Daily Archives: பிப்ரவரி 20, 2006

அரசியலில் நேர்மை

இமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என்று வைகோ முடிவு செய்து விட்டார் என தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறக் கூடும். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

வைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.

திமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.

அதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் மரியாதையை உயர்த்தும்.

வைகோவின் அறிக்கை

அரசியல் நாணயத்தையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி.மு.க., இந்த அரசியல் பண்பாட்டைப் பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலை அதிகமாகும்.

இதற்காக ஏற்றுக்கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைக் கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும் திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.

கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.

அரசியல் நாணயத்தையும் அரசியல் நாகரிகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம்தான் ம.தி.மு.க. என்பதைக் கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.

பொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தகச் சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ம.தி.மு.க., அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ ஜ.மு.கூ-வில் தொடர்கிறார்?

தி ஹிந்து

மதில்மேல் பூனையாகத் தொடரும் இந்த விவகாரத்தில் இன்று வைகோ தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்வதாகச் சொல்லியிருக்கிறார். கருணாநிதி இதை வரவேற்றிருக்கிறார்.

ராமதாஸ் இன்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் சஸ்பென்ஸ் தொடரும் என்றே நினைக்கிறேன்.

சொல்றாங்க சொல்றாங்க

1. திமுக கூட்டணியில்தான் வைகோ இருக்கிறார். – அன்புமணி

2. எதிர் அணியில் பேரம் பேசும் தந்திரத்தை மதிமுக கடைப்பிடிக்கிறது. – ஆர்க்காடு வீராசாமி

3. இயற்கையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. தூக்கனாங்குருவி கஷ்டப்பட்டு கூடு கட்டுகிறது. இப்படி, பல பழமொழிகள், அடுக்கு மொழிகள், உணர்ச்சிப் பிழம்புச் சித்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ‘இனிப்பு தரும் கனியிருக்க கசப்பான காயைத் தேர்ந்தெடுப்பது’ பற்றியும் வைகோ ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் மவுனமாக இருந்திருப்பதே சாலச் சிறந்தது!

4. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பரஸ்பரம் மரியாதையையும் நீக்குப்போக்கையும் கடைப்பிடித்தால் சட்டப் பேரவைத் தொகுதிப் பங்கீட்டுப் பணி எளிதாக முடியும். – வீரப்ப மொய்லி. அதே சூட்டோடு, “2004-க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீட்டின்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்!

புதிய வாரிசு

டாக்டர் ராமதாஸ் மற்றொரு புதிய வாரிசை அறிமுகப்படுத்துகிறார். அவரது மகள் கவிதா இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடப்போவதாக விகடன் தெரிவிக்கிறது.

தமிழக அரசியலில் “மகளை” வாரிசாக களமிறக்கும் முதல் அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான்.

மகன் டெல்லிக்கு, மகள் சென்னை கோட்டைக்கு