தமிழக தேர்தல் அலசல்


இன்றைய தினமலரில் (ஜனவரி 5-2006) திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது என்ற செய்த வந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
திமுக 138
காங்கிரஸ் 40
பா.ம.க. 25
மதிமுக 17
மார்க்சிஸ்ட் 6
சி.பி.ஐ. 6
இந்திய யூனியன் 1
ஆர்.எம். வீரப்பன் 1
என பங்கிடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும், இதை நம்பாமல் இருக்க முடியாது. இச் செய்தியினை ஏதோ ஒரு வட்டாரம் கசிய விட்டிருப்பதாகவே கருதலாம்.
கூட்டணியில் விரிசல் உண்டாக்க போலீஸ் சதி என்று அடிக்கடி குற்றம் சுமத்தும் கருணாநிதி இந்த செய்தியை மறுப்பாரா? அல்லது வாய் மூடி மவுனியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், இந்த தொகுதி பங்கீடு என்பது தொடர்ச்சியாக போராடும் – வளர்ந்து வரும் – வளர்ந்த கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
இதை வரிசைப்படி பார்க்கலாம்.
1. கருணாநிதி தலைமையிலான திமுக கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது? கடைசி கட்டத்தில்தான் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு தற்போது போராட முனைந்துள்ளது. இதுவும் கூட கூட்டணி கட்சியினரின் நிர்ப்பந்தமாக இருக்கலாம்.
ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, “ஓட்டு போட்ட மக்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே” என்று கிண்டலும், கேலியும் செய்து சும்மா இருந்தவர்தான் திமுக தலைவர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
2. தற்போது திமுகவின் வளர்ச்சி என்ன நிலையில் உள்ளது? திமுக வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா? என்பதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் கரைவேட்டிகளை மடித்து வைத்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் கீழ்மட்ட உண்மை. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் யாராவது திமுகவில் சேர முன் வருகிறார்களா? இல்லை என்றே தெரிகிறது. இது அதிமுகவிலும்தான்.
இதைத்தான் இளைஞர்கள் யார் புதிய கட்சி என்று ஆரம்பித்தாலும் தங்களை அவர்களோடு இணைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முனைகின்றனர். இது சமீப காலத்திய உதாரணம்.
3. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால், அதில் வட்டத்திற்கு ஒரு பிளவும், பெரும் தலைவர்களும் மட்டுமே உள்ள கட்சி! ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி காமராஜர் ஆட்சி என்ற கனவு கண்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரசை தமிழகத்தில் நுழைவதையே விரும்பவில்லை என்பதைத்தான் அவர்களின் வாக்குவங்கி சரிவுகள் காட்டுகிறது. போதாதற்கு திண்டிவனம் இராமமூர்த்தி காங்கிரசுக்குள் ஜாதிய அரசியலை தீவிரமாக நடத்தி வருவதையும் நாம் அறிந்ததே! இந்தப் பின்னணியில் பார்த்தால் காங்கிரசும் தேய்ந்து, தேய்ந்து ஓடாய் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.
3. மதிமுக ஆரம்பத்தில் வீராதி வீரான் – சூராதி சூரன் என்று வாய்வீச்சு பேசினாலும், அம்மாவிடமும், அய்யாவிடமும், பா.ஜ.க.விடமும் சரணாகதி அடைந்து தனக்கென்று எந்தவிதமான கொள்கையும் இல்லை என்பதை நிரூபித்து விட்டவர். சமீப காலத்தில் மதிமுகவில் ஆரம்பகாலத்தில் இருந்த தொண்டர்களில் 70 சதவீதம் பேர் காணாமல் போய் விட்டனர் என்பதே கள வரலாறு நிரூபிக்கிறது. அவர்களது தொண்டர்களிடமும் மதிமுகவிற்கு கருணாநிதி துரோகம் இழைப்பார் என்ற காரணத்தினால் திமுக மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் செத்த பிணத்திற்கு இருக்கும் ஆர்வமே அந்த தொண்டர்களுக்கு இருக்கிறது என்பது மதிமுக தலைமைக்கே புரியும்.
4. இராமதா° ஜாதியை பின்னணியாக கொண்டு தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட அவரும் ஆடித்தான் போயுள்ளார் என்பதை அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கு எதிரான அரசியல் நடத்தியதில் இருந்தே தெரிந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய – இயக்கம் நடத்தக்கூடிய கட்சியாக பா.ம.க. இருக்கிறது. (தொண்டர்கள் அல்ல) தலைவர்களை வைத்துக் கொண்டு மட்டுமே இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவரது பலமே தாவுவதுதான். எனவே தாவாமல் பார்த்துக் கொள்ள சீட்டு என்ற கயிரை பா.ம.க.விற்கு எப்படியாவது மாட்டி விடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
5. அடுத்து கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுக அரசின் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக வலுவான – தொண்டர்களின் அடித்தளத்தை கொண்டு குரலெழுப்பி வருகின்ற கட்சிகளாக இருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிய இளைஞர்கள் நம்பிக்கையோடு இணைந்து வருவது இந்த கட்சிக்கு பெரும் பலம். ஏற்கனவே “கருணாநிதி இதயத்தில் இடம் உண்டு” என்ற டயலாக்கை மார்க்சிஸ்ட்டுகள் இன்னும் மறக்கவில்லை. மேலும், இந்தத் தொண்டர்கள் தான காசு வாங்காமல் கூட்டணிக்கு உழைக்கப் போகிறவர்களும். இதை கருணாநிதியே கூட ஒத்துக் கொள்வார். வலுவான தொண்டர் படையை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகளிடமும், கம்யூனிஸ்ட்டுகளிடமும் அவரது இதயத்தில் இடம் என்ற கொள்கையை பின்பற்றினால், ஆந்திர பாணி கூட்டணி முறையை கையாள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
6. அதிமுகவை பொறுத்தவரை பணத்தையே பலமாக நம்பி செயல்படுகிறது. சுய உதவிக்குழுக்கள், வெள்ள நிவாரணம், அதிரடி அறிவிப்புகள் மூலம் ஏதாவது செய்து வெற்றி பெறலாம் என்ற மாயையில் செயல்பட்டு வருகிறார் அம்மா. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அதிமுகவின் கடந்த கால அராஜக நடவடிக்கைகளை இன்னும் மறக்கவில்லை. அது, அரசு ஊழியர் – ஆசிரியர், மின்வாரிய தொழிலாளர், பஸ் ஊழியர் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். போததற்கு பத்திரிகைகள் மீது தாக்குதல்… ஜனநாயக அடக்குமுறை போன்றவற்றை அவர்கள் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக அரசை வீழ்த்துவதில் குறியாக உள்ளார்கள் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருந்தாலும், கருணாநிதிக்கு இந்த உணர்வு புரியுமா? என்ற கேள்வி எழுகிறது அவரது சாணக்கியத்தனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு மட்டும் அல்ல! கருணாநிதிக்கும்தான். (அவருக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. எனவே இழக்காமல் எதையும் பெற முடியாது என்பதை முதலில் அவர் உணர வேண்டும்.)

4 responses to “தமிழக தேர்தல் அலசல்

  1. தினமலர் சுட்டி தரமுடியுமா?

  2. விடுதலை சிறுத்தைகளுக்கு இடமில்லையா? அல்லது பாமகவிற்கான இடத்தில் பங்கிட வேண்டுமா? அல்லது கூட்டணியிலேயே இல்லையா?

  3. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    Sorry.The link is
    http://epaper.dinamalar.com

  4. If this is true, it’s amazing.

    1. As RV says, do VS get their share from PMK’s 25 – I can see steam out of Ramadoss’s ears now…

    2. DMK in just 138? And they hope to win 118 off that? Surprising…

    3. Congress getting 40 – I think MK thinks that Congress might be a more reliable coalition partner than PMK if it comes to that…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.