அதிமுகவின் பரம்பரை எதிரியான திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் காலங்களில் தேர்தல் களத்தில் திமுகவை சந்திக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கோரி 11,420 விண்ணப்பங்கள் வந்தன. இத்தனை விண்ணப்பங்கள் வந்தும் கூட என்னையும் சேர்த்து 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.
அதிமுக வரலாற்றிலேயே அதிக தொகுதிகளில் முதல் முறையாக தற்போது போட்டியிடுகிறோம். இருப்பினும் 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.
இதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தகுதி அற்றவர்கள் எனக் கூறி விட முடியாது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் தகுதி படைத்த பலர் இருந்தாலும் கூட ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும். எனவே மற்றவர்கள் மனம் வருந்தக் கூடாது, மனம் தளரக் கூடாது.
வருகிற தேர்தலில் போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான். அதிமுகவின் பரம்பரை எதிரி திமுக மட்டுமே. அரசியல் ரீதியாக நாங்கள் எதிரியாகப் பார்ப்பது திமுகவை மட்டுமே.
எனவே பரம்பரை எதிரியான திமுகவை, அதிமுக கடைசியாக சந்திக்கும் தேர்தல் இதுதான். வருகிற தேர்தல்களில் பரம்பரை எதிரியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.
வரும் தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் ஆதரவுடன், 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அதிமுக தேர்தல் அறிக்கை: ஜெயலலிதா வெளியிட்டார்
5லட்சம் பேருக்கு வேலை
அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவோம் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை பெருநகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி செலவில் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் தொழில்வளத்தை மேம் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கை 114 பக்கங்களை கொண்டுள்ளது. 38 அம்சங்களை கொண்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக அரசு செய்துள்ள சாதனைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பள்ளிகளில் வசூலிக்கப்படும் சிறப்பு கல்விக் கட்டணம் ரத்து செய்யப் பட்டு, அந்த தொகையை பள்ளிக் கூடங்களுக்கு அரசே மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுய தொழில் பயிற்சி அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வினை ரத்து செய்து இயற்றப் பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஐ.ஐ.டி.க்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். விளையாட்டுகளில் திறமையாக உள்ளவர்களை ஊக்குவிக்க மாவட்ட தலைநகரங்களில் அனைத்து வசதி களுடன் விளையாட்டு அகாடெமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப் படும். மத்திய அரசு மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட 19 தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வலியுறுத்தப்படும்.
இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே தொடர்பு மொழி என்ற கொள்கை உறுதிப்பட வேண்டும். மாநில அரசு அலுவலகங்கள், கீழ் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழ் முழு அளவில் பயன்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதப்படும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். சென்னை பெருநகர எல்லையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் திட்டம் செயல் படுத்தப்படும். இரண்டு புதிய பல் மருத்துவக் கல்லூரிகளும், 21 புதிய செவிலியர் கல்லூரிகளும் துவக்கப்படும்.
தமிழகத்தின் தொழில் வளத்தை மேல்மேலும் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு, அதிகார பிரதிநிதித்துவ அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் படி சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கச்சத்தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் மத்திய அரசு பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்மொழிக்காக வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்களின் படைப்புகள் போற்றி பாதுகாக்கப்படும்.
அயல்நாட்டு இந்திய வம்சாவளி தமிழர்களின் தொழில்முனைவோர் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப் படும். மத்திய அரசின் அரிசி கொள்முதல் விலையேற்றத்தையும், அரிசி அளவு குறைப்பையும் கடுமையாக எதிர்ப்பதுடன், தொடர்ந்து பொது விநியோக முறையில் அதே குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் அதிக அளவில் நியாய விலைக் கடைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வணிகர்களின் நலன் காக்க அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆட்சியில் தூய்மை; நிர்வாகத்தில் திறமையான, நேர்மையான அணுகுமுறை; நீதி, நிர்வாகத்தில் நடு நிலைமையும், புனித தன்மையும் மிக்க செயல்பாடுகள்; வளமும் வற்றாத நலமும் மிக்க வாழ்க்கைத் தரம்; அமைதியும், பாதுகாப்பும் மிக்க பொது வாழ்க்கை ஆகியவை அதிமுகவின் கோட்பாடுகள். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Courtesy: Maalaisudar
Thatstamil











எங்கேயோ எப்போதோ கேட்டது: அண்ணா காலத்தில் ஒரு தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று தம்பிமார்கள் எல்லாம் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், காமராசர் (அவரும் தோல்வி) தொகுதியில் மட்டும் ஆரவாரம் கூடாது என்று உத்தரவிட்டாராம் அண்ணா. அது அன்றைய தலைவர்களின் பண்பட்ட குணத்தையும், எதிரணியினரின் உணர்வுகளை மதிக்கும் பக்குவத்தையும் காண்பிக்கிறது.
இன்றைக்கு செல்வி.செ.செயலலிதா வின் ஒவ்வொரு நகர்வையும் மூர்க்கமாகத் தாக்கும் திரு.கருணாநிதியோ வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்பு சொன்னதுமே வெற்றி வெறியாக மாறி முழக்கமிடும் அம்மையாரோ அண்ணா, காமராசர் பேரைச் சொல்ல கூட தகுதி இருக்கிறதா என்று ஐயம் வருகிறது.
நாராயணன் சொல்வது போல இன்னொருமுறை இவர் ஆட்சிக் கட்டிலில் வந்தால் ஆட்சியாக இருக்காது, அனைவருக்கும் ஆப்பாகத்தானிருக்கும் – சந்தேகமில்லை, எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், குடும்ப அரசியலை உடும்புப் பிடியாக பிடித்திருக்கும் அவரைக் காட்டிலும் இவர் மேல் என்றே தமிழகம் முடிவெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் சொல்வது போல், ஆழ்கடலுக்கும் ஆவிக்கும் இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே இந்த தேர்தலில் தமிழனுக்கு குழப்பம்.
மூணாங்கட்டு அவிழ்க்கும் போது தெரியும், தமிழன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று.