Art Appreciation Series – PA Krishnan : Part III

பகுதி ஒன்று | இரண்டு தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்

1

ஓவியத்திற்கும் சொல்லிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்று என்னை ஒருவர் சமீபத்தில் கேட்டார். இரண்டுக்கும் இடையே மிக முக்கியான ஒரு வேறுபாடு எனக்கு இதுதான் என்று தோன்றுகிறது. சொல்லின் எல்லைகள் பரந்தவை. நமது எண்ணங்கள் போல. எழுதிக் கொண்டே போகலாம் – மகாபாரதம் போல. ஆனால் ஓவியத்திற்கு எல்லைகள் அவ்வளவு பரந்தவை அல்ல. பார்வைக்கு உள்ள எல்லைகள் அனைத்தும் அதற்கு உண்டு. ஒரு சட்டத்திற்குள், அல்லது ஒரு சுவருக்குள், கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. ஆனால் எழுத்தும் ஓவியமும் வெளிப்படுத்துபவை எல்லைகளைக் கடந்தவை. ஒரு சிறிய, சிறந்த கவிதை இந்த உலகையே அடைத்து வைத்துக் கொண்டு நம்மிடம் அதை காட்ட முற்படுவது போல ஒரு சிறந்த ஓவியமும் தான் காட்டுவது தனது எல்லைகளை மீறியது என்பதை வெளிப்படுத்த முயல்கிறது.

ஓவியம் எல்லைகளைக் கடந்தது என்பதை அறிந்து கொள்ள மனிதன் பல நூற்றாண்டுகளை கடந்து வர வேண்டியதாக இருந்தது. இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அவன் இரண்டு அடிகள் முன் வைத்தால் ஒரு அடி பின் வைக்க வேண்டிய கட்டாயத்தை பல முறைகள் எதிர் நோக்கினான். இலத்தீன் மொழியில் ஒரு பழமொழி உண்டு: quod legendibus scriptura,..hoc idiotis ..pictura – ஓவியம் கடவுளின் சொற்களை முட்டாள்களுக்கு (படிக்காதவர்களுக்கு) விளக்க முற்படுகிறது. இந்தப் பழமொழியில் கடவுள் என்ற சொல்லை எடுத்து விட்டு அரசு, அரசன், ஆண்மகன், ஆண்டை, ஆசிரியன், போன்ற பல சொற்களைப் போட்டுக் கொள்ளலாம். அவை ஓவியம் எவ்வாறு பல்வேறு கால கட்டங்களில் நோக்கப் பட்டது என்பதை ஒருவாறு விளக்கும். ஓர் ஓவியத்தைப் பார்த்து அதை விளக்க முயல்பவனுக்கு ‘கலை விமரிசகன்’ என்ற பதவி கிடைத்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.


2

ஜாடி ஓவியங்களைப் பற்றி நான் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஓவியங்களில் இரு வண்ணங்கள்தான் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகின்றன. ஒன்று கறுப்பு. மற்றது சிவப்பு. முதலில் சிவப்பு ஜாடிகள் மீது கறுப்பு வண்ணத்தின் ஓவியங்கள் வரையப் பட்டன. பின்னால் பின்புலம் கறுப்பில் தீட்டப் பட்டு ஜாடியின் வண்ணமே ஓவியத்தின் வண்ணமானது. கிரேக்க ஓவியங்களில் எவ்வாறு பல ஜாடி ஓவியங்களோ அதே போன்று ரோமாபுரி ஓவியங்களில் பல fresco என்ற சுவரோவியங்கள். Fresco என்ற சொல் buon fresco என்ற இத்தாலிய சொல்லிலிருந்து வந்தது. “உண்மையாகவே புதிது” என்ற பொருள் கொண்டது. இந்த முறையில் காயாத சுவரில் வண்ணங்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டப் படுகின்றன. இதனால் சுவர் காயக் காய வண்ணங்களும் சுவரின் மேற்பூச்சின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன. பல வருடங்கள் அழியாமல் இந்த ஓவியங்கள் இருப்பதற்கு fresco முறை ஒரு முக்கியமான காரணம்.

Fresco ஓவியங்களில் மிகப் புகழ் பெற்ற ஓவியங்கள் பாம்பெய் (Pompeii) நகரத்தைச் சேர்ந்தவை. கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் ஒரு முக்கியமான நகரமாக பாம்பெய் இருந்தது. இந்த நகரில் பணம் படைத்தவர் பலர் வீடுகளின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. ரோமப் பேரரசின் மற்றைய நகரங்களின் வீடுகளிலும் இத்தகைய ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் பிழைத்தவை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். பாம்பெய் நகர ஓவியங்கள் பிழைத்த ஓவியங்கள். பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்.


3

பாம்பெய் வெஸுவியஸ் மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு நகரம். வெஸுவியஸ் மிக உயரமான மலை இல்லை என்று பாம்பெய் நகரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். அமைதியான மலை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கி. பி. 79 ம் ஆண்டு அந்த மலையில் உள்ளிருந்து தீக்குழம்புகள் பீரிட்டுக் கிளம்பின. பாம்பெய் நகர மக்கள் அவர்கள் தினமும் பார்த்துக் கொண்டிருந்த மலை எரிமலை என்பதை அறியும் முன்பே எரிமலைக் குழம்பும் அதிலிருந்து வெடித்துக் கிளம்பிய கற்களும் அவர்களைப் புதைத்து விட்டன. ஒரு முழு நகரமே எரிமலைச் சாம்பலில் புதையுண்டு அழிந்து விட்டது.

புதைந்த நகரம் மக்கள் மனங்களில் பல நூற்றாண்டுகள் இருந்து, தேய்ந்து, மறையத் தொடங்கியது. முழுவதுமாக மறைந்தும் இருக்கும். மறையாததின் காரணம்1748 ம் வருடம் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கலாம் என்று ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நினைத்தது. ஆனால் அவரே ஒரு முழு நகரமே சாம்பலுக்குக் கீழ் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. முதலில் தோண்டியவர்கள் சாம்பலுக்கு கீழே இருக்கும் கலைப் பொருள்களுக்காகத்தான் தோண்டினார்கள். அவர்கள் தோண்டிய முறை அவ்வளவு அறிவியற்பூர்வமாக இல்லாததால் பல கட்டிடங்களும் அவற்றின் சுவர்களில் இருந்த ஓவியங்களும் அழிக்கப் பட்டன. சில சுவர்கள் அழிந்தன. ஆனால் அவற்றின் மீது தீட்டப் பட்ட ஓவியங்கள் மீட்டெடுக்கப் பட்ட்டு அருகில் இருந்த நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தை அடைந்தன.

நெப்போலியனும் பிரெஞ்சுக்காரர்களும் நேப்பிள்ஸ் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் (1805-1815) தோண்டும் முறை சீரடைந்தது. இதற்கு பின்பு Fiorelli, Spinazzola போன்ற அகழ்வாளர்களில் முயற்சியால் இன்று பாம்பெய் நகர கட்டிடங்களில் பல அன்றிருந்தபடி இன்றும் இருக்கின்றன. அவற்றின் சுவரோவியங்களும் பிழைத்து விட்டன. பிழைத்த ஓவியங்கள் எல்லாம் பிழைக்க வேண்டிய ஓவியங்கள் என்று சொல்ல முடியாது என்று கலை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு இயங்கியது என்பது பாம்பெய் நகரத்திற்குச் சென்றால் தெரியும். நமது தமிழ் நகரத்தில் சுவரொட்டிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நகரத்தில் சுவரோவியங்கள்.

இன்று ரோம் நகரத்திலிருந்து காலையில் புறப்பட்டால் பாம்பெய் நகரத்தைப் பார்த்து விட்டு இரவில் திரும்பி விடலாம். ஒரு நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்திற்கு சென்று வருவதற்கு ஈடானது இந்தப் பயணம். ஆனால் செல்பவர்களில் பெரும்பாலானவர் இதை உணர்ந்து செயல்படுவதில்லை என்பது வருத்தப் பட வைக்கும் உண்மை.


4

ரோமப் பேரரசின் கலை கிரேக்கக் கலையை முழுவதும் சார்ந்தது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ரோம எழுத்தாளரான பிளினி தனது நூலில் கிரேக்க ஓவியங்கள் பலவற்றை அவர் காலத்து ஓவியர்கள் மறு பதிவு செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இவற்றில் ஒரு ஓவியத்தை நான் நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பார்த்தேன். பாம்பெய் சுவரோவியம் அப்படியே பேர்த்தெடுக்கப் பட்டு நியூ யார்க்கில் வைக்கப் பட்டிருக்கிறது. சிறுவயதில் நான் பார்த்த நாடக அரங்குகளின் திரைகளை நினைவு படுத்திய இந்த ஓவியம் ஒரு முக்கியமான ஒன்று என்பது எனக்கு இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக Janson எழுதிய ‘கலையின் வரலாறு’ புத்தகத்தைப் படிக்கும்போது தெரிய வந்தது. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு பரப்பின் கட்டமைதியைப் (texture) பற்றி நன்கு அறிந்தவன் என்று அவர் குறிப்பிடுகிறார். மூன்றாவது பரிமாணத்தைப் பற்றிய ஒரு புரிதலும் அவனுக்கு இருந்திருக்கிறது. ஆனால் ஓவியத்தில் கதவுகளும் தூண்களும் சாளரங்களும், சுவர்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. கலைஞன் இன்னும் வெளியின் ஆழத்தை (spatial depth) சித்தரிப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

ரோமக் கலைஞர்களுக்கு கை வராத மற்றொரு ஒத்தி ஒளியால் ஏற்படும் நிழல் விளைவுகளை வரைவது. இதற்குச் சான்று நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு சுவரோவியம். இந்த ஒவியத்தில் பீச் பழங்களும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி ஜாடியும் தீட்டப் பட்டிருக்கின்றன. பழங்களின் வழுவழுப்பு அற்புதமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஜாடியில் இருக்கும் தண்ணீர் அதற்கு ஒளி ஊடுருவும் தன்மை இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளி எந்தப் பக்கத்திலிருந்து வருகிறது, அது பொருட்களின் மீது பதிக்கும் மாற்றம் என்பவற்றையெல்லாம் இந்த ஓவியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியாது. பார்க்கும் உலகத்தை ஒரு நிலைப்பாங்கோடு (consistence) பார்ப்பதற்கு ஓவியன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடக்க வேண்டியிருந்தது.


5

ரோமச் சுவரோவியங்களில் என்னைக் கவர்ந்த ஓவியங்களில் சில பாம்பெய் நகரத்தில் வரையப் படாதவை. கன்னி ஒருத்தி மலர் கொய்வது என்ற ஓவியம். நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது. காலத்தை கன்னி உருவகப் படுத்துகிறாள். நமக்குத் தெரிவது அவளது பின்புறமும் முகத்தின் ஒரு பகுதியும்தான். புருவத்தின் மேடு தெரிகிறது. அழகிய கழுத்தின் சரிவு தெரிகிறதுஅவள் தன்னைச் சுற்றியிருக்கும் எளிய உடை அவள் நடப்பதால் சலனமுறுவது தெரிகிறது. நடந்து கொண்டே செடியிலிருந்து பூக்கொய்யும் நளினம் தெரிகிறது. முகம் சரியாகத் தெரியாக விட்டாலும் இவள் பேரழகியாக இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரிகிறது. ஒரு கலைஞன் உத்திகளை ஒரே பாய்ச்சலில் தாண்டி அழியா நிலையை அடைய முடியும் என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

மற்றொரு ஓவியம் Faun என்ற கொம்பும் வாலும் உள்ள கிராம தேவதை. இந்தத் தேவதை ஒரு குழந்தைத் தேவதை. கண்களைச் சாய்த்துக் கொண்டு கள்ளமற்று சிரிக்கும் தேவதை. இந்த ஓவியத்தில் அதன் தலை மட்டும் தெரிவதால் வால் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அதன் கொம்புகளும் தெரியவில்லை. அது தனது தலையில் அணிந்திருக்கும் பசிய ஆலிவ் இலைகள் தெரிகின்றன. முன்பற்கள் தெரிகின்றன. கலைந்திருக்கும் தலை மயிர். சிறிது வளைந்திருக்கும் காது. பார்ப்பவருக்கு இது குறும்பு மிக்க குழந்தை என்பது உடனே தெரியும். மனிதக் குழந்தையா என்ற ஐயத்தையும் உடனே வரவழைக்கும்.


6

பாம்பெய் பற்றிக் குறிப்பிடும்போது அதன் மொசைக் சித்திரங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. The house of Faunல் இருக்கும் அலெக்ஸாண்டருக்கும் பாரசீக மன்னன் டரயஸிற்கும் நடந்த போரைப் பற்றிய மொசைக் சித்திரம் சுமார் பத்து லட்சம் வண்ணக்கற்களைக் கொண்டு படைக்கப் பட்டது. சுமார்19 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட இந்தச் சித்திரத்தில் அலெக்சாண்டர் பரட்டைத் தலையோடு இருக்கிறான். பிதுங்கி வெளி வந்து விடும் போன்ற கண்கள். கவசத்தில் மெடூஸா – பார்ப்பவர்களைக் கல்லாக்கி விடுபவள். குல்லாயைப் போன்ற தலைக் கவசம் அணிந்திருக்கும் டரயஸ் கண்களில் பயம் ஒளிர்கிறது. அவன் முன்னால் அண்ணனுக்காக தனது உயிரைக் கொடுக்க முற்படும் ஆக்ஸியத்ரெஸ். ஈட்டிகள் சித்திரத்தின் மேற்புறத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஓடும், இறக்கும், உறையும் குதிரைகளும் பின் வாங்குவோமா என்று எண்ணும் பாரசீக வீரர்களும் மற்ற பகுதிகளில் நிரம்பி வழிகிறார்கள்.

மற்றொரு மறக்க முடியாத் மொசைக்கைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரோம் நகரத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கும் (Terme Museum?) இந்த சித்திரத்தில் நடுவில் மெடூஸாவின் தலை தெரிகிறது. காற்றில் பறக்கும் தலை மயிர். கண்களில் பதற்றம். அவள் இருப்பது ஒரு வட்டத்தில். அந்த வட்டத்தைச் சுற்றி ஒரு பெரு வட்டம். அந்த வட்டத்தை நிரப்புவது வரைவியல் வடிவங்கள். முதலில் முக்கோணங்களோ என்று தோன்றுகிறது. கூர்ந்து பார்த்தால் கறுப்பு ஒரு பாதி வெள்ளை ஒரு பாதி கொண்ட சதுரங்கள். மெடுஸா பக்கம் குறுகி, பின் பெருகி விரியும் இந்தச் சதுரங்கள் ஒரு சுழலும் வட்டத்தைப் பார்த்தால் ஏற்படும் அனுவத்தைக் கொடுக்கின்றன. Duchamp போன்ற கலைஞர்கள் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப் பட்ட மொசைக் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பி.ஏ.கிருஷ்ணன்


| |

ADMK Functionaries changed

Dinamani.com – TamilNadu Page

அதிமுக நிர்வாகிகள் மாற்றம்: தலைமை நிலைய செயலாளராக செங்கோட்டையன் நியமனம்

சென்னை, ஆக. 16: அதிமுக தலைமை நிலையச் செயலாளராக கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார் அவர்.

இதுவரை அதிமுக தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.ஜெயக்குமார், மீனவர் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள் மாற்றம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், வரகூர் அருணாசலம், ஆர். சரோஜா, எஸ்.என். ராஜேந்திரன், விஜயலட்சுமி பழனிசாமி, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நிலையச் செயலராக செங்கோட்டையன், மீனவர் பிரிவு செயலாளராக டி. ஜெயக்குமார், மீனவர் பிரிவு இணைச் செயலாளராக கலைமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி நீக்கப்பட்டு, அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.கே. சிவசாமி அந்த மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுப. கருப்பையா நீக்கப்பட்டு, சோழன் சித். பழனிசாமி அப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எம். சுந்தரபாண்டியன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

School dropouts are highest in Bihar & West Bengal

Dinamani.com – Headlines Page

பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத மாணவிகள்: பிகார் முதலிடம்

புதுதில்லி, ஆக.15: பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காத மாணவிகள் எண்ணிக்கையில்

#1. பிகார்
#2. மேற்கு வங்கம்

உள்ளது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பாத்மி திங்கள்கிழமை தெரிவித்தார். இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலமான பதிலில் அவர் கூறினார்.

  • பிகாரில் 10-ம் வகுப்பு வரை முழுமையாக முடிக்காத மாணவிகள் 85.36 சதவீதமாகவும்,
  • 8-ம் வகுப்பு முழுமையாக முடிக்காத மாணவிகள் 79.62 சதவீதமாகவும் உள்ளது.
  • மேற்கு வங்கத்தில் செகண்டரி பள்ளியை எட்டும் முன்பே இடையிலேயே நின்றுவிடும் மாணவிகள் 84.44 சதவீதம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
  • 10-ம் வகுப்பு வரை முழுமையாக முடிக்காத மாணவ, மாணவிகள் சதவீதம் மேகாலயத்தில் 83.24 சதவீதமாக உள்ளது.
  • கேரளத்தில் இந்த சதவீதம் 8.58 சதவீதமாக மட்டுமே உள்ளது என்றும் அவர் சொன்னார்.

    2004-ம் ஆண்டு செப்.30-ம் தேதி வரை நாட்டில் 581 மாவட்டங்களில் 9,292 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்று கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துகான தேசிய நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. 1,21,728 தொடக்கப் பள்ளிகளில் தலா ஓர் ஆசிரியர் மட்டுமே இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  • Thanga Vettai – American Students are Idiots

    ஞாயிறு அன்று ‘செல்வி’யும் ‘லஷ்மி’யும் இல்லாத குறையைப் போக்க ‘ராஜராஜேஸ்வரி’ போன்ற நகைச்சுவை அரங்கேற்றுவது சன் டிவியின் வழக்கம். மேற்கத்திய உலகில் பதின்ம வயதினரிடையே ‘நிஜ நாடகங்கள்’ (ரியாலிடி ஷோ) பிரபலம். ‘இந்தியன் ஐடல்’ புகழ்பெற்று வருவதன் மூலம் ஹிந்தி உலகிலும் ரியாலிடி தொடர் வரவேற்பு அடைந்திருக்கிறது.

    சன் டிவியும் இந்த நிஜம் போன்ற சீரியல்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் தொடக்கம்தான் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தங்க வேட்டை. ஞாயிறு இரவுக்கே உரிய அசுவாரசியத்துடன், புதிய வாரத்திற்கு வலைப்பதிய விஷயத்தைத் தேடும்போது கேட்கப் பெற்றேன்.

    நிஜ நாடக நிகழ்ச்சியை கேட்டு மகிழ:

    Thanga Vettai - American Students are Idiots :: this is an audio post - click to play

    பள்ளிக்கூட ஆசிரியர் என்பது அமெரிக்காவில் விவகாரமான தொழில். குழந்தைகளிடம் ‘இடியட்’ என்னும் வார்த்தையை பிரயோகித்தால், சீட்டு கிழியும் என்று உத்திரவாதமாக பணம் கட்டி ஜெயிக்கலாம். ‘I’ word என்று பயபக்தியுடன் ஹாரி பாட்டரின் ‘யூநோஹூ’ மாதிரி சொல்லவே மிரளுவார்கள்.

    பள்ளி மாணவர்கள் சொல்லிவிட்டால், பெற்றோரை வேலையில் இருந்து கூப்பிட்டு அனுப்பி கண்டித்து அனுப்புவார்கள். அமெரிக்காவை திட்டுவது வெற்றிகரமான நிகழ்ச்சியின் தேவையாக இருக்கலாம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மட்டம் தட்டுவது கீழ்த்தரமான ஜனரஞ்சகத்தை வெளிச்சமிடுகிறது.

    கொஞ்சம் பின்தங்கிய சிறார்களை ‘ஸ்பெஷல் கிட்ஸ்’ என்று விளித்து, சிறப்பு கவனமும் அக்கறையும் செலுத்தி, பாடத்தைப் புகட்ட முயற்சிக்கும் ஆசிரியர்களைத் திட்டி அழகு பார்க்கும் சன் டிவிக்கும், பொய்யை நயம்பட நிகழ்ச்சியில் புகுத்தி போலி சித்திரத்தை உருவாக்கும் ராடான் நிறுவனத்திற்கும் (RADAAN MEDIAWORKS (I) LIMITED), திறம்பட படச்சுருளைத் தொகுக்கத் தெரியாத தங்கவேட்டை தயாரிப்பாளர்களுக்கும் வருத்தம் கலந்த கண்டனங்கள்.

    நீங்களும் அவர்களிடம் பிழையை சுட்டிக் காட்ட:
    info@radaan.tv

    தொடர்பான ஆங்கிலக் குமுறல்:
    Bala’s Blog » Blog Archive » Thanga Vettai – American Students are Idiots

    முன்னாள் பதிவு: வீட்டில் இருந்தால் சன் டிவியில் பார்க்க நினைக்கும் சில நிகழ்ச்சிகள்


    | | | |

    What are the Top Tamil Blogs

    படிக்கவேண்டிய, கவனிக்க வேண்டிய, தவறவிடக் கூடாத, பயனுள்ள, உருப்படியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வெகுஜன ஊடகங்களுக்கு சரியான மாற்றாக, தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும், அதிகம் பேர் வருகை தரும், வாழ்க்கையைப் பதியும், மாற்று நீரோட்டங்களில் தெளியும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயங்கும், யதார்த்தமான, முகப்பூச்சுக்கள்ளற்ற வலைக்குறிப்புகள் எது?

    மூச்சு வாங்குது…

    ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு வலைப்பதிவு தேர்வு செய்யலாம். இருந்தாலும் பொத்தாம்பொதுவாக என்னுடைய எண்ணங்களை முன்வைக்கிறேன். மேலே அலசுவதற்கு முன்னால், டெக்னோரட்டி (படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்) உதவியுடன் தலை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல்: (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சுட்டி தந்தவர்களின் எண்ணிக்கை)

    1. thamizmaNam : தமிழ்மணம் (381)
    2. பத்ரியின் வலைப்பதிவுகள் (72)
    3. Dubukku– The Think Tank (63)
    4. Idly Vadai (58)
    5. துளசிதளம் (44)
    6. Dondus dos and donts (38)
    7. Prakash‘s Chronicle (38)
    8. E – T a m i l : ஈ – தமிழ் (38)
    9. முத்து (தமிழினி) பக்கங்கள் (37)
    10. குழலி பக்கங்கள் (35)
    11. தேசிகன் பக்கம் (35)
    12. மதி கந்தசாமி தமிழ் வலைப்பதிவு (32)
    13. தனித்துவமானவன், உங்களைப் போலவே…! 🙂 (31)
    14. உருப்படாதது (29)
    15. முகமூடி (29)
    16. சசியின் டைரி (28)
    17. என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் (26)
    18. உலகின் புதிய கடவுள் (26)
    19. பொன்ஸ் பக்கங்கள் (25)
    20. மனம் ஒரு குரங்கு (20)
    21. வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு (20)
    22. பாலக்கரை பாலனின் பால்ய பார்வை (19)
    23. Rajni Ramki (17)
    24. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…! (17)
    25. மகரந்தம் (16)
    26. மாயவரத்தானின் வலைப்பூ….Third Vision (16)
    27. பிச்சைப்பாத்திரம் (15)
    28. விடுபட்டவை (15)
    29. எண்ணம் :: ஆசாத் (15)
    30. உள்ளும் புறமும் (13)
    31. தமிழகத் தேர்தல் 2006 (13)
    32. இணைய குசும்பன் (12)
    33. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் (11)

    குறிப்பு: விடுபட்டவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. தங்களின் ??‘ blogs link here எண்ணை சொன்னால் மகிழ்வுடன் தெரிந்து கொள்வேன்.

    ஆங்கில வலைப்பதிவுகளில் கிருபாவின் மண்டையை உருட்ட, தமிழில் அதே மாதிரி எண்ணிப் பார்க்கலாம் என்று ஆராய்ந்ததன் விளைவு.

    தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, இந்த டெக்னோரட்டி அளவிடுதலிலும் குறைகள் உண்டு. பிகே சிவகுமார் போன்ற முக்கியமான பதிவுகள் 11 பேரிடம் இருந்து சுட்டி வாங்கி பின் தங்கிய பட்டியலில் இடம் பிடிக்கும். வம்பு தும்புக்கு போகாமல் நாட்டு நடப்பை அலசும் பதிவுகள் முன்னேறிய நிலையில் இருக்கும்.

    இருந்தாலும், ஓரளவு வாசகர்களின் மனநிலையை படம் பிடிப்பதாக அமைந்திருக்கிறது. சில காலமாய் எழுதினாலும், என்னுடைய மனங்கவர்ந்த எண்ணங்களை எழுதுகிறேன் போன்ற சுவாரசியமான பகிர்வுகள் இந்த மாதிரி தரப்பட்டியல்களில் மெதுவாகத்தான் முன்னேறுகின்றன. துளசியின் பதிவுகள் #5-இல் இருப்பது – காலப்போக்கில், மா சிவகுமாரும் பரவலான கவனிப்பை அடைவார் என்று எண்ண வைக்கிறது.

    ஆனால், பல வருடமாய் எழுதும் நுனிப்புல் இன்னும் இடம்பெறாதது ஆச்சரியம். பலரின் பதிவுகளில் தொடர்ச்சியாக பின்னுட்டங்களும், அனைத்து இணைய தாளிகைகளிலும் தன் எழுத்தை இடம் பிடிக்க செய்தும், டெக்னொரட்டியின் கருணைப் பார்வை கிட்டவில்லை. இதற்கு ஒரே காரணம், தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்து, டெக்னோராட்டியின் நிரலித் துண்டை தன்னுடைய வார்ப்புருவில் இணைக்காமல் இருப்பதுதான் என்று சொல்ல நினைக்கிறேன்.

    அல்லது, இந்த கவனமின்மை டெக்னோரட்டியின் நுட்பக் குறைபாடு.

    கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவுகள்:

    தொடர்புள்ள சுட்டிகள், ஆங்கில வலைப்பதிவுகள் குறித்த அலசல், கொஞ்சம் சரித்திரப்பாடங்கள்:


    | | |

    Pazha Nedumaran & Thol Thirumavalavan in World Confederation of Tamil Conference

    Dinamani.com – TamilNadu Page

    மாநாட்டில் விசில்: பழ.நெடுமாறன் கோபம்

    சேலம், ஆக. 14: சேலத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் விசில் அடிக்கப்பட்டதால், பழ.நெடுமாறன் கோபம் அடைந்தார்.

    பேரமைப்பு நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன் அரங்குக்கு வந்தார்.

    அப்போது சிலர், விசில் அடித்தனர். இதனால் மேடையில் பேசிக் கொண்டிருந்த பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கோபமடைந்தார். அவர் கூறியது:

    விசிலடிப்பவர்கள் வெளியே போங்கள். திரைப்படம் பார்க்கும்போதுதான் விசிலடிப்பார்கள். இங்கு அடிக்கக் கூடாது. மாநாட்டில் எப்படி இருக்க வேண்டுமென கற்றுக் கொள்ளுங்கள் என்றார் நெடுமாறன்.


    தொடர்புள்ள பிற செய்திகள்:

    1. Puthinam Tamil Daily News Page @ Puthinam.com :: உலகத் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் இனியாவது தமிழ்நாட்டில் மாற வேண்டும்: பழ.நெடுமாறன்

    2. World Confederation of Tamils – உலகத் தமிழர் பேரமைப்பு

    3. ulaga thamizhar pEramaippu

    4. Puratchi | Periyar | Muzhakkam | Tamil | Nedumaran: முனைவர் வ.அய்.சுப்ரமணியத்துக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’ – தமிழர் ஒற்றுமைக்கு குரல் கொடுத்த நாகர்கோயில் மாநாடு

    5. Thinnai :: மஞ்சுளா நவநீதன் – உலகத் தமிழர் பேரமைப்பு – ஒற்றுமையா பிரிவினையா ?

    6. E – T a m i l : ஈ – தமிழ்: உலகத் தமிழர் பேரமைப்பு

    Kaalachuvadu Announcements

    காலச்சுவடு புத்தகக் கடை & அற்றைத் திங்கள் அறிவுப்புகள்:

    புத்தக விற்பனை மையம் திறப்பு விழா அழைப்பிதழ்
    நாள்: ஆகஸ்ட் 18, வெள்ளி
    நேரம்: 6:00
    இடம்: 332 (பழைய #216) திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை


    அற்றைத் திங்கள்
    கல்வியாளர் மு அனந்த கிருஷ்ணன்
    நாள்: ஆகஸ்ட் 20, ஞாயிறு
    நேரம்: 6:30
    இடம்: கோவை பாரதீய வித்யா பவன்


    | |

    Oru Kai Osai – Bhagyaraj

    ஒரு கை ஓசை

    ‘முந்தானை முடிச்சு’க்கு முந்தி வந்த படம் (என்று சின்ன வயது ஞாபகம் சொல்ல வைக்கிறது). பதினெட்டாவது வாரமோ, பத்தொன்பாவது வாரமோ அண்ணா சலை திரையரங்கொன்றில் ரசித்ததை மீண்டும் கே டிவி இட்டது.

    ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நாயகனுக்கு மணமுடித்து குழந்தை இருக்கும். அவரின் மீது ஒரு தலைக் காதலாய் ஊர்வசி. நடுவில் முக்கோணம் வராவிட்டாலும் தொட்டுக்கொள்ள தீபா. ‘மௌன கீதங்கள்’ முதற்கொண்டு எல்லா திரைக்கதையிலும் முக்கிய பங்கு வகிக்கும் சின்னஞ்சிறிய குழந்தை இங்கும் பல காட்சிகளில் ஹீரோவாக இருக்கிறது.

    நாயகனுக்கு வாய்பேச வராது. மருத்துவக் கல்லூரி காதலில் கைக்குழந்தையுடன் நாயகி. காதலன் இருவுள் வாயில் விபத்தில் இறந்ததாக நினைக்க உச்சகட்டத்தில் வந்து தொலைக்கிறான். முடிவில் சுபம்.

    ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம் பெட்டிக்கடை முதலாளியாக நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் உறுதுணையாக அசத்தியிருக்கிறார். இவருக்கும் கவுண்டமணி வயதுதானே ஆகியிருக்கும்? எங்கே போனீங்க சார்! யதார்த்தமான ‘ஆண்பாவம்’ ஸ்டைல் நக்கல் கட்சி:

    ‘டேய் இந்த பாட்டிலை தொட்டுடுவியாடா?’
    தொடுகிறான்.

    ‘பயந்துண்டே தொடறான் பாரு… அடேய்… கையில எடுத்துடுவியாடா?’
    எடுக்கிறான்.

    ‘போடா… எடுத்தாப் போதுமா? ஓட முடியுமாடா உன்னால?’
    ஓட்டமெடுத்து விடுகிறான்.

    ‘விடுங்க தம்பீ… மொகத்த நல்லா பாத்து வச்சுகீட்டீங்களா? நாளைக்கு பஞ்சாயத்தில் அடையாளம் காட்டறதுக்கு ஞாபகம் வச்சுக்குங்க!’

    ‘சங்கிலி’ முருகனுக்கு முதல் படம் (தானே?!). மாடக்குளம் அழகர்சாமி & சிதம்பரநாதன் அமைத்த சிலம்பச் சண்டைக் காட்சிகளில் பிய்த்து உதறியிருக்கிறார். நாயகனுக்கு ஒரு ஃபைட் சீன் கூட கிடையாது. இருந்தாலும் பாக்யராஜ், பாக்யராஜ்தான் என்று சொல்ல வைத்த காலம்.

    ‘நடந்தப்புறம் வருவது போலீஸ்; தப்பு நடக்கும்போது தட்டிக் கேட்பான் சங்கிலி’ என்றவுடன் சமீபத்திய லண்டன் நிகழ்வில் முன்பே தடுத்தாட்கொண்ட இங்கிலாந்தின் துப்பறியும் நிறுவனம் ஸ்காட்லாண்ட் யார்டும், ஜேம்ஸ் பாண்டின் எம்.ஐ.6-ம் நிழலாடியது.

    கவிஞர் முத்துலிங்கத்தின்முத்து தாரகை வானவீதி வர‘ கேட்பதற்கும், ரசிப்பதற்கும் இனிய பாடல். அம்பிகாவுக்கு டூப் போட்ட மாதிரி தோற்றத்துடன் அஸ்வினி. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும்போதெல்லாம் ‘நண்டு’ நினைவுக்கு வருகிறது.

    காக்காய், சம்பளம், தென்னம்புள்ள, வைப்பாட்டி என்று வயது வந்த இரட்டுற மொழிதலுடன் கூடிய சிதம்பரநாதனின் டைட்டில் பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை தெரிகிறது. எல்.ஆர். ஈஸ்வரிக்கும் வாய்ப்பு உண்டு.

    அமிஞ்சியார் மடம், தெற்கே போனால் திங்களூர், வடக்கில் போனால் திருவள்ளூரு; ஆறு, குளம் வேண்டுமென்றால் வெள்ளாங்கோவில் என்கிறார். கோவைக்காரர்கள்தான் கரைபுரண்டோடும் ஆற்றின் பெயரை சொல்லவேண்டும். கிராம வாசனை நிறையவே நெடுக வருகிறது. ‘கீரமுண்ட’ என்று ஆரம்பிக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் உண்டு. கம்பஞ்சோறும் உண்டு.

    தூறல் நின்னு போச்சு‘ கும்பல் அப்படியே இடம்பெயர்ந்திருந்தது. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ‘ இயக்கிய பழனிச்சாமி, ‘மேரி ப்யாரி தில் கீ ராணி’ பாடிய கோவிந்தராஜ் என்று நண்பர் குழாத்துடன் உலா வருகிறார்கள். ‘காதலா காதலா’வில் கூர்க்கா வேடம் போடும் ‘ரகுத்தாத்தா’ ஹிந்தி பண்டிட், தூய தமிழில் நாய் வளர்க்கிறார்.

    ‘தேவர் மகன்’ போல் ஆற்றில் விஷம் கலப்பது; ‘மூன்றாம் பிறை’ போல் ‘கலர் மாறிப் போச்சு’ நாய்க்குட்டி; வேறு பல படங்களில் பார்த்த, பிடித்தவர்களின் பெயரை நெஞ்சில் பச்சைகுத்திக் கொள்வது; என்று சட்சட்டென்று அட போட வைத்த புத்திசாலி திரைக்கதை, பாக்யராஜின் ஐ.எஸ்.ஐ. முத்திரை.

    முந்தானை முடிச்சில் கல்சோறு நிறைவேற்றுவார் ஊர்வசி. இதில் ஆணிசெருப்பு அணிந்து ஒன்பது சுற்று வலம் வருகிறார் நாயகன். அக்குபஞ்சர் சிகிச்சையை அந்த நாளிலேயே மெய்ஞானத்துடன் கலந்து விஞ்ஞானமாய் கிராமியப் பழக்கவழக்க நோன்புகள் கொண்டு வந்திருப்பதை நையாண்டி கலந்த பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்.

    அதேபோல், வெளிச்சத்துக்கு வரவேண்டிய சமூக அவலங்களையும் மசாலாப் படத்தில் அன்றே கொணர்ந்திருக்கிறார். ஊர் காவலாளி வீரன் – ‘சங்கிலி’ முருகன் வெட்டியானாக இருப்பதால் ‘இரட்டை டம்ளர்’ முறைக்கு அடிபணிந்து வாழ்கிறார். க்ளைமாக்சில் வில்லன் கும்பலிடம் அடிவாங்கி மரிக்கும் தருணத்தில் ‘தயவு செய்து திருந்துங்க… ஊருக்குள் எல்லாருக்கும் ஒரே டம்ளர் கொண்டு வாங்க’ என்று வேண்டுகோள் விடுத்து இறக்கிறார்.

    ரஜினியின் உற்ற தோழர், ‘வள்ளி’ பட இயக்குநர் நட்ராஜ், மைனராக வில்லத்தனம் செய்கிறார். கீழ்வெண்மணி கூலிப் பிரச்சினை போன்ற சித்தரிப்பு இங்கு இடம் பிடிக்கிறது. உள்ளுர் பிரச்சினைக்கு பக்கத்து ஊரில் இருந்து கூலிக்கு ஆட்களைக் கூட்டி வருவதும், அசலூர் ஆசாமிகளைத் தடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதும் இறுதியில் மேலோட்டமாக வருகிறது.

    அதெல்லாம் இருக்கட்டும். இந்தப் படம் இரா முருகனுக்கு ஏன் ரொம்ப பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? (படிக்க: நான் அறியும் அசோகமித்திரன் (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்))


    | |

    Agri Krishnamurthy Suspended from Tamilnadu Assembly

    Dinamani.com – TamilNadu Page

    பெண் எம்எல்ஏக்கள் புகார்: அதிமுக எம்எல்ஏ சஸ்பெண்ட்

    சென்னை, ஆக. 13: சட்டப் பேரவையில் பெண் உறுப்பினர்கள் புகார் கூறியதை அடுத்து அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

    இவர் கலசப்பாக்கம் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

    பேரவையில் சனிக்கிழமை அமளி ஏற்பட்டு அதிமுகவினர் வெளியேறிய பிறகு நடந்த விவாதம்:

    வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரவைக் கூட்டம் சுமுகமாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பையும் ஏற்காமல் அதிமுகவினர் வெளியேறியுள்ளனர். முதல்வர் பேசும் போது அதிமுகவினர் கேலி, கிண்டல் செய்ததால் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொன்முடியை பார்த்து ஒருமையில் பேசுகிறார். சகிக்க முடியாத, தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்நிலை தொடர்ந்தால் பேரவையின் மாண்பு, மரபு குழிதோண்டி புதைக்கப்படும்.

    உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர்.

    ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): ஆரம்ப நாளில் இருந்தே பொன்முடியை ஒருமையில் பேசி வருகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பெண்கள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதுபற்றி காங்கிரஸ் கொறடாவிடமும், பேரவை காங். தலைவரிடமும் கூறினேன். பொறுத்துக் கொள்ளுமாறு கூறினர்.

    பேரவைத் தலைவரிடம் சொன்னேன். எழுதித் தருமாறு கூறினார். போனால் போகட்டும் என விட்டுவிட்டேன். இதே நிலை இன்னும் தொடர்கிறது. பெண் உறுப்பினர்கள் பேரவைக்கு வர வேண்டுமா? வேண்டாமா?

    பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): காதில் வாங்க முடியாத வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி பேசுகிறார். அவரிடம் நாங்கள் 2 பெண் எம்எல்ஏக்களும் இப்படிப் பேச வேண்டாம் என அடிக்கடி எச்சரித்துள்ளோம்.

    பேரவையில் பெண் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் முன்பு பிரச்சினை எழுப்பினர். பெண்கள் இங்கு உட்காரவே வழி இல்லாத நிலையை அவர்கள் உருவாக்குகின்றனர் என்றார் அவர்.

    இந்த 2 பெண் உறுப்பினர்களும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இருக்கையின் அதே வரிசையில் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்கள்.

    தொடர்ந்து நன்மாறன் (மார்க்சிஸ்ட்) பேசியது:

    அதிமுக உறுப்பினர் சின்னசாமி கூறிய அதே புகார் முந்தைய காலத்தில் எழுப்பப்பட்டபோது, அப்போதைய முதல்வர் என்ன பதில் சொன்னார் என்பதை பாலபாரதி சுட்டிக்காட்டினார்.

    ஜி.கே. மணி (பாமக): திட்டமிட்டு கலவரம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் செயல்படுகின்றனர். பொன்முடியை பார்த்து மோசமாகப் பேசினார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

    முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் முன்வரிசை நோக்கி ஓடி வருகின்றனர். பேரவைத் தலைவரைப் பற்றி தரக் குறைவான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

    இதெல்லாம் வேதனையாக இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    “”பேரவையில் தினமும் ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர் பற்றி தவறான வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி வருவதால், நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அவரை தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்”

    என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கொண்டு வந்தார்.

    குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

    இதைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாள்களுக்குத் தாற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அறிவித்தார்.

    Al-Queda’s Support for Kashmiri Militants in Pakistan

    Dinamani.com – Headlines Page

    காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு: பின் லேடன் சிடிக்கள் சிக்கின

    ஜம்மு, ஆக. 13: காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    பூஞ்ச் மாவட்டத்தில் குர்சியா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலின்போது லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு கத்தால் கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த 10 சிடிக்கள் சிக்கின. அதில் ஒசாமா பின் லேடனின் பிரசாரங்கள் அடங்கிய 2 சிடிக்களும் அடங்கும் என்று ராணுவ அதிகாரிகள் ஜம்முவில் சனிக்கிழமை தெரிவித்தனர்.

    இதன் மூலம் காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் அல்-காய்தா பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், சிடிக்கள் மூலம் பின் லேடனை ஹீரோவாகச் சித்தரித்து, இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்கும் நோக்கில் சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படைகளுக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிடிக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2 சிடிக்கள் தவிர மற்ற 8 சிடிக்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் மறுபெயரில் உருவாகியுள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன.

    காஷ்மீரில் 1989 முதல் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாகூர் அருகே முரித்கே என்ற இடத்தில் உள்ள தங்களது தலைமையகத்தில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இதுபோன்று 100 சிடிக்களைத் தயாரித்து, காஷ்மீருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிடிக்கள் தோடா, ரஜெüரி, பூஞ்ச் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.