Tag Archives: மகயின்

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :

(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.

பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).

அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).

மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.

உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.

(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.

மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

தொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு?

செலவழித்த கணக்கு

  1. பராக் ஒபாமா: $145,064,338
  2. ஜான் மெகயின்: $90,415,962
  3. T. Boone Pickens: $24,026,256
  4. குடியரசுக் கட்சி: $10,080,774
  5. அமெரிக்க ஒய்வுற்றவர்கள் சங்கம்: $7,098,639
  6. முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் (Vets for Freedom):$3,899,753
  7. பள்ளி, படிப்பு, ஆசிரியர் சங்கம் (Strong American Schools):$3,075,462
  8. American Issues Project: $2,287,945
  9. S.E.I.U.:$2,019,476
  10. One Campaign (one.org):$1,451,238
  11. MoveOn.org: $1,448,331
  12. உடல்நலம், காப்பீடு சங்கம் (Health Care First): $1,397,726
  13. RightChange.com:$1,377,003
  14. Healthcare for America Now: $922,618
  15. Committee for Truth in Politics: $734,479
  16. United Auto Workers:$489,517
  17. ஜனநாயகக் கட்சி: $436,015
  18. திட்டமிடப்பட்ட தாய்மை (Planned Parenthood):$321,269
  19. கருக்கலைப்பு எதிர்ப்போர் சங்கம் (Vitae Society):$258,710
  20. முன்னாள் இராணுவ வீரர்கள் VoteVets:$201,752
  21. Let Freedom Ring:$197,030
  22. Judicial Confirmation Network:$192.882
  23. BornAliveTruth.org: $165,948
  24. விலங்குகள் பாதுகாப்பு/நல சங்கம்: $128,735
  25. தொழிற்சங்கங்கள்: $123,274
  26. Citizens United: $88,002
  27. U.F.C.W.:$85,012
  28. PowerPAC: $80,383
  29. California Nurses Association: $60,162
  30. Bring Ohio Back: $40,457
  31. Matthew 25 Network:$8.858
  32. Brave New PAC and Democracy for America: $3,293
  33. கறுப்பர் தொலைக்காட்சி: $3,036
  34. மதம்/கடவுள்/யேசு கிறிஸ்து – pH for America:$2,2,42
  35. Denver Group:$1,102

விளம்பர மோதல் (நியு யார்க் டைம்ஸ்):

தொலைக்காட்சி விளம்பர – வாரம் வாரியாக:

நன்றி:

1. The Ad Wars – Election Guide 2008 – The New York Times: “About $300 million has been spent from April 3 to Oct. 13, 2008 to broadcast over 200 ads, according to statistics compiled by Campaign Media Analysis Group, which tracks political advertising expenditures.”

2. Nearing Record, Obama’s Ad Effort Swamps McCain – NYTimes.com: “Senator Barack Obama on Friday in Roanoke, Va. Analysts say his campaign is on pace to surpass next week the record of $188 million in advertising spending in a general election.”

3. Day’s Campaigning Shows an Inverted Political Plane – NYTimes.com: “There was the feel of a political world turned upside down on Saturday as Senator John McCain found himself defending North Carolina and Virginia, while Senator Barack Obama was greeted by huge crowds in Missouri, which Republicans had also considered safe just months ago.”

வாரயிறுதி வி.ஐ.பி.: வாசன்

தமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.

வாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.

இனி அவர்:

1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்? ஏன்?

கருத்து கணிப்பு:

40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.

14% இன்னும் முடிவு செய்யவில்லை

இதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) கொள்கைகளுடன் ஒத்து போகிற வேட்பாளர் யார் என கணித்ததில்:

  • 48% ஒபாமாவையும்,
  • 41% மெக்கெய்னையும் சொல்கின்றனர்.
  • 7% க்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை
  • 4% க்கு இரண்டு பேர்களுமே இல்லை!

2. மிக முக்கியமான ஊராச்சே… எத்தனை தடவை இது வரை ஒபாமாவும் மகயினும் வந்து போயிருப்பார்கள்! என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்? எதை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்?

😉

அல்புகர்க்கி அல்லது மாநிலத்திற்கு எத்தனை தடவைகள் என்பது உடன் ஞாபகத்திற்கு வரவில்லை. 2 அல்லது 3 தடவைகள் இருக்கலாம்.

மெக்கெய்னும் சேரா பெலினும் down town Albuquerque யில் கூட்டம் நடத்திய போது நிறைய மக்கள் வந்திருந்தார்கள்; பலர் சேராவை நேரில் பார்க்கணும் என்பதற்காக வந்திருப்பார்கள் என்றன உள்ளூர் நாளிதழ் மற்றும் திறனலை (am) வானொலி. நாளிதழில் படித்தவரை கூட்டத்தில் வேட்பாளர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.

ஒபாமா 3 வாரங்களுக்கு முன்பு கடைசியாக வந்து சென்றிருக்கலாம். மொத்தம் 4 தடவையோ..?

வட நியு மெக்ஸிக்கோ ஊர்களான எஸ்பய்னோலா மற்றும் பெர்னலியோ ஆகிய ஊர்களில் ஒபாமா கூட்டங்களுக்கு உற்சாகமான மக்கள் கூட்டம் வந்திருந்ததென சொன்ன ஊடகங்கள். இவரும் அடித்தள மக்களுக்கு காக்காய் பிடிக்கிற மாதிரி சொன்னதையே சொல்லியதாக ஞாபகம்.

‘வட நியு மெக்ஸிக்கோ’ வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக இருந்து வருவது – (தலைநகரம் சேந்த ஃபே தவிர்த்து) – 65% க்கு 35 % விழுக்காடு என்பதாக ‘வாக்களிக்க பதிவு செய்தவர்கள்’ ஜனநாயக கட்சியினராக உள்ள பகுதி.

பல உள்ளூர் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு வேட்பாளர் கிடைப்பது அரிது.

3. உங்க வோட்டு யாருக்கு? எதனால்…

இக்கணத்தில் எனது வாக்கு யாருக்கும் இல்லை.

எனது கணிப்பில் இரு வேட்பாளர்களும் கிட்டதட்ட பல விடயங்களில் ஒத்து போகிறார்கள். (தேவை இருந்தால் இது பற்றி விவரித்து எழுதலாம், nfl முடிந்த பின்!! ).

கருத்துத் தெளிவு என்பது இதுவரை கானல் நீராகத்தான் உள்ளது – இந்த தேர்தல் கூத்தாட்டத்தில்.

4. சென்ற தேர்தல்களில் வாக்களித்தவர்களில் எவர் உங்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்தார்கள்? எங்கு ஏமாற்றினார்கள்?

அதிபர் தேர்தலில் ஜான் கெர்ரிக்கு துளியும் விருப்பமில்லாமல் வாக்களித்தேன். 2000 ல் டூப்யா வுக்கு வாக்களித்த போது இருந்த ஆர்வம் போலில்லை என்பதாக அர்த்தம் கொள்ளவும்.

மாநில தேர்தல்களில், congress க்கு குடியரசு கட்சியின் ஹெதர் (உ)வில்சனுக்கு வாக்களித்தேன். ஏனோ தானோ உள்ளது அவரது தற்போதைய இந்த ஆட்சி காலம்(?). மறு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. காலியான செனெட் க்கு அவரது கட்சியின் சார்பாக போட்டியிட, கட்சியின் முன் தெரிவு தேர்தலில் வாய்ப்பினை இழந்தார்.

ஆளுநர் போட்டியில் பில் ரிசற்ட்சனுக்கு வாக்களித்தேன். எதிர்த்து நின்ற குடியரசு கட்சிக்காரருக்கு அவருடைய கட்சி வாக்குகளில் 58% தான் கிடைத்தது. “ஸால்ஸா கிடைக்காத ஊருக்கு கிடைத்த உறைப்புச் சட்னி” மாதிரிதான் பில்லுக்கு போட்ட வாக்கு.

கடந்த தேர்தலில் செனெட்டுக்கு தேர்தல் இல்லை. தற்போது உண்டு. 36 வருடங்களாக செனெட்டராக இருந்த பீற் டொமினிச்சி இடத்தை காலி பண்ணுகிறார்.

5. பில் ரிச்சர்ட்சன் எப்படி இருக்கிறார்? 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா? ஒபாமாவுடன் ஒப்பிட்டால் எவ்வாறு இவர் வேறுபடுகிறார்?

2012-16 ல் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்..?

இவர் இங்கு ஆளுநராக இருந்த காலத்தில் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், “மக்கள்” அரசாங்கத்தை நம்பியே வாழும் போக்கினை மாற்றிட ரிசற்ட்சன் ஏதும் செய்துவிடவில்லை.

ஒபாமாவின் பெரிய நம்பிக்கையாளர்களில் ஒருவர் ரிசற்ட்சன். வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை, துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை தவிர்த்து.

NRA ரிசற்ட்சனை நண்பனாக கருதுகிறது.

வாசன்

கடைசி விவாதம்: யார் வென்றார்கள்?

ஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.

உங்கள் கருத்து என்ன?

தொலைக்காட்சி நேரம்: அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள்

ஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:

ஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:

ஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:

(ஆதாரம்: For McCain and Team, a Host of Ties to Gambling – NYTimes.com)