Tag Archives: Lecture

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி: கவிஞர் வைரமுத்து, நடிகர் ஸ்ரீகாந்த், மணிகண்டன்

வைரமுத்து பேச்சு

வரவேற்புரை & மணிகண்டன் நகைச்சுவை

தலைமை உரை

முதல்வர் உரை

ஸ்ரீகாந்த் சிரிப்புரை

தொழில்நுட்பத்தின் சூட்சுமங்களைப் பகிர்ந்த கதை

சென்ற மாதத்தின் கடைசி சனிக்கிழமை எனக்குத் தெரிந்த ஸீக்வல் நுட்பங்களை விளக்கிச் சொல்ல மேடையும் அரங்கம் நிறைந்த ஆடியன்சும் வாய்த்தனர். அவை குறித்த பவர்பாயின்டுகள் அங்கே கிடைக்கும்.

நீங்களும் இவ்வாறு உங்களுக்குத் தெரிந்த வித்தையை உள்ளூர் கேம்ப்பில் பகிர்ந்து மகிழ வேண்டும்.

ஏன்?

1. பணம் முதலீடு செய்தால் பெருகலாம். கல்வி சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பெருகும். ஒழுங்காய்ப் புரியும்.

2. லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில், உங்களின் ப்ரசன்டேஷன் பேசப்பட வேண்டும். விஷயம் தெரிந்தவர் என்ற கெத்து கிடைக்கும்.

3. சொல்லிக் கொடுப்பதற்காக அமேசான் போன்ற நிறுவனங்களின் அன்பளிப்பு வரப்பெறுவோம்.

4. கோர்வையாக விளக்குவதும், சுவாரசியமாக நகைச்சுவை தெளித்துப் பேசவும், கடினமான டெக்னாலஜியை சுளுவாக எடுத்து வைக்கவும், இதை விட வசதியான இடம் கிடைக்காது.

இனி… எப்படி தயார் செய்வது?

1. உங்களுக்குத் தெரிந்து நுட்பமாக இருக்கட்டும். நீங்கள் வேலை செய்த மொழியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். லேட்டஸ்ட் என்பதை விட அகலமும், ஆழமும் அறிந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுங்கள்.

2. அடுத்தது: இந்த நுட்பத்தை மற்றவர் அறிவதால் என்ன பயன்? எவருக்கு இது கவர்ச்சியாக அமையும்? யாருக்கு சொல்லித் தந்தால் முக்கியம்?

3. இனிமேல் ஈஸி. ஸ்லைடுகள் ஏற்கனவே எவராவது போட்டிருப்பார். அதை கூகிள் கொண்டு எடுக்கவும். எட்டு டெக்குகள் எடுத்து, அவற்றுள் அலசி, ஆராய்ந்து, ஒருங்கிணைத்து உங்களுடையதை தயார் செய்யவும் – ஒரு நாள் வேலை இது.

4. முக்கிய கட்டம்: டெமோ காட்டுவது. இதற்கான மென்பொருளை உங்கள் மடிக்கணினியில் நிறுவவும். சாம்பிள் நிரலிகளை பொறுத்தவும். எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று தலை முதல் வால் வரை நடத்திப் பார்க்கவும். அவற்றை எழுதி வைத்துக் கொள்ளவும் – அடுத்த நாளுக்கான வேலை.

5. கடைசி கட்டம்: பவர்பாயிண்ட்டை முழுக்க சொல்லி பார்க்கவும். ஒரு மணி நேர வகுப்பு என்றால், முக்கால் மணி நேரமாவது உங்கள் பேச்சு இருக்க வேண்டும். – எட்டு மணி நேர உழைப்பு தேவை

6. கட்டாங்கடைசி: உங்களின் பயிற்சி முழுக்க கேட்டும் பார்வையாளருக்கு எதுவும் புரியவில்லை என்றால், எதை மட்டும் முக்கியமாகக் கருதி, மனதில் இருத்த வேண்டும்? தடாலடியான முன்னேற்றம் காண்பது எப்படி? உங்களை எப்படி அணுகுவது (மின்னஞ்சல் முகவரி இன்ன பிற).

என்னுடைய டேட்டா கேம்ப் அனுபவங்கள்:

1. உள்ளூர்காரர்களுக்கு ஜோக் கொண்ட விவரிப்பு முக்கியம். இந்தியாகாரங்களுக்கு (அதாவது… காரியஸ்தர்களுக்கு) விஷயம் முக்கியம். இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முயன்றேன். (எ-டு: ‘நீங்க இப்ப கத்துண்டது எல்லாமே ரத்திக்குப் போயாச்சு. எல்லாரும் க்ளௌடுக்கு மாறிட்டாங்க! இனிமே ஸீக்குவல் வெறுங்குப்பையாக்கும்.)

2. ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இரண்டு வகுப்புகள் என்றால் காலையில் ஒன்று; மாலையில் ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக வேண்டவே வேண்டாம்.

3. கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ளவும். எதிராளிக்கு விஷயம் தெரியாது. கூகிள் எல்லாம் கையில் கிடையாது. மைக்கோ  உங்கள் பிடியில். நீங்கள் சொல்லும் பதில்தான் அதாரிட்டி. எனவே, நிச்சயம் அதிரடியாக வேதவாக்கு அருளுங்கள்.

4. நன்றாக எடுத்தால், நிறைய சந்தேகங்கள் வரும். எளிமையாக வைத்துக் கொண்டேன். கேள்வி நிறைய வந்தது.

5. பதிவுக்கு காமென்ட் வருவது போல், ‘ரொம்ப நன்றாக இருந்தது’ என்று நாலு பேர் நடைபாதையில் நிறுத்தி நன்றி சொன்னபோது, சும்மா… ஜிவ்வென்றிருந்தது.