Tag Archives: Raavanan

முடிபொருட்டொடர்நிலை

ராணி: ட்விட்டர்ல் ஒண்ணு பார்த்தேன்.

ராஜா: தப்பு… தப்பு! முதல்ல அது டிவிட்டர் கிடையாது ஆக்கும் — எக்ஸ் என்பார் எலான். இரண்டாவது என்னிக்காவது ட்விட்டரில் ஒண்ணேயொண்னை மட்டும் பார்க்க முடியுமா என்ன!?

ராணி: மிடில… நான் படிச்சது, ‘மனித இனம் ஏன் மற்ற மிருகங்களை முன்னேற்றவில்லை?’ – என்னும் வினா.

ராஜா: ஆட்டுக்குட்டியை இன்னும் சதைப் பற்றொடு வளர்ப்பது எப்படி? பூனையும் நாயும் பிறந்தவுடனேயே சொன்னபடி கேட்டு நடக்கும் செல்லப்பிராணி ஆக ஆக்குவதெப்படி? கசாப்புக் கடைக்கு மிச்சம் மீதி இல்லாமல் முழு ஊனையும் தருவதெப்படி… இப்படியா?

ராணி: முருகா! அதைவிட மனுஷன் மனசு வச்சா எந்த உயிரினத்தையும் புத்திசாலியாக மாற்றி இருக்கலாம்.

ராஜா: கணினிக்கு அறிவுத் திறன் ஊட்டுவதற்கு பதிலாக விலங்குகளுக்கு மதி நுட்பம் புகுத்தியிருக்கலாம் என்கிறாய். இத்தனை ஆண்டுகளாக நாகரிகமாக வாழும் நாமே இன்னும் மந்தையாகத்தான் செயல்படுகிறோம். அதெல்லாம் நடக்கிற காரியமா?

ராணி: Payton E. Pearson III எழுதிய “Artificially Selecting for Intelligence in Dogs to Produce Human-level IQ Within 100 Generations” தேடிப் பார் என்பது ட்விட். அதை வச்சு, ‘ஏன் எவளும் அறிபுனை கதை ஒன்று எழுதவில்லை?’ என்பது சங்கிலிக் கேள்வி.

ராஜா: நல்ல கேள்வி. இதைக் கேட்டவுடன், எனக்குத் தோணுது… ‘கும்பகர்ணன் என்பது AGI குறியீடு. தூங்கிட்டிருக்கிற AI சிங்கம். சாமா-னு செல்லமாக அழைக்கப்படுகிற சாம் ஆல்ட்மேன் தான் இராவணன்!’ – இப்படி ஒரு அறிவியல் புனைவை ராமகாவியமாக எழுதப் போறேன்.

ராணி: ராவணன் திராவிடர் ஆச்சே?

ராஜா: ராவணன் மணி ரத்தினம் எடுத்த படம்.

ராணி: உசிரே போகுதே!

ராஜா: அப்ப மணியும் இல்லுமினாட்டிங்கிற!!

Aayirathil Oruvan is Ravanan

எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?

படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.

இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.

சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?

பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.

‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.

தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.

சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.

ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.

வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.

வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.

‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.

இடர்வழி

ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.

முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.

இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!

அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.

தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.

பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.

கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.

மேம்போக்கு வழி

தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.

இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.

குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

Ravanan Videos

Reviews

Making of Raavanan