யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.
அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.
குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?
ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.
திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.
அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.
இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.
அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.












