Tag Archives: சொ.வ.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்

ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.

பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.

நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்

ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.

இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.

ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.

நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.

அதை #solvanam இதழில் வாசிக்கலாம்.