Tag Archives: இன்ஸ்டா

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்

தமிழில் கடித இலக்கியம் பிரபலம்.
கி.ரா.வுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள், அம்பேத்கரின் கடிதங்கள், வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்து, பகிரங்கக் கடிதங்கள், கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் என்று பெரிய பட்டியல்.

அது போல் சமூக ஊடகங்களில் வெளியான சுவாரசியமான உரையாடல்கள், பின்னூட்டங்கள், கவுண்ட்டர் கொடுத்து போடும் அதிரடி பதில்கள் – போன்றவற்றை வருடா வருடம் ஒருவர் தொகுத்து நூலாக்க வேண்டும்.

விகடன் வலைபாயுதே போல் தெரிந்தவர்களை மட்டும் கவனிக்காமல், (எந்தப் பத்திரிகை) வலைப்பேச்சு போல் தற்கால வம்புதும்புகளை செய்தித் துணுக்கு போல் சேகரிப்பதோடு நிற்காமல்…

அந்தந்த வாரத்தில் வலைஞர்களை

  1. கொதிப்புயரச் செய்து கொந்தளிக்க வைத்த நிகழ்வுகளுக்கான பன்முகப் பார்வை
  2. கவனம் பெற்ற நூல்; விமர்சனத்திற்குள்ளான புத்தகம்
  3. மீம்; கிண்டல் படங்கள்; கேலிச் சித்திரங்கள்
  4. நாலே வார்த்தையில் நறுக்குத் தெறித்தது போன்ற பின்மொழி
  5. வாதங்கள், பிரதிவாதங்கள்; காரசாரமான கருத்து வசனங்கள்
  6. கம்பீர் முதல் கவின் வரை – பிரமுகர் தகவல் குறித்த முத்துகள்
  7. மாமல்லன் போல் ஒரு சிக்கலை மட்டும் ஒரு தரப்பில் இருந்து கையில் எடுக்காத நடுநிலை ஸ்ட்டேஸ் க்வோ மொண்ணைத்தனம்

ஒரு வருடத்திற்கு ஒரு வெளியீடு.
கிண்டில் + அச்சு நூல்.
அதிக பட்சம் 250 பக்கங்கள்.
தமிங்கிலம் – எனவே ஆங்கிலமும் பரவலாக எட்டிப் பார்க்கும்.

பிரிட்டானிக்கா, மலையாள மனோரமா இயர் புக் எல்லாம் அந்தக் காலம்.
இந்தத் தொகுப்பு ஜென்-ஆல்ஃபா, ஜென்-Z காலம்.

தலைப்பிற்கான உரை : 
செப்புதலையும் வினாவுதலையும் வழுவாமற் போற்றுக. (நன்றி: தமிழ் எண்ணம்: தொல்காப்பியரின் ‘வினாவும் செப்பும்’: கருத்தாடல் நோக்கு )

களவுபூசல் – லடாய் ப்ளே

ஜிம்பாப்வே இன்னும் கிரிக்கெட் ஆடுகிறது. தெரியுமா?

எப்படி தெரிய வைப்பது… இப்படித்தான்!

அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.

அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.

இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.

இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?

எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:

  1. ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
  2. ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
  3. மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
  4. ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்

சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.

பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.

அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?