்சரிக்கையாக உடைமைகளைப் பாதுகாக்கவும். பீஹாரில் பொதுவுடைமைக் கொள்கை தீவிரமாக இருப்பதால், ‘பர்ஸ் கயா‘ என்று விட்டுவிடலாம்.
- வெளிநாட்டவராக அல்லாமல், திரிவேணி சங்கமம் வரை சென்றுவிட்டு, தலையில் மட்டும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு படகில் இருந்தே படம் பிடித்துக் கொண்டிருந்தால், விநோத ஜந்துவைப் பார்ப்பது போல் விமர்சிக்கப்படுவீர்கள்.
- திராவிடத் திருநாட்டில் வளர்ந்ததால், வயோதிகர்களுக்கு இருக்கை தராமலோ, முண்டியடித்து தரிசனம் செல்ல முயன்றாலோ, அரிதாகிப் போய்விட்ட உகந்தப் பழக்கவழக்கங்களிலும் குட் மேனர்ஸ்களிலும் பாடம் எடுக்கப்படும்.
- பணம் கறப்பதற்காகவே ‘இராமர் ஆலயம்’ கடைகளாக விரிக்கப்பட்டிருக்கும். முக்கிய கோவில்களின் பிரகாரங்களிலும் வழிபாதைகளிலும் நூதனப் பிச்சையாக காசிகயிறு கட்டுவது, நெற்றிச்சாந்து இடுவது, முதுகில் தட்டி அருள்பாலிப்பது, பூச்சூட்டுவது நடைபெறும்.
- தங்களின் இரக்கத்தை உழைப்பாளிகளும், தொணதொணப்பிற்கு சுணங்குவதைப் பிச்சைக்காரர்களும், கடவுள் அலட்சியத்தை வியாபாரிகளும், உடல் பருமனை ரிக்சாக்காரர்களும், தெய்வ அவமதிப்பாக எண்ணவைக்கலாம்.












