‘
தமிழகத்தின் இசைக்கலையை உலகம் அறியச் செய்ய இசை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
முதல்வர் கருணாநிதியின் கதையில் உருவாகும் ‘உளியின் ஓசை’ என்ற திரைப்பட துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா என்னை சந்தித்த போது, நான் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி‘ என்ற சரித்திர கதையை படமாக எடுக்க வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக தெரிவித்தார். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல. சமூக படத்தை விட பலமடங்கு அதிகமான செலவு செய்யவேண்டும் என்ற அனுபவ ரீதியான உண்மையை நான் உணர்ந்துள்ளேன்.ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரை பின்னணியாக வைத்து தஞ்சை கோவில் சிற்ப கூடத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன்.
என் வசனத்தை மட்டும் நம்பியிராமல் கலை, நடனம், இசை ஆகிய அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்த படம் அமையும். தமிழனின் வரலாறு குறித்து அவனே சொல்லாததால் வெளியில் தெரியாமல் போயிற்று. முகலாயர்களுக்கு வரலாறு இருப்பது போல் தமிழர்களின் வரலாற்றை சொல்ல முடியாத நிலை உள்ளது. மனுநீதி சோழன் திருவாரூரில் கட்டிய கோட்டை இப்போது இல்லை. தஞ்சாவூர் கோட்டை தூள் தூளாகி விட்டது. இதற்கு காரணம் நம்முடைய வரலாறுகளை நாம் பதிய வைக்கத் தவறி விட்டோம்.
இதனால் வரலாற்று உண்மைகள் அழிந்து விட்டன. உத்திரமேரூர் பராந்தக சோழன் கல்வெட்டில் உள்ளாட்சி தேர்தல் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போதைய உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக, வாங்கிய கடனை திரும்ப தருபவர்களாக இருக்க வேண்டும் என அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் குடவோலை முறையில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உத்திரமேரூரில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டு மூலம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும். வரலாறுகளை புரிந்து கொள்ள இதுபோன்ற கல்வெட்டுகளை அமைக்க வேண்டியது அவசியம்.தஞ்சை கோவிலில் பரத கர்ணம் 108க்கு உரிய சிலைகளில் 87 சிலைகள் தான் உள்ளன. மீதமுள்ள சிலைகள் ஏன் உருவாக்கப்படவில்லை என்ற எனது கேள்விக்கான பதில் தான் இந்த படத்திற்கான கதை.
பல்கலைகழகம்:
இளையராஜா பேசும் போது, நமது இசைக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு விழா இல்லை என்றாலும் அவரது கோரிக்கைக்கு இசைந்து தமிழகத்தின் இசை பல்கலைக் கழகம் துவங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்தியாவின், தமிழகத்தின் இசைப் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் துவங்கப்படும் அந்த பல்கலை க்கழகத்திற்கு நானும் இளையராஜாவும் வலிவூட்டுவோம்.
படத்தில் புது நடிகைகள்: ‘உளியின் ஓசை’ படத்தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன் கூறியதாவது:
இப்படத்தின் தொடக்க விழாவிற்கு முன்பு திரைக்கதை குறித்து இயக்குனர் குழுவினருடன் முதல்வர் கருணாநிதி தீவிர விவாதத்தில் ஈடுபட்டார். பேராசிரியரை போல் வகுப்புகளை நடத்தினார். காலை 8 மணிக்கு அமர்ந்த முதல்வர் மாலை 6.30 மணி வரை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டார். இந்த திரைப்படம் நன்கு அமைய பல யோசனைகளை தெரிவித்தார். இந்த படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை முதல்வருக்கு ஏற்பட்ட பிறகே துவக்க விழாவிற்கான தேதியை அறிவித்தார்.
முதல்வர் கருணாநிதி விரும்பும்படியும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும் வெற்றிப்படமாக இந்த படம் அமையும். இந்த படத்திற்காக ஏ.வி.எம்., முதல் தளத்தில் கலை இயக்குனர் மகி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான சிற்பக் கூடத்தை அமைத்துள்ளார்.இளவேனில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
வினித், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா, மனோராமா, சரத்பாபு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.