Tag Archives: பதிப்பு

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

Solvanam 296th Issue: சொல்வனம் மின்னிதழ்

296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.

முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”

அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.

காம்பின்றித்‌ தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார்‌. அவள்‌ இந்தியக்‌ கவிகளை வரலாறு நெடுகிலும்‌ கடுக்க முடியாத வலிமையுடன்‌ ஈர்க்கும்‌ தன்‌ கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள்‌. ஸ்ரீ அரவிந்தர்‌ இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில்‌ தீட்டியுள்ளார்‌. இக்காவியத்தின்‌ மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும்‌ நிலையிலோ காமத்தின்‌ வெறியுணர்ச்சி துடிதுடிக்கும்‌ நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும்‌ வெளிப்படுகின்‌றது.

உட்பொருளானது இரு காதலரும்‌ தாம்‌ தகுதியுடன்‌ பெற்ற இன்பத்தைக்‌ கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ்‌ மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத்‌ தேவர்‌ வாழும்‌ விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான்‌. காதலர்‌ இப்புவியை அடியோடு துறந்து விட்டனர்‌. ஆயினும்‌, கீழே தொலைவிடத்தில்‌ மோனம்‌ நிறைந்ததும்‌ வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின்‌ ஊடே பசுமை நிறைந்ததும்‌, விடாமுயற்சியும்‌ சுறுசுறுப்பும்‌ உடையதுமான இப்பூமி இடைவிடாமல்‌ சுழன்று கொண்டேதான்‌ வருகின்றது.

சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?

உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

சொல்வனம் 294ம் இதழ்

சொல்வனத்தின் புத்தம் புதிய இதழில் 23 உருப்படிகள் வந்திருக்கின்றன.
ஆறு கதைகள்; மூன்று நாவல் தொடர்கள்; மூன்று கவிதைகள் – விட்டு விடலாம்.

கட்டுரைகளில்:

  1. அந்நியனின் அடிச்சுவட்டில் – நம்பி
  2. நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
  3. நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
  4. சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
  5. நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
  6. இன்று நேற்று நாளை – பானுமதி ந.
  7. இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
  8. காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
  9. ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்

இரண்டு கட்டுரைகளை அவசியம் வாசிக்க கோருகிறேன்.

ஆல்பர்ட் காம்யூவைக் குறித்த நம்பி கிருஷ்ணனின் அலசல் – அமர்க்களம் + அட்டகாசம் + அன்னியோன்யம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-294/


ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்‌ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!

அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல்.
இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு.
இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார்.
தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!

நன்றி!