தவமாய் தவமிருந்து


சேரன் குறிப்பால் உணர்த்திய கதை

இராமநாதன்
என்னோட பெயர் இராமநாதன். என்னுடைய அப்பா முத்தையா சிவகங்கையில் அச்சு பிரெஸ் நடத்த தெரியாம நடத்துகிறார்.

என்னுடைய தம்பி இராமலிங்கம் மேல்தான் குடும்பத்தில் எல்லோருக்கும் பாசம். அம்மா சாரதா வாயில்லாப் பூச்சி.

திருமண வயது வந்தபிறகும் எனக்கு கல்யாணம் செய்துவைக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. என்னுடைய சம்பளத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மணம் முடித்த பிறகு அம்மாவுக்கு என் மேல் possessiveness அதிகரித்து விட்டது. ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்கு வந்து மனைவி லதாவுடன் இரண்டு நிமிஷம் பேசினால் கூட பொறுக்காது.

பிள்ளைத்தாச்சியை கடுமையாக வேலை வாங்கவேண்டாம் என்று நான் அவ்வப்போது அம்மாவிடம் பக்குவமாக சொல்லிவந்த போதும், அவர்கள் அதை தலையணை மந்திரம் என திரித்து அண்டைவீட்டாரிடம் பரப்பினர். தலைவர் படம் வந்திருக்கிறதே என்று ‘சந்திரமுகி’க்கு கிளம்பினாலும், வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தரலாம் என்றாலும் நடக்கவில்லை.

மூத்தவர்களே முன்யோசனை இல்லாமல் இருப்பதால் தனிக்குடித்தனம் சென்றேன். என்னுடைய முழு சம்பளப் பணத்தையும் எதிர்பார்ப்பதால், நான் மாதந்தோறும் அனுப்பிய ஆயிரம் ரூபாயை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

என்னுடன் பட்ட முரண்களுக்கு நிவர்த்தியாக, அப்பாவும் அம்மாவும், இராமலிங்கத்திடமும் அவனின் மனைவி வசந்தியுடனும் பக்குவமாக பதவிசாக இருந்தார்கள். வீட்டு வேலை செய்து ஓடாய்த் தேய்ந்த என் தாயார் உடல்நலம் குன்றிப் போய், இறந்து போனார். மனைவி இருந்தபோதே உரிய மரியாதை கிடைக்காத அவர்களின் வீட்டில் வாழப் பிடிக்காத அப்பா, மீண்டும் கிராமத்திற்கே தனிக்காட்டு ராஜாவாகத் திரும்பினார்.

கிங் லியர் போன்ற அப்பா, வார்த்தையில் தேன் தடவினால் மட்டுமே மகிழ்பவர். பெரியவர்களிடம் அனுகூலமாக, இனிப்பாக மட்டுமே பேச வேண்டும் என்று இராமல், என்னுடைய எண்ணங்களை உரத்த சொன்னதுதான், அப்பாவின் மரணத்துக்கு காரணம் என்று தம்பி இப்போது அப்பாவின் வழி தூற்றுகிறான்.

சாரதா அம்மா
என்னால் முடிலை. எவ்வளவு நாள்தான் இந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொண்டேயிருப்பது!

பொறுப்பற்ற கணவன். ஊர் மேயும் பிள்ளைகள். சீவி சிங்காரித்து காலையில் டாடா காட்டும் மருமகள். டபுள் இன்கம் – நோ கிட் என்று சொல்வார்கள். இவர்கள் டபுள் இன்கம் டபுள் கிட் நோ டிரபிள் என்று மாமனாரிடமும் மாமியாரிடமும் குழந்தைகளைப் பராமரிக்க விட்டுச் செல்லும் நவீன யுகத் தம்பதியர்.

கல்யாணமானவுடன் புருஷனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை செய்தேன். மாமியார் போய் சேர்ந்தபிறகு, சொற்ப வருமானத்தில் ஊதாரியாய் செலவழிக்கும் அவரை சமாளித்துக் கொண்டே, குழந்தைகளுக்கு சேவை.

என்னுடைய மாமியார் எனக்கு செஞ்சதில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. சித்த அடுப்பை பார்த்துக் கொள்ளச் சொன்னாலும் மூஞ்சியால் எத்தும் பெரியவன் பொண்டாட்டி லதா. அவள் கற்று கொடுத்த பாடத்தினால், அடுத்தவனின் மனவி வசந்தி சொன்னதையெல்லாம் செய்தேன்.

குழந்தைகள் எங்கள் பேச்சை நக்கல் செய்வார்கள்; பொறுமையைக் கடைபிடித்தேன். பேத்தி நடையையும் உடையையும் கிண்டல் அடிப்பாள்; ரசிப்பதாக நடித்தோம்.

எத்தனை நாள்தான் சம்பளமில்லா வேலைக்காரியாக சமைத்தும், ஷு கட்டியும், துணி தோய்த்தும், ஸ்கூல் பேக் தயார் செய்தும் கட்டியம் கட்ட முடியும்.

வயதான உயிர்தானே… சீக்கிரம் போய் சேர்ந்தது.

லதா
என்னோட புருஷன் இராமநாதனுக்கு சூதுவாது தெரியாது. வாங்கும் சம்பளத்தையெல்லாம் குடும்பத்துக்கே கொடுத்துருவார். தம்பி தன்னோட காதலுக்காக ‘ஜோடிப் புறா‘ பரிசு கொடுப்பதற்கு, இவர் எதுக்காக கஷ்டப்பட்டு உழைக்கணும்?

நாங்களும்தான் எங்களுடைய குழந்தைகளை வச்சுண்டு கஷ்டப்படறோம். எங்க வீட்டில் கொஞ்ச நாள் வந்து இருந்து கொண்டு, அந்தக் குழந்தைகள் கிட்டயும் பாசமழை பொழிஞ்சா அவங்க என்ன கொறஞ்சா போயிடுவாங்க?

அவங்க வர மாட்டாங்க.

அவர்களுக்கு பணம் முக்கியம்; மாடி வீடு அதை விட முக்கியம்; வீட்டில் அம்போ என்று தனியாக இருந்தாலும், சொகுசு கார் முக்கியம். நாள் பூரா பேச்சுத் துணைக்கும், மேலுக்கு முடியலைன்னா கூப்பிட குரலுக்கு வீட்டில் ஒருத்தர் இருப்பாங்க என்றாலும், பணம் இருக்கிற இடத்தில்தான் கட்டியம் பண்ணுவாங்க.

ஓட்டுனர் (டிரைவர்)
எங்க முதலாளி இராமலிங்கம் குறைந்த காலத்தில் பணக்காரர் ஆனவர்.

சொல் சாமர்த்தியம் அவர்கிட்டத்தான் கத்துக்கணும். இமேஜை எப்படி பாதுகாப்பது என்று பலமுறை அவரிடமிருந்து உணர்ந்திருக்கிறேன். தந்தைக்கு விசுவாசமானவன்னு ஒரு பிம்பத்தை அலுவலகத்தில் காட்டிக் கொண்டால், மேலதிகாரியிடமும் அப்படித்தானே நடந்து கொள்வார் என்று நினைத்துக் கொள்வார்கள். அவரின் வாழ்க்கையை பார்த்தால் சொல்ல மறந்த கதையெல்லாம் தெரியும்.


| |

9 responses to “தவமாய் தவமிருந்து

  1. Theemtharikida effect?! 🙂

  2. எப்படீங்க இப்படி..!?

  3. Unknown's avatar சுரேஷ் (penathal Suresh)

    வசந்தி

    ஒரு தப்புத்தான் செய்தேன். வாலிப வயதில், அறிந்தும் அறியாமலும் இந்த ராமலிங்கத்துடன் தவறு செய்துவிட்டேன். அதற்குப்பிறகு வாழ்க்கை எனக்கு எந்த சுகமுமே கொடுக்கவில்லை. திருட்டுத் திருமணம், பசி பட்டினியுடன் பிரசவம் என்ற கஷ்டங்கள் தாங்காமல் ஊருக்கே வந்து விடலாம் என நானே சொன்னாலும் பின்னால் அதை நினைத்து வருந்தாத நாள் கிடையாது.

    எஞ்சினியரிங் முடித்தும் அடுப்படியிலேயே காலம் கழிக்கவேண்டும் என வற்புறுத்தும் கணவன், மூத்த மருமகளிடம் செல்லுபடியாகாத அதிகாரத்தை என்மேல் பிரயோகித்துவிட விரும்பும் மாமியார், தன் மகன் தன் சொத்து, தன் சிந்தனைப்படி மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மாமனார்.. எனக்கும் அப்பா உண்டு இருந்தாலும் அவர் என்னைத் தவமாய்த் தவமிருந்து பெறவில்லை போலும்!

  4. Unknown's avatar அப்டிப்போடு...

    லதா இப்படியும் பேசியிருக்கலாம்

    அவங்களே வேல இருக்குன்னு போறெங்கிறாங்க., எனக்கு வந்து வாச்சது சம, சமன்னு நச்சரிச்சதப் பாத்திகல்ல?., அவர அடிக்க வந்தெல்லாம் மறந்துட்டாரு. அவுங்க தம்பி வீட்டப் பாத்திகல்ல?., அன்னைக்கு நான் குடிச்ச டீ மட்டுமா கொதிச்சுது? என் மனசுந்தான். அவுக தம்பிக்குத்தான் அப்படி வீடு இருக்கே., அந்தப் பழைய வீட்டக் கேட்டதுக்கு., மைசூர் அரண்மனைய எழுதி கேட்ட மாதிரி எப்படி ‘பீலீங்’ காட்டுச்சு பெருசு., ஒரே ஒரு கேள்விதான் என் வீட்டுக்காரர வீட்டு கேட்க வச்சேன்., இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுருந்தா…. முன்னடியே அந்தக் கேள்வியக் கேட்க வச்சுருப்பேன்னு சொல்லுவென்னுதானே நினைக்கிறிக…. சே!.நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியா?., வீட்ட வாங்கிட்டு கேட்கச் சொல்லியிருப்பேன்.

    ஹி..ஹி..பாவமப்பா… சேரன்… இப்படியெல்லாம் கலாய்க்காதிங்க!!

  5. Unknown's avatar பழூர் கார்த்தி

    பாலா, கைய கொடுங்க.. எங்கயோ போய்ட்டீங்க.. விட்டா சேரன் மாதிரி ஒரு படமே எடுத்து ஓட விடுவீங்க போலிருக்கே, அடங்குங்கப்பா…

    ***

    பொங்கல் வாழ்த்துகள் !

  6. அப்படிபோடு, class apart! வட்டாரப் பேச்சு வசனத்தில் பின்னி எடுத்திருக்கீங்க 🙂
    ——

    தமிழ்ப்பட இயக்குநர்களை மிஞ்சும் வேகத்தில் ‘ரீமேக்’ செய்த அனைவர்க்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள் 🙂
    —-

    நான் மிகவும் ரசித்தவை….

    —தன் சிந்தனைப்படி மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மாமனார்.. எனக்கும் அப்பா உண்டு இருந்தாலும் அவர் என்னைத் தவமாய்த் தவமிருந்து பெறவில்லை—

  7. Hello Bala

    Wish you a happy Pongal

    Murali

  8. Unknown's avatar கல்வெட்டு

    பாலா,
    இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது ..

    பொங்கல் வாழ்த்துகள்.
    நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

    அன்புடன்,
    கல்வெட்டு (எ) பலூன் மாமா

ராசா (Raasa) -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.