குழந்தைகளுக்கு உகந்ததா? நடு விரலும், ‘ஷிட்’ பிரயோகங்களும், மல்லிகாவின் லேப் டான்சும், கழுத்தை அறுக்கும் கொலையும், கழுத்தில் குத்தும் கொலையும் உண்டு என்பதால் பதின்ம வயதினருக்கு மேல் பொருத்தமானது. ஆனால், ‘வேட்டையாடு… விளையாடு’ அளவு வன்முறை கிடையாது.
பெரியவர்களுக்குப் பிடிக்குமா? நிச்சயம் பிடிக்கும்
உலகில் யாருமே ஒரே படத்தில் பத்துக்கு மேல் வேடம் தரித்ததில்லையா? எட்டி மர்ஃபி மட்டுமே ஞாபகம் வந்தாலும், 1913- இலேயே 27 வேடம் கட்டியவர் இருந்திருக்கிறார்.
இரட்டை வேட அசின் எப்படி? விஜய் படத்திலேயே இதை விட பெட்டர் ரோல் கிடைக்கும் என்னும் மறக்கக்கூடிய நிலை.
அப்படியானால், மல்லிகா ஷெராவத்? சடாரென்று வந்து அரங்க ஆட்டத்திற்குரிய சாமுத்ரிகா லட்சணங்களைக் காட்டி. ஒய்யார நடை பயின்று இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கமல் இருட்டடிக்கப் படுவார் என்பதாக துள்ளுகிறார்.
அமெரிக்காவை விட்டு வெளியேற ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஹோம்லான்ட் செக்யூரிட்டி’ செல்ல வேண்டுமா? விசாவில் வந்தாலும் சரி; பச்சை அட்டை வைத்திருந்தாலும் சரி; குடிமகனாக இருந்தாலும் சரி. தேவையில்லை. ஆனால், மல்லிகா ஷெராவத்துக்கு (ஜாஸ்மின் கதாபாத்திரம்) க்யூவில் நிற்கிறாள். புதிதாக கமல்ஹாசன் (அதாவது, ஜார்ஜ் புஷ் குணச்சித்திரம்) உருவாக்கி இருக்கலாம்.
லாஜிக்? மூளைக்கு வேலை உண்டா? படம் பார்த்து களிக்க சிரமப்படத் தேவையில்லை. விஜய்காந்த், விஜய் போன்றவர்கள் நாயகர்களாக வரும் சினிமா போலவே இதுவும் ஜாலியாக ரசிக்க வேண்டியது.
திரைப்படத்தின் இசை, பாடல்கள்? வெளியாகுவதற்கு முன்பு ‘உலக நாயகனே’ & ‘கல்லை மட்டும் கண்டால்’ ரசித்தது. படத்தில் மல்லிகா ஷெராவத்தின் காபரே தவிர எந்தப் பாட்டுமே ஒட்டவில்லை. குறிப்பாக, அலகிட்டு அந்தரத்தில் தொங்கும்போது அரற்றத்தான் இயலுமே தவிர வாயசைக்க கூட முடியாது என்பது போல் உறுத்தலான இடையூறுகள்.
எத்தனை பாடல் ஒட்டுமாங்கனிகள்? ‘கல்லை மட்டும் கண்டால்’ குறித்து ஏற்கனவே பலர் சொல்லிவிட்டார்கள். படத்தின் இறுதியில் வரும் ‘உலக நாயகனே’ கூட ‘தில் மாங்கே மோர்’ ஹிந்திப்படத்திற்காக ஹிமேஷ் ரேஷமையா ஏற்கனவே இட்டதை திருப்பி சுட்டதுதான். தசாவதாரத்தில் பாடல்களே தேவையில்லை என்பது வேறு விஷயம்.
டி20 ஆட்டம் தொலைக்காட்சியில் காட்டுறாங்க; டி10 போக கூப்பிடுறாங்க! என்ன செய்யலாம்? டி20 பாருங்க. கடைசி ஒவர் வரைக்கும் விறுவிறுப்பாக இருக்கும். யாரு மேட்ச் – ஃபிக்சிங் செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது. இங்கே கமல் சாகமாட்டார் என்பது கோலிவுட் நியதி.
அந்த முதல் பதினைந்து நிமிடம்? ‘பள்ளிகளில் நாடகம் நடத்தும் போது கடல் காட்சி இருந்தால் நீல நிற புடவையை ஆட்டி கடல் உணர்வை ஏற்படுத்துவார்கள்‘ என்று மாதவன் சொல்வது போல்; சீரீயஸ் காட்சிகளில் கமல் அழுது காமெடியாக்குவது போல் பல்லிளித்திருக்கிறது.
அப்படியானால் கிராஃபிக்ஸ்? தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்காமல் தடுப்பதில்தான் ‘உளவுத்துறை’யின் சூட்சுமம் என்பதாக கலக்கல் மேக்கப், சூப்பர் கிராஃபிக்ஸ் என்று சிலாகிக்காமல் இருப்பதில்தான் அந்தந்தத் துறையின் வெற்றி இருக்கிறது. பல்ராம் நாயுடுவும் கோயிந்துவும் பேசும் காட்சிகளில் கண்ணாடி பிரதிபலிப்பு, இறுதிச் சண்டை என்று பல இடங்களில் இருப்பதே தெரியல.
பத்தில் ஒட்டாதது எவர்? ஹீரோயிச கோவிந்த் இராமசாமி
பத்தில் நம்பமுடியாதவர் எவர்?ரொம்பவே அப்பாவியாக விபத்தை உண்டாக்கியவர் எவர் என்று கூட பார்க்காத கலிபுல்லா கான்
வெறுப்பேற்றுபவர்? ‘செத்துத் தொலையேண்டா’ என்று அவஸ்தைப்பட்டு, தமிழ் பேசத் தெரியாதது போல் சரளமாக அளவளாவும் அவ்தார் சிங்
தோற்றத்தில் பின்னி பெடலெடுப்பவர்? ஜப்பானியர். நடை, உடை, சண்டை எல்லாம் தூள். ஆங்கிலம் & தமிழ் பேசும் இடங்களில் மட்டுமே கமல் தலைதூக்குகிறார். மற்ற இடங்களில் ஏதோ ஒரு சப்பானிய வீரர் மட்டுமே இருக்கிறார்.
அசத்தல் மன்னர்? க்றிஸ்டியன் ஃப்ளெட்சர். கமல் எட்டிக் கூட பார்க்காமல் தூர நிற்கும் அமெரிக்க டாலருக்கு டஜன் கொலைகாரர்.
படம் பொலிடிகலி கரெக்டா? இறை மறுப்பாளர்களும் குற்றம் காண்கிறார்கள். நம்பிக்கையாளர்களும் ‘சூ’ கொட்டுகிறார்கள். அப்படியானால் நிச்சயம் ‘pc’.
சின்னத் திரையில் வரும்வரை காத்திருக்கலாமா? வேண்டாம். அத்தனை விளம்பரங்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் கீழே ஓடும் துணுக்குகளுக்கு நடுவே பார்ப்பது தண்டனை. எனினும், குறுவட்டு வரும் வரை காத்திருக்கவும். அவசியம் 70 எம்.எம்.மில் பார்க்கும் நிர்ப்பந்திக்கத்தக்க பிரும்மாண்டம் இல்லை என்றாலும், வெள்ளித்திரையில் பார்த்தால் கொட்டாவி வராது.
படம் பார்ப்பதற்கு முன் காபியா? ஜாக் டேனியல்ஸ் சிறந்ததா? காது குளிக்குமளவு வசனமழை பொழிவதால் காபி சிறந்தது; ஆனால், அதன் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஓட்டைகள் விகாரமாகும் என்பதால் ஒரு பெக் ஜாக் டேனியல்ஸ் உகந்தது. சுருக்கமாக ஜாக் டேனியல்ஸ் அடித்துப் போனால் அவ்தார் சிங் அழும்போது சிரிக்கலாம்; காப்பி அடித்துப் போனால் அடுத்த கேள்விக்கான பதில் வரும்.
படத்தில் கமல் தவிர குறிப்பிடத்தகுந்தவர்? அலுவல் சகாவாக வந்து கோவிந்தை வீட்டில் வைத்துக் காட்டிக் கொடுக்கும் சுரேஷ். கை கால் ஆட்டி, முகத்தில் அஷ்ட கோணல்களையும் கொணர்ந்து சிறந்த மேடை நாடகத்திற்கான கூறுகளை விளக்கியிருக்கிறார்.
இந்த மாதிரி பதிவுகளை ‘திரைப்படங்கள் வந்ததுமே இணையத்தில் அவற்றை நாராகக் கிழிப்பவர்கள் எழுதுவது எனக்குப் பெரும்பாலும் புரிவதில்லை’என்றிருக்கிறாரே ஜெயமோகன்? எனக்கு தமிழ் இலக்கிய விருதுகள் குறித்த ஞானம் மிக மிகக் குறைவு.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde