Category Archives: வாக்களிப்பு

அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.

இங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.

இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

வாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.

இந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.

பெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.

ஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.

இனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.

பொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.

அடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் செய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.

இந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.

வாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.

2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.

இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.

வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.

வாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=95509946).

இதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.

அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வளவு தானா என்று.

வாரயிறுதி வி.ஐ.பி.: வாசன்

தமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.

வாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.

இனி அவர்:

1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்? ஏன்?

கருத்து கணிப்பு:

40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.

14% இன்னும் முடிவு செய்யவில்லை

இதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) கொள்கைகளுடன் ஒத்து போகிற வேட்பாளர் யார் என கணித்ததில்:

  • 48% ஒபாமாவையும்,
  • 41% மெக்கெய்னையும் சொல்கின்றனர்.
  • 7% க்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை
  • 4% க்கு இரண்டு பேர்களுமே இல்லை!

2. மிக முக்கியமான ஊராச்சே… எத்தனை தடவை இது வரை ஒபாமாவும் மகயினும் வந்து போயிருப்பார்கள்! என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்? எதை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்?

😉

அல்புகர்க்கி அல்லது மாநிலத்திற்கு எத்தனை தடவைகள் என்பது உடன் ஞாபகத்திற்கு வரவில்லை. 2 அல்லது 3 தடவைகள் இருக்கலாம்.

மெக்கெய்னும் சேரா பெலினும் down town Albuquerque யில் கூட்டம் நடத்திய போது நிறைய மக்கள் வந்திருந்தார்கள்; பலர் சேராவை நேரில் பார்க்கணும் என்பதற்காக வந்திருப்பார்கள் என்றன உள்ளூர் நாளிதழ் மற்றும் திறனலை (am) வானொலி. நாளிதழில் படித்தவரை கூட்டத்தில் வேட்பாளர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.

ஒபாமா 3 வாரங்களுக்கு முன்பு கடைசியாக வந்து சென்றிருக்கலாம். மொத்தம் 4 தடவையோ..?

வட நியு மெக்ஸிக்கோ ஊர்களான எஸ்பய்னோலா மற்றும் பெர்னலியோ ஆகிய ஊர்களில் ஒபாமா கூட்டங்களுக்கு உற்சாகமான மக்கள் கூட்டம் வந்திருந்ததென சொன்ன ஊடகங்கள். இவரும் அடித்தள மக்களுக்கு காக்காய் பிடிக்கிற மாதிரி சொன்னதையே சொல்லியதாக ஞாபகம்.

‘வட நியு மெக்ஸிக்கோ’ வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக இருந்து வருவது – (தலைநகரம் சேந்த ஃபே தவிர்த்து) – 65% க்கு 35 % விழுக்காடு என்பதாக ‘வாக்களிக்க பதிவு செய்தவர்கள்’ ஜனநாயக கட்சியினராக உள்ள பகுதி.

பல உள்ளூர் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு வேட்பாளர் கிடைப்பது அரிது.

3. உங்க வோட்டு யாருக்கு? எதனால்…

இக்கணத்தில் எனது வாக்கு யாருக்கும் இல்லை.

எனது கணிப்பில் இரு வேட்பாளர்களும் கிட்டதட்ட பல விடயங்களில் ஒத்து போகிறார்கள். (தேவை இருந்தால் இது பற்றி விவரித்து எழுதலாம், nfl முடிந்த பின்!! ).

கருத்துத் தெளிவு என்பது இதுவரை கானல் நீராகத்தான் உள்ளது – இந்த தேர்தல் கூத்தாட்டத்தில்.

4. சென்ற தேர்தல்களில் வாக்களித்தவர்களில் எவர் உங்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்தார்கள்? எங்கு ஏமாற்றினார்கள்?

அதிபர் தேர்தலில் ஜான் கெர்ரிக்கு துளியும் விருப்பமில்லாமல் வாக்களித்தேன். 2000 ல் டூப்யா வுக்கு வாக்களித்த போது இருந்த ஆர்வம் போலில்லை என்பதாக அர்த்தம் கொள்ளவும்.

மாநில தேர்தல்களில், congress க்கு குடியரசு கட்சியின் ஹெதர் (உ)வில்சனுக்கு வாக்களித்தேன். ஏனோ தானோ உள்ளது அவரது தற்போதைய இந்த ஆட்சி காலம்(?). மறு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. காலியான செனெட் க்கு அவரது கட்சியின் சார்பாக போட்டியிட, கட்சியின் முன் தெரிவு தேர்தலில் வாய்ப்பினை இழந்தார்.

ஆளுநர் போட்டியில் பில் ரிசற்ட்சனுக்கு வாக்களித்தேன். எதிர்த்து நின்ற குடியரசு கட்சிக்காரருக்கு அவருடைய கட்சி வாக்குகளில் 58% தான் கிடைத்தது. “ஸால்ஸா கிடைக்காத ஊருக்கு கிடைத்த உறைப்புச் சட்னி” மாதிரிதான் பில்லுக்கு போட்ட வாக்கு.

கடந்த தேர்தலில் செனெட்டுக்கு தேர்தல் இல்லை. தற்போது உண்டு. 36 வருடங்களாக செனெட்டராக இருந்த பீற் டொமினிச்சி இடத்தை காலி பண்ணுகிறார்.

5. பில் ரிச்சர்ட்சன் எப்படி இருக்கிறார்? 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா? ஒபாமாவுடன் ஒப்பிட்டால் எவ்வாறு இவர் வேறுபடுகிறார்?

2012-16 ல் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்..?

இவர் இங்கு ஆளுநராக இருந்த காலத்தில் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், “மக்கள்” அரசாங்கத்தை நம்பியே வாழும் போக்கினை மாற்றிட ரிசற்ட்சன் ஏதும் செய்துவிடவில்லை.

ஒபாமாவின் பெரிய நம்பிக்கையாளர்களில் ஒருவர் ரிசற்ட்சன். வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை, துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை தவிர்த்து.

NRA ரிசற்ட்சனை நண்பனாக கருதுகிறது.

வாசன்

இந்த வார விருந்தினர்: சத்யா

1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂

கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.

வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.

Political Punch :: Barack Obama’s Branch-y Family Tree

2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை?

ஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா?

மாட்டார்கள்.

பொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது

பொருளாதாரத்தின் மிக அடிப்படையான,

  • மக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்
  • உற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.

இவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.

  1. போரினால் ஏற்பட்ட இழ்ப்புகள்
  2. திரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்
  3. மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்
  4. முதியோர் காப்பீட்டு திட்டங்கள்
  5. ஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்

என்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.

எனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…

3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.

சத்யா

'தேர்தல் நடக்கும் சுவடே இங்கே வெளியே தெரியாது'

இந்த வாரம் வெங்கட்டுடன் உரையாடல்.

1. கனடாவிலும் புதிய தலைவர் வரப்போகிறார் போலிருக்கிறதே… பக்கத்து பக்கத்து நாடுகளின் உறவு எப்படி மாறும்? அமெரிக்க கோலகலத்தோடு ஒப்பிடுங்களேன்.

கனடாவில் புதிய தலைவர் வரப்போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் நிலவரத்தில் வலதுசாரி கன்ஸர்வேட்டிவ் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரே திரும்ப வரக்கூடும். அமெரிக்கா கனடா விவகாரத்தைப் பார்க்குமுன் கனடாவின் அரசியல் அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

  • வலதுசாரி – கன்ஸர்வேட்டிவ் – தற்பொழுதைய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் (Stephen Harper) – ஜார்ஜ் புஷ்ஷின் நண்பர், (கொச்சையாக அமெரிக்க அடிவருடி என்று இங்கே சொல்லப்படுபவர்). அல்பெர்ட்டா எண்ணைய் முதலாளிகளின் நண்பர்

  • இடதுசாரி – லிபரல் – கிட்டத்தட்ட பதினைந்து வருட ஆட்சிக்குப் பின் இரண்டு வருடங்களாக முக்கிய எதிர்க்கட்சி – தலைவர் ஸ்டெஃபான் டியான் (Stéphane Dion) – பசுமை விரும்பி.
  • அதி இடதுசாரி – நியு டெமாக்ரடிக் – நிரந்த மூன்றாமிடம் – தொழிற்சங்க ஆதரவு; தலைவர் ஜாக் லெய்ட்டன் (Jack Layton)
  • க்யெபெக் பிரிவினைவாதி கட்சி – ப்ளாக் க்யெபெக்வா (Bloc Québécois) – தலைவர் கில் ட்யூஸெப் (Gilles Duceppe) – தற்பொழுது பல் பிடுங்கப்பட்ட பாம்பு; சித்தாந்தத்தில் லிபர்ல்களையொத்த இடதுசாரிகள்.

(இன்னும் கொஞ்சம் விபரம் என்னுடைய பழைய தேர்தல் பதிவிலிருக்கிறது)

  1. கனேடியத் தேர்தல் பிரச்சாரம் – முதல் வாரப் போக்கு
  2. கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
  3. இந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை

இதைத் தவிர புதிதாகப் பலம்பெற்று வரும் பசுமைக் கட்சி. ஆனால் இவர்களுக்கு ஒரூ இடம் கிடைத்தாலே பெரிய வெற்றியாகக் கருதப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையாக அரசு நடத்திவரும் ஹார்ப்பர் தன் அரசாங்கம் செயலிழந்த நிலையிலிருப்பதாகச் சொல்லி அரசைக் கலைத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய லிபரல் தலைவர் ஸ்டெஃபான் டியான் கொள்கைப் பிடிப்பு இருக்குமளவுக்கு ஜனரஞ்சக அரசியல் நடத்தத் தெரியாதவர். பேச்சுத் திறனற்றவர். (வரவிருக்கும் பிரதமர் விவாதங்களில் ஸ்டீவன் ஹார்ப்பரும் ஜாக் லெய்ட்டனும் இவரைக் கடித்துக் குதறப்போவது உறுதி).

அதி-இடதான புதிய ஜனநாயகத்தின் இருப்பு லிபரல்களை விட நாங்கள் லிபரல்களானவர்கள் என்று காட்டுவதில் இருப்பதால் அவர்களுக்கு கன்ஸர்வேட்டிவ்களைவிட டியான்-தான் முக்கிய எதிரி. என் கணிப்பில் மீண்டும் சிறுபான்மை ஆட்சியாக, ஆனால் முன்னைவிட சற்று அதிக இடங்களைப் பெற்று கன்ஸர்வேட்டிவ்கள் திரும்ப வரக்கூடும். ஆனால் இவர்களுக்கு கனடாவின் பொருளாதார இதயமான ஒண்டாரியோ மாநிலத்தில் சொல்லிக் கொள்ளத்தக்க எந்த வெற்றியும் கிடைக்காது.

படிப்பறிவு குறைந்த, எண்ணெய்வளம் மிக்க அல்பெர்ட்டா மற்றும் மேற்கு மாநிலங்களில்தான் ஆதரவு கிட்டும். க்யெபெக்கில் பிரிவினை கட்சி பலமிழந்து காணப்படுவதால் அங்கு வலதுசாரியினர் ஒன்றிரண்டு புது இடங்களைப் பெருவார்கள். மொத்தத்தில் இந்தத் தேர்தல் முற்றிலும் தேவையற்றது. லிபரல்களை இன்னொரு தோல்விக்குள்ளாக்கி (தான் முழு வெற்றி பெறாவிட்டாலும்) உட்கட்சிப் பூசலை வளர்த்து பலவீனப்படுத்துவது ஒன்றே இதன் நோக்கம். இந்தப் பம்மாத்தை மக்களிடம் பரிய வைக்கச் செய்யும் பேச்சுத்திறன் ஸ்டெஃபான் டியானுக்குச் சற்றும் கிடையாது.

இனி அமெரிக்க ஒப்பீடு:

அமெரிக்காவைப் பார்க்க இங்கே தேர்தல் அவ்வளவு கோலாகலம் கிடையாது. அதிகபட்சம் யாராவது ஒருவர் வீட்டில் மூன்று தட்டிகள் புல்பரப்பில் குத்தியிருப்பார்கள் (அவர் போட்டியாளர் அல்லது அவரின் மச்சானாக இருக்கக்கூடும்). மொத்தம் ஐந்து வாரங்களில் எல்லாம் முடிந்துவிடும்.

ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக்கொள்ளமாட்டார்கள். (நீ முட்டாள் என்றுகூடச் சொல்லமாட்டார்கள், “ஏனுங்க நீங்க முட்டாளமாதிரி பேசுறீங்க” என்றுதான் சொல்வார்கள்). இங்கே பிட்புல், ஹாக்கி அம்மாக்கள், ராணுவத்தில் குண்டடிபட்டவர்கள், கீழே வேலைசெய்யும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், என்றெல்லாம் தலைவர்கள் பீற்றிக் கொள்ளமாட்டார்கள். குடும்பங்கள் பெரும்பாலும் அரசியலில் இழுக்கப்படாது. தொலைக்காட்சி விவாதத்தில் பணவீக்கம், படைக்குறைப்பு, பசுமையாக்கம் என்றுதான் பேசுவார்கள். (அதனால் எந்த சுவாரசியமும் இருக்காது, மறுநாள் பேப்பரில் படித்தால் போதும்).

ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்; சராசரி கனேடியரின் விழுமியக்களெல்லாம் இடதுசாரிதான். கனேடிய வலதுசாரி கன்ஸர்வேட்டிவ்கள் அமெரிக்க டெமாக்ரடிக்களைவிட அதிகமாகவே லிபரல்கள். 40 மில்லியன் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானிய அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் எந்தத் தனியுரிமையும் கிடையாது. ஆனால் க்யெபெக்கில் மாத்திரமே இருக்கும் ப்ரெஞ்சுக் குடிமகன் இரண்டுநாள் கார் பயணம் செய்து சென்றாக வேண்டிய அல்பெர்ட்டாவிலும்கூட ப்ரெஞ்சு உரிமைகளைப் பெறுவார். இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றமுடியாது.

அதே போலே

  • அடிப்படைக் கல்வி,
  • இலவசக மருத்துவ உதவி,
  • ஓய்வுக்காலப் பாதுகாப்பு,
  • சிறுபான்மை (இந்தியர், சீனர்) குடிவரவு,
  • தற்பாலர் உரிமைகள்,
  • கருக்கலைப்பில் பெண்களுக்கான உரிமை,

போன்றவற்றை கனேடியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் பெருமிதமடைகிறார்கள். இதில் தீவிர வலதுசாரிகளும் அடக்கம், நான் சம்பாதிக்கிறேன், நான்தான் பலனடைய வேண்டும் என்ற வலதுசாரி இங்கே எடுபடாது.

ஹார்ப்பர் வந்தால், கூடவே மெக்கெய்னும் வந்தால் அமெரிக்க அராஜகங்களுக்கு அடுத்த நொடியிலேயே துணைநிற்பார். ஸேரா பேலின் ஜார்ஜியாவைக் காப்பாற்ற என்று சொல்லி ரஷ்யா மீது படையெடுத்தால் ஹார்ப்பர் அவர்களுக்கு பூட்ஸ் பாலீஷ் போடுக்கொடுப்பார். அமெரிக்கா எண்ணைக்காகத் துளையிட்டால் ஹார்ப்பர் அதைவிட ஆழமாக அல்பெர்ட்டாவில் துளையிட்டு அந்த எண்ணையை டெக்ஸாஸ்க்கு அனுப்புவார். அமெரிக்காவை உதாரணம்காட்டி இங்கும் மாசுக்கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்வார்.

பொதுவில் இழந்துபோன ஆஸ்திரேலிய, ஸ்பெயின் நட்புகளை அமெரிக்கா கனடாவின் தோழமையால் சரிகட்டிக் கொள்ளலாம். அல்பெர்ட்டாவில் மெக்கெய்-பேலினுக்குக் கோவில்கட்டி அங்கும் கருக்கலைப்புக்குத் தடைவிதிக்க முயல்வார்கள். பொதுவில் லிபரல்களான பிற கனேடியர்களால் இது தீவிரமாக எதிர்க்கப்படும். ஆனால் உருப்படியாக அமெரிக்க-கனேடிய பரஸ்பர ஒப்பந்தம் எதுவும் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அந்த நிலையில் பயனடையப்போவது ஒண்டாரியோ மாநிலமாகத்தான் இருக்கும், சக்திவாய்ந்த ஒண்டாரியோ ஹார்ப்பருக்கு எப்பொழுதுமே தலைவலிதான். எனவே கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து எந்த நன்மையும் வராமல் பார்த்துக்கொள்வார்.

ஹார்ப்பர் வந்து ஒபாமா வந்தால் அடுத்த நொடியிலேயே ஹார்ப்பர் அவரிடமும் நட்பு பாராட்டுவார். ஆனால் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க ஹார்ப்பர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு உதவ முயன்றதை ஒபாமா எளிதில் மன்னிப்பார் என்று தோன்றவில்லை. (ஜனநாயக் கட்சி ஆரம்ப கட்டத் தேர்தல் சமயத்தில், கனேடிய அரசு அதிகாரி ஒருவரிடம் தான் ஆட்சிக்கு வந்தால் கனேடிய நலன்கள் எந்த வகையிலும் மாற்றமடையாது என்று சொன்னார், உடனே கன்ஸர்வேட்டிவ் ஆட்கள் அதை அமெரிக்க ஊடகத்தில் பரப்ப ஒபாமா அமெரிக்க நலனுக்கு எதிரானவர் என்று ஹில்லரி முழங்கினார். கனேடிய பொதுநலனைவிட அமெரிக்க ரிபப்ளிக்கன்களின் நலன் முக்கியமா என்று எதிர்க்கட்சிகள் இங்கே வெடிக்க, அரசு அதிகாரி ஒருவரை பதவிநீக்கி ஹார்ப்பர் தன்னைக் காத்துக்கொண்டார்). ஒபாமா வருவது ஹார்ப்பருக்கு உவந்ததாக இருக்காது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்து லிபரல்கள் ஆட்சிக்கு வந்து மறுபுறத்த்தில் மெக்கெய்ன் ஆட்சிக்கு வந்தால் புஷ்ஷின் முதல் நான்காண்டுகளைப் போல கனடாவின் இருப்பை அமெரிக்க அரசு முற்றிலும் மறக்கும். வீராங்கனை பேலினுக்கு பஸ்மண்டை (nerd) டியோனை சீண்டி அழவிடுவது பொழுதுபோக்காக அமையும். அவரது அழுகையை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி ரிபப்ளிக்கன் ஊடகங்கள் மாத்திரமல்லாமல் முழு அமெரிகாவுமே பொழுதுபோக்கு பெறும். குடியரசுக்கட்சியனர் எப்பாடுபட்டாவது கனடிய லிபரல் ஆட்சியை ஒழித்து கண்ஸர்வேட்டிவ்களைக் கொண்டுவர நன்றிக்கடனாக உதவுவார்கள்.

அந்த அசம்பாவிதம் இங்கே நடக்கும்பொழுது ஒபாமா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க நலன்களுக்கு எதிராகக் கனடாவுக்கு உதவுவதாக ஒபாமாவை ரிபப்ளிக்கன்கள் சீண்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில நீண்டகால ஒப்பந்தங்கள் உருவாகும். அதிகக் கூச்சல்கள் இல்லாமல் சில திட்டங்கள் நடக்கக்கூடும்.

ஆனால் எது எப்படியோ கிளிண்டன் போகும்பொழுது அமெரிக்காவும், க்ரெய்ட்ச்யென் போகும்பொழுது கனடாவும் பொருளாதாரத்தில் ஏறுமுகமாக இருந்தன. புஷ்ஷுக்குப் பிறகான அமெரிக்காவும் தற்பொழதைய வலதுசாரி அரசியலில் கனடாவும் பொருளாதாரச் சரிவில் இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளைக் கனடா பறித்துக்கொள்கிறது என்று அமெரிக்கார்கள் கூச்சலிடுவதையும் (இது அமெரிக்காவே முன்னின்று நடத்தும் உலகமயமாக்கலின் பின்விளைவுதான் என்பதை அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரியவில்லை), கனடாவின் நீர், உலோகங்கள், பெட்ரோலியம், மரம் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாடுகிறது என்று முனகும் கனேடியர்களும் பொருளாதாரச் சரிவு நிலையில் பரஸ்பர வெறுப்பைத்தான் உமிழப்போகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நிலையில் நட்பும் நன்றாகவே இருக்கும், கஷ்டகாலத்தில் நட்புகள் விரிசலடைவது இயற்கைததான்.

நான் இங்கே பொதுவான பார்வையைத்தான் வைத்திருக்கிறேன்.

பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லைப் பாதுகாவல், இயற்கை வளப் பகிர்வு, என்று பல விஷயங்களை விரிவாக அலச இங்கே இடமில்லை.

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

பதில் நாளை…

எலெக்டோரல் காலேஜ் – செல்லாத வோட்டு (மீள்பதிவு)

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.

அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), ஆளுநர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.

அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க ‘எலெக்டோரல் காலேஜ்’ என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 ‘மாகாண வோட்டுகள்’ ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.

எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற — வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலிஃபோர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.

ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை ‘ஆல் கோர்’ வாங்கி இருந்தும், தேவையான ‘எலெக்டோரல் வோட்டுகளை’ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார்.

‘எலெக்டோரல் வோட்டுக’ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!

ஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் ‘எலெக்டோரல் காலேஜ்’ முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா?

இவ்வாறு ‘மாவட்ட வோட்டுகள்’, ‘144-வது வட்ட ஓட்டுகள்’ என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.

மேலும் இதன் மூலம் ‘பார்டர்லைனில்’ இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் முக்கால்வாசி மாநிலங்கள் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.

இந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் மக்கள் தொகைக்கணக்கு அடிப்படையில், ‘எலெக்டோரல் வாக்குகள்’ மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.

படங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்

ரெண்டு வரி நோட்:
அமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.

(திருத்தப்படாத) அசல் பதிவும் பின்னூட்டங்களும்: ஈ – தமிழ்: செல்லாத வோட்டு (செப். 14, 2004)