அனுபவம் இல்லாத ராஜா

ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.

ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.

பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.

சுற்றுலா நகைச்சுவை

பாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.

“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது!”

வரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்!”

இரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்?”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”

நானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்

ஆக்கிரமிப்பு – அணில் – அழகு

Squirrel_Eating_Bird_Feeder

வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறைய மரங்கள். அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நீர்நிலை. அற்ற குளமாக இல்லாததால் அறுநீர்ப் பறவைகள் எக்கச்சக்கம். குயில், வாத்து, வாலாடி என்று கலவையாக என்னுடைய முற்றத்தில் எட்டிப் பார்க்கும். பழுப்பு நிறத்தில் மரத்தோடு மரமாக கலந்திருக்கும் முன்றிலை அடர் சிவப்பிலும் வெளிர் நீலத்திலும் வண்ணமயமாக்கும். எங்கள் இடத்தில் வீடு அமைத்திருப்பதற்கு பரோபகராமாக கொஞ்சமாவது தானியம் இடலாமே என்று கேட்பது போல் கீச்சிடும்.

நானும் காஸ்கோ சென்று இருப்பதற்குள் பெரிய மூட்டையாக பறவை உணவு வாங்கி வந்தேன். அதை நாள்தோறும் இட்டு வந்தேன். இப்பொழுது புதிய விருந்தினர்கள் வந்தார்கள். மொட்டைச் சுவரில் போவோர் வருவோரை வம்புக்கு இழுக்கும் வேலையற்ற தமிழக இளைஞர்கள் போல் அணில்கள் அமர்ந்திருந்தன. மூன்று பேர் திண்ணைப் பரணில் உட்கார்ந்து கொண்டு கிட்ட நெருங்கும் தேன்சிட்டுகளையும் நாகணவாய்களையும் விரட்டி விட்டு, சூரியகாந்தி விதைகளை மொக்கிக் கொண்டிருந்தன.

இந்த அணில்களின் முதுகில் இராமர் போட்ட கோடுகள் இல்லை. சேதுத் திட்டத்திற்கு உதவாததால் கோடுகள் இல்லாத பெரிய இராட்சதர்கள். கிட்டப் போனால் ஓடி விடும். தள்ளிப் போனபின், தீனிக் கலத்தில் குடி கொள்ளும். எனவே, பறவைகளுக்கு… மன்னிக்க அணிற்குஞ்சுகளுக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி வைத்தேன்.

அந்தப் பெரிய பை நிறைய பறவை தானியம் அம்போவென்று கார் நிறுத்தும் கொட்டகையில் இறுக்கிக் கட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பட்சிகளுக்காக நல்லதொரு கலயம் கிடைக்கும்வரை, அணிற்பிள்ளைகள் திருடமுடியாத கலயம் கிடைக்கும்வரை, தானியத்தை அங்கேயே வைத்திருப்பதாக திட்டம்.

நேற்று காரை நிறுத்த கொட்டகைக்குள் நுழையும்போது அணிலை பார்த்த மாதிரி சம்சயம். நடுநிசியில் கண்ணாடி பார்த்தால் ஆவி தெரிவது போல், மனைவியின் கைப்பக்குவத்தில் ருசி தெரிவது போல், நிரலி சரிபார்ப்பவருக்கு பிழை தெரிவது போல், இதுவும் இல்லாத ஒன்று. நம் மனப்பிரமை என ஒதுக்கினேன்.

மனம் ஒப்பவில்லை. தீவிர ஆராய்ந்ததில், மூலத்தையே கண்டுபிடித்து விட்டிருந்தது அணில்கள். ஆதார மூட்டைக்குள்ளேயே சென்று சாப்பிட்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. கார் கொட்டகை திறக்கும்போது நுழைவது; அதன் பின் இரண்டு காரும் செல்வதற்குள் தப்பிச் செல்வது. முழு தானியங்களும் கிட்டத்தட்ட அம்பேல்.

மனிதனுக்கு ஆறறிவு என்று கண்டுபிடித்த தமிழர், அணிலுக்கு எத்தனை அறிவு என்று அறிந்திருக்கிறார்கள்?

Schadenfreude in Tamil

பிடிக்காதவர்களை மட்டம் தட்டும் பிரயோகங்கள் என்ன? ஆங்கிலத்தில் carpetbaggers and scalawags என்பார்கள்.

1. சோப் போடுதல்
2. காக்கா பிடித்தல்
3. குல்லாப் போடுதல்
4. சொம்பு அடித்தல்
5. முதுகு சொறிதல்
6. நெஞ்சை நக்குதல்
7. விளக்கு பிடித்தல்
8. தலையாட்டி பொம்மை
9. ஆமாம் சாமீ
10. அல்வா கொடுத்தல்.
11. துதி பாடுதல்
12. அடி வருடுதல்

எந்த வார்த்தைகள் கொண்டு மற்றவரின் சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிடலாம்?

அறுவடை இல்லாத விளைச்சல் திருவிழா

செம்புற்றுப் பழம் விளைவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதை அறுவடை செய்வதை கொண்டாட்டமாக செய்திருக்கிறார்கள். அறுவடை முடிந்தவுடன் பொங்கல் திருநாள் போல், கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஸ்டராபெரி திருநாள் வருகிறது.

கலிஃபோர்னியாவில் இருந்தும் ஃப்ளோரிடாவில் இருந்தும் இறக்குமதி ஆகிற காலகட்டத்தில் உள்ளூரில் சாஸ்திரத்திற்காக காக்காவிற்கு பிண்டம் வைப்பது போல் ஸ்டிராபெர்ரி திருநாளும் சந்தையாக மாறி இருக்கிறது. பொம்மைகளுக்கு ஆடை தைப்பவர்களும், ஊசிமணி/பாசிமணி விற்பவர்களும், இரும்புக்கொல்லர்களும் தங்கள் தொழிலை கலையாக காண்பிக்கும் விழா.

முன்னொரு காலத்தில் கேமிரா கிடையாது. புகைப்படம் எடுக்க முடியாது. ஓவியம் வரைந்து, தங்களை பிரதிபலிப்பது புகழ் பெற்ற பண வருவாய் மிக்க உத்தியோகமாக இருந்தது. இன்றோ ஓவியம் என்பது கலை வெளிப்பாடு. இயந்திரங்களை வைத்து நகைகளும், பாத்திரங்களும் தயாரிக்கும் காலத்தில் கொல்லர்களும் தச்சர்களும், தங்கள் புராதன பணியகத்தை கலைக்கூடமாக மாற்றி செய்முறை விளக்கம் அளித்து பொழுதுபோக்கு சாதனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை.

நான் கணினி நிரலியாளன். இன்னும் கொஞ்ச காலத்தில் வேர் அல்காரிதங்கள் கொண்டு மென்கலன்கள் தானே தயாரித்துக் கொள்ளும் நிலை வரும்போது, இப்படித்தான் if தீர்மானம் எழுத வேண்டும் என்று பூங்காவில் கடை விரித்து டெமோ தர வேண்டுமோ!?

Westford_Arts_Crafts_Strawberry_Festival_Commons_Summer_Seasons_Harvest

செல்பேசிக்காக பாடலா? கருவிக்காக திரைப்படமா?

பெருந்தலைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொன்றுதொட்ட வழக்கம்.

இந்தியாவில் லக்ஸ் சோப் விளம்பரங்களுக்கும், விலையுயர்ந்த ஆடை வகைகளுக்கும் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வலி நிவாரணி முதல் வீடு விற்பனை வரை செலபிரிட்டி மயம். நைக்கி, ரீபாக் என்றாலே விளையாட்டு நட்சத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள். ‘யெஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி’ போன்ற இனிப்பு பானங்களுக்கு புகழ்பெற்றவர்கள் தேவை. ஆனால், செல்பேசி வாங்கும்போது “இன்னார் சொன்னார்… நல்லா இருக்கும்” என்று நினைத்து வாங்குவதில்லை.

கணினியின் தரம் என்ன? ஆண்டிராய்ட் இருக்கிறதா? நமக்கு தோதுப்படுமா? சி.பி.யூ எப்படி? புத்தம்புதியதாக என்ன தருகிறார்கள்? இப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தது ‘ஒலியும் ஒளியும்’ காலம். இன்றைய எம்.டி.வி. நிஜ நாடகங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரைக் கவர்வது போல், சாம்சங் நிறுவனம் பாடகரைக் கொண்டு புதிய செல்பேசியை விற்கிறது.

ஜே-சீ வெளியிடும் அடுத்த ஆல்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்4 வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும். அவர்களின் செல்பேசி மூலமாக மட்டுமே கிடைக்கும். இளையராஜா ரசிகராக இருப்பது போல் ஜே-ஸீ வெறியர்களுக்கு சாம்சங் தூண்டில் போட்டு இருக்கிறது.

விண்டோஸ்8 வாங்கினால் டெம்பிள் ரன் கிடைக்காது. ஐஃபோன் வாங்கினால் வரைபடம் சரியாக வராது. கூகிள் ஆண்டிராய்ட் செல்பேசிகளில் ஆப்பிள் ஐபாடில் இருப்பது போல் கலை நுணுக்கமும் ஆக்க மிளிர்வும் கொண்ட ’ஆப்ஸ்’ இருக்காது. இதையெல்லாம் மறைக்க, நம் குரல்மொழியை கண்டுபிடிக்க இயலாத செயலியின் செயலற்ற ஆற்றலை அமுக்க ஜெஸிகா ஆல்பா, சாமுவேல் ஜாக்ஸன் வகையறாக்கள் தேவைப்படுகிறது.

இசை என்றால் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் என்னும் மனப்பதிவை உடைக்கவும் இந்த ஜே-ஸீ உடன்படிக்கை உதவுகிறது. வெறுமனே வந்து மைக்ரோசாஃப்ட் உபயோகியுங்கள் என்று சொல்வதற்கு பதில் எக்ஸ் பாக்ஸ் வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய அபிமான சீரியலைப் பார்க்க முடியும் என்பதன் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது.

நோய்பலன்: மரபணு மூலம் முன்னுரைத்தல்

செட் தோசையும் கெட்டிச் சட்னியும் சாப்பிடப் போகிறேன். சூடாக ரவா கேசரி செய்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படியே, அதையும் வரவைத்து சாப்பிடுகிறேன்.

அதே மாதிரி புற்றுநோய் வந்து இருக்கிறது. அதற்காக மருத்துவரிடம் செல்கிறேன் மரபணு அலகிடுதலுக்கு (Genome Scan) அனுப்புகிறார்கள். அலகிட்டதில் அல்ஜெய்மர்ஸ் வருவதற்கான அறிகுறி இருப்பது தெரியவருகிறது. இதை நோயாளியிடம் சொல்லலாமா? மறைத்து விட வேண்டுமா?

ஸ்டக்ஸ்னெட் வைரஸ் தாக்குதலுக்கு கணினி உள்ளாகி இருக்கிறது. நீக்குவதற்கு நார்ட்டன் கிருமிநாசினியை உபயோகிக்கிறோம். ஸ்டக்ஸ்னெட் நச்சுநிரலை மட்டுமா நீக்குவோம்? கூடவே வேறு என்ன எல்லாம் நச்சுப்பொருள் நம் கணினியில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறதோ… பார்த்து களைந்து விடுகிறோம்.

இருமலுக்காக டாக்டரிடம் சென்றால் கூட நிம்மோனியா இருக்கிறதா என்று பரிசோதிப்பார். அதே மாதிரி Genome Scan செய்யும்போது லூ ஜெரிக் நோயோ, மறதி வியாதியோ வரும் அபாயம் உண்டு என்று அறிந்து வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?

ஒரு சாரார் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்கள். நாளைக்கு வரக்கூடிய உபாதையை இன்றே அறிவதால், வருமுன் காப்போனாக அரண் அமைக்கலாம். மருந்துகள் தரலாம். கவனமாக பக்கவிளைவுகளை கையாண்டு கொடிய நோயில் இருந்து காப்பாற்றலாம்.

இன்னொரு சாரார் நிம்மதி போய் விடும் என்கிறார்கள். மேலும் மூன்று இடத்தில் ஒரே ஒருத்தரின் மரபணுவை அலகிட்டதில், மூன்று விதமான முடிவுகள் வந்திருக்கிறது. ஒரு கணினி நிரலி இவருக்கு ‘புற்றுநோய் அபாயம் அதிகம்; ஆனால், ALS வாய்ப்பு குறைவு’ என்கிறது. இன்னொன்று நேர் எதிராக ‘புற்றுநோய்க்கு சான்ஸே இல்ல; ஆனா, நிச்சயமாக ALS வந்துவிடும்’. இப்படி மரபணு வினைச்சர முரண்பாடுகளைக் களையும் வரையில் மக்களை பயமுறுத்தக் கூடாது. நமக்கு என்ன தேவைக்காக அலகிடுகிறோமோ அதை மற்றும் தெரிவித்தால் போதும்.

யாராவது பதில் போட்டிருக்கிறார்களா என்று அறிய ஃபேஸ்புக் பக்கம் வந்தேன். அதை மட்டுமா செய்கிறேன்? விளையும் புற்றுநோயை முளையிலேயே அறிந்து கொண்டால் என்ன போச்சு?

அட்ரெனலின் ஆந்திரா! தெகிடி தெலுங்கானா

இந்தியாவின் எந்த மொழியினரையும் விட தெலுங்கு சம்பாஷணாவாதிகள் கொஞ்சம் தீவிரமானவர்கள். சத்யம் ராமலிங்க ராஜுவின் வாழ்க்கையை பார்த்து இந்த எண்ணம் தோன்றியது.

புகழ் பெற்றவர்களும் பதவியில் இருப்பவர்களும் தந்திரமிக்கவர்களாக இருப்பதில் எதுவும் ஆச்சரியமில்லை. ஆனால், அன்றாட வாழ்வில் பார்க்கும் அனேக தெலுங்கர்களும் தங்கள் சொந்த சகோதரர்களுக்காகவும் சுய முன்னேற்றத்திற்காகவும் பிரும்மாண்டமான இலட்சியங்களை லாலிபாப் சப்புவது போல் முன்னெடுக்கிறார்கள்.

ஹாரி பாட்டர் படித்த ஹாக்வோர்ட்ஸ் பள்ளியில் நாலு குழுக்கள் இருக்கும். இயற்கையாக திறமை வாய்ந்தவர்களும் தன்னொழுக்க எழுச்சியும் மிக்கவர்கள் கிரிஃபிண்டார் (gryffindor) பிரிவில் இணைவார்கள். புத்திசாலியாக இருந்தால் ”ரேவன்கிளா” (ravenclaw). நட்புணர்வும் கடும் உழைப்பும் குணாதிசயமாகக் கொண்டவர்களை ”ஹஃபில்பஃப்” (hufflepuff) குடும்பமாக பிரிக்கிறார்கள்.

கடைசி பிரிவான ஸ்லிதெரின் (slytherin) ஆந்திராவிற்காகவே உருவானது போல் படுகிறது. டைனோசார் அளவு மாபெரும் குறிக்கோள்களை அடைவதற்கு ஆசையும் தீவிரவாதியின் மன உறுதியும் மரபணுவிலேயே ஒருங்கே வாய்க்கும் ஆசைக்காரர்களை ஸ்லிதெரிண் என்கிறது ஹாரி பாட்டர் புத்தகம்.

பிவி நரசிம்ம ராவ் போல் நாற்காலி பிடிப்பதில் ஆகட்டும், தினசரி நடவடிக்கையாக பங்குச்சந்தை வாங்குவது ஆகட்டும், சத்யம் ராஜு போல் அமெரிக்க என்ரான் வகை ஊழல் ஆகட்டும்… தில்லியிலும் பெங்களூருவிலும் பாஸ்டனிலும் உடன் வேலை பார்த்த இந்திய பிரதேசக்காரர்களுள் ‘கொல்ட்டு’ என்று கோபமாக விளிக்கப்படுபவர்கள் எப்பொழுதுமே பேரமைதி கலந்த சாதுரியத்துடம் மௌனமாக முன்னேறி இருப்பதை பார்க்கிறேன்.

இதை ஹார்வார்டு பல்கலை case study செய்ய வேண்டும் என்று சாந்தமாக பதிலளித்தால் நீங்கள் Andhraite.

கணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்

இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.

இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.

“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”

“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”

“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”

“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”

வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.

சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.

வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”

சூது கவ்வும் x எதிர் நீச்சல்

மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.

காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.

இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.

நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.

வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.

எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.

”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.