Tag Archives: சொ.வ

Happy Birthday – Nambi Krishnan

G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??

எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.

கோட் என்றால் ?

—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.

—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.

நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.

அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.

அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine