எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?
படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.
இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.
சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?
பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.
‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.
தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.
சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.
ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.
வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.
வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.
‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.
இடர்வழி
ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.
முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.
இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!
அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.
தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.
பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.
கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.
மேம்போக்கு வழி
தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.
இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.
குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.
நான் இரண்டு படங்களையும் பார்த்ததில்லை. ஆனால் உங்கள் பதிவு ‘புல்லரிக்க’ வைக்கிறது. இப்ப எல்லாம் ரூம் போட்டு யோசிப்பீய்ங்களோ?
🙂