Tag Archives: நண்பர்கள்

கோடை மறைந்தால் இன்பம் வரும்

நியூ ஜெர்சி ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ விழா அமர்க்களமாக நடந்தது. பழனி ஜோதி சிறப்பான அறிமுகம் செய்து துவங்கி வைத்தார். நான் சற்றே தாமதமாக வந்ததால் (ஐந்தாறு நிமிடங்கள்) ஜெயமோகன் உடன் அமர்ந்திருந்தவர் யார் என்று நிகழ்ச்சி நடக்கும் போது தெரியவில்லை. அதன் பின்னர் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன். நிகழ்ச்சியில் முழுவதும் இளைஞர்களும் இளைஞிகளும் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு கதைகள்… பல்வேறு பார்வைகள் … சுருக்கமாக, வித்தியாசமாக, அதேசமயம் பொருத்தமாக இருந்தது. ஜெயமோகன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி பதில்களை நடத்தினார். வழக்கமான திரள் புத்தி கேள்விகள் பெரியோரிடம் இருந்து வந்தன. இளைய தலைமுறையினரிடம் இருந்து அப்படிப்பட்ட வினாக்கள் எதுவும் இல்லாமல், ஆழமாக புத்தகம் தொடர்பாக அந்த கதா மாந்தர்களில் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையில் எழுந்த நேர்மையான வினாக்கள் – எளிமையாக பகிரப்பட்டன

மிக நிறைவான நிகழ்வு. இதை கச்சிதமாக நடத்தியதற்கு பழனி ஜோதி மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் குழுவிற்கு பாராட்டுக்கள். இது எளிமையான காரியம் அல்ல… எவ்வளவு பேர் வந்தார்கள் என்று எண்ணவில்லை. 100+ பேர் இருப்பார்களோ!? அரங்கம் நிறைந்து வழிந்தது. பலரும் இழுத்துப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். மாயா வழக்கம் போல் அமைதியாக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். இளா கொஞ்சம் விவகாரமான கோணங்களில் சுட்டுக் கொண்டிருந்தார்.

நெல்லை விஜய், வேல் முருகன், பாஸ்டன் நவீன் என்று நியு இங்கிலாந்து மக்கள் சூழ சென்றது பயணத்தை சுவாரசியமாக்கியது. அங்கே பல அறிந்த முகங்கள். புதிய அறிமுகங்கள். நெடுங்காலமாக இணையத்தில் மட்டுமே பேசி வந்த தமிழ் சசி. விவசாயி இளா. காரைக்குடி சுபா. காண்ட்ராரியன் ஏகே அரவிந்தன் கன்னையன். டாக்ஜட்ஜ் துவங்கி அமர்க்களமாய் வீடியோக்கள் நடத்தும் தினேஷ் ஜெயபாலன். திண்ணை துக்காராம் அம்மா கிச்சனுக்கு வந்திருந்தார். நெடுங்கால சொந்தமான பிரபு சின்னத்தம்பி கலகலப்பாக்கி பழைய சிகாகோ நினைவுகளை மீட்டெடுத்தார்.

ஜெயமோகன் 20 ஆண்டுகள் முன்பு பார்த்தபடியே இருக்கிறார் என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தார் … புகைப்படங்களில் பார்த்ததை வைத்து! நேரிலும் அவ்வாறே… மிக இயல்பாக ஆதுரத்துடன் கட்டித்தழுவி வரவேற்று அன்போடு பழகினார்

அதன் பின்னர் நாங்களே எங்கள் அனைவரையும் மஹேஸ் பழனிஜோதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட அங்கேயும் ஒரு 30 /40 பேர் குழுமியிருப்போம். சபை களை கட்டியது. சூடான பருப்பு வடை அல்லது அதற்குப் பேர் மெதுவடையா . கரக்… மொறுக் உள்ளே தள்ளினோம். தேநீர். ஆளுக்கு முருக்கு பாக்கெட் வேறு.

நியுயார்க் லிட் ஃபெஸ்ட் களப்பணிக்கு முன்னோட்டம். மிக சிறப்பாக செயல்பட்டு உதவினார்கள். கதவுக்குப் பக்கத்தில் சத்தம் வராமல் பார்த்துக் கொண்டது முதல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து பம்பரமாக இயங்கிய செயல்வீரர்கள்!!

வழக்கம்போல் ஆசான் என்ன கேள்வி கேட்டாலும் அநயாசமாக விடையளித்துக் கொண்டிருந்தார். இதில் என்ன அதிசயம்!? எப்பொழுதும் போல் முன்னரே அறிந்தது தான் … என்றாலும் என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. மதியம் ஒரு மணியிலிருந்து முக்கியமான விழா . அது நான்கு மணி அளவில் நிறைவுகிறது. அதன் பின் இன்னொரு இரண்டரை மணி நேரம்… பல்வேறு தலைப்புகள்… சுவாரசியங்கள் … நெருக்கமான தகவல்கள்… இலக்கிய அலைதல்கள் என்று எல்லா இடங்களுக்கும் எப்பொழுதும் இவரால் அட்சய பாத்திரம் போல் காமதேனு போல் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடிகிறது!

தத்துவ முகாமை தவறவிட்டதை நினைத்து இப்பொழுதும் வருந்தி பொறாமை கொள்ளும் தருணம்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

பூன் 2023

ஜெயமோகன் பதிவு: பூன் முகாம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)

தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.

இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.

மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!

ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது

எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர்,
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.

“பையணைப்‌ பஃறலைப்‌. பாந்தள்‌ ஏந்திய
மொய்ந்நிலத்‌ தகளியில்‌: முழங்கு: நீர்நெயின்‌
வெய்யவன்‌ விளக்கமா மேருப்‌ பொன்திரி
மைஅடுத்‌ தொத்தது மழைத்த வானமே”

(உரை): ஆதிசேடன்‌ தாங்கும்‌, இந்த நிலமே-அகலாகவும்‌; கடலே நெய்யாகவும்‌, மேருமலை திரியாகவும்‌, ஞாயிறு.விளக்காகவும்‌. அமைந்திருக்க, : அந்த விளக்குப்‌ புகையினால்‌, வானம்‌ இருண்டது. போன்று வானத்தில்‌ முகில்‌ மூட்டம்‌ காணப்‌ பட்டது.

மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?

அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:

“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”

இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.

அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.

வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.

சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற ஆண்டு பதிந்தது:

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.

இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.

எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”

மேலும்:

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.