Category Archives: மெக்கெய்ன்

கடைசி விவாதம்: யார் வென்றார்கள்?

ஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.

உங்கள் கருத்து என்ன?

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா

அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக மந்திரமும் சரியாக இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் மீடியாக்களின் ஆராதனைகளையும் தாண்டி மெக்கெயின் மெள்ள மெள்ள எனக்கு ஏற்றவராக தோன்றுகிறார்.

அதுவும் இந்த எழுநூறு பில்லியன் விவகாரத்தில் ஒபாமா எடுத்த முடிவு அவர் மாறுபட்டவரல்ல என்றே தோன்றுகிறது. இதில் ஆழமான பல பிரச்சனைகள் இருக்கின்றன.

ஒருபக்கம் சட்டென பாதிக்கப்பட வாய்ப்புக்கூடிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இன்னொரு புறம் டாலரை மீட்டெடுக்க இதையே சரியான வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கக்கூடிய வாய்ப்பு இரண்டையும் ஒரு சேர சமாளிக்க பெரும் திறனும் தேவை. ஒபாமாவும் தேசமும் விரும்பும் மாற்றத்துக்காக சரியான திட்டங்களின் மூலம் இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

ஒரு பெரும் தலைவனிடம் அதையே தேசம் எதிர்ப்பாக்கிறது.இதில் அனுபவமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மாற்றி மாற்றி பேசுவது நேருக்கு மாறாக உண்மையை சொல்வது என்று அவர் அடிக்கும் குட்டிகரணங்களை ஊடங்கள் மிகவும் இருட்டடிப்பு செய்வதாகவே தோன்றுகிறது.

குறைந்தபட்சம் சொன்ன சொல்லிலேயே நிற்கிறார் மெக்கெயின். தன் கட்சிக்காரர்களையே அவர் பகைத்துகொண்டு எடுத்த முடிவுகளும் பேலினை கொண்டுவந்து மீண்டும் கவனத்தை திரும்பவைத்த சாதுரியமும் அரசியலுக்கு மிகவும் தேவை.

பேலினையும் பேடனையும் சுற்றி நடக்கும் நாடகங்களை ஒரு aberrationஆக தேவையில்லாத இரைச்சலாகவே நான் பார்க்கிறேன். இருவருமே டிக் சேனி போல அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் முன்வைக்கும் யோசனைகளும் திட்டங்களும் ஆழமின்றி வெறும் outline அளவிலேயே இருக்கின்றன. அதில்கூட பிரமிக்கதக்க மாற்றங்களை இருவருமே முன்வைத்ததாக தோன்றவில்லை. இதில் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று முழங்கிய ஒபாமா இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

இப்படி இருவருமே மிகவும் சாதாரண வேட்டபாளர்களாக இருக்கையில் டாலர், இரண்டு போர்கள், தடுமாறும் பொருளாதாரம், நசுங்கிப்போயிருக்கும் வெளிநாட்டு உறவுகள் என்று கழுத்தை நெரிக்கும் வேளையில் இந்த தேசம் அனுபவம் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இது போன்ற பெரும் பிரச்சனைகளுக்கிடையில் ஒரு தேர்தலை அமரிக்கா சமீபகாலங்களில் சந்தித்து இருக்காது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஆற்றலும் பெரும் சிந்தனை மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு வசீகரம் மிக்க தலைவன் தேவை. இது ஒரு redifining moment. அந்த அளவிற்கான வேட்பாளர்களாக இருவருமே இல்லை.

இன்னும் ஒரு மாதத்தில், ஒபாமா, என்ன இருந்தாலும் பழமைவாதத்தில் ஊறிய மிகப்பெரிய demographyயான white anglo saxon நடுத்தர மக்கள் கூட்டம் ஒபாமா ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத்தடைகள் சரிசெய்யவும், பிரச்சனைகளை பற்றிய தெளிவான பார்வைகளையும் திட்டங்களையும் முன்வைத்து ஒரு பெரும் அலையை ஏற்படுத்தக்கூடய ஆற்றலை வெளிக்காட்டாவிட்டால் என் ஓட்டு மெகயினுக்கே.

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

சத்யா

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related

தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.

அதிரடி மச்சான் கார்னர்:

மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”

என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா? அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே?

நான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:

ஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.

எ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே!

தர்ம அடி கார்னர்:

மெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”

எ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

ஏழையின் சிரிப்பில் கார்னர்:

ஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”

எ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி! என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவாதிக்கக் கூடாதா?

கேனத்தனமான கேள்வி கார்னர்

விவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா? நல்ல நாடா? ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’

எ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா? இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦

டீச்சர்! இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:

மெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”

எ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது?

ஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:

ஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது? முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”

எ.க.: சாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா?

ஆடை பாதி கார்னர்:

ஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.

எ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா?

டாக்சி! டாக்சி! (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:

மெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.

எ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’

கம்ப்யூட்டர் கார்னர்:

ஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”

எ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂

என் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:

மகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து குதிக்கும்?

ஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே?

ஒருவரியில் எ.க. கார்னர்:

‘டாம்! டாம்! ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்!’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா

‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்!’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)

மெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)

குற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா

தர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்

இருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!

உடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு

உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) – பத்மா அர்விந்த் தொடர்ச்சியாக

நன்றி: Comparing healthcare plans – Boston.com

மேலும் வாசிப்புக்கு:

1. CJR: Twelve Questions About Health Care for Tonight’s Debate: “There’s more to talk about than taxing benefits”

2. Worlds apart on healthcare – The Boston Globe: “Obama’s plan is like the new Massachusetts universal coverage law with one exception”

3. McCain plan may cost Northeast – The Boston Globe: “John McCain’s healthcare plan would bring a dramatic change to the existing system: People would get a flat tax credit worth as much as $5,000 instead of the tax break on the insurance they now get at work, allowing them more flexibility to buy insurance on their own.”

State of Women Leaders in USA – Padma Arvind

சென்ற பதிவின் தொடர்ச்சி

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

நிச்சயம் இல்லை.

ஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.

இங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. அப்படி ஆகும் என்றும் எனக்கு தோன்றவில்லை. என்னை பொருத்தவரை அதிபராக நிர்வாக திறமைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் அல்லாது genderக்கு அல்ல.

எனக்கு சாராபேலின் பல கொள்கைகள் உடன்பாடில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஆதரிக்க முடியாது.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

தற்போதைய ஆட்சியை அதிகம் குறை சொல்லாமல் அதிலும் சமீபத்திய பொருளாதார சரிவுக்கிடையில் சமாளிக்கும் முதிர்ச்சி. முட்டை ஓட்டின் மேல் நடப்பது போன்ற கவனத்துடன் கையாளும் நகைச்சுவை கூடிய பிரச்சாரம்.

4. உதட்டுச்சாயம், பன்றி மொழியைப் பரவலாக இரு ஆண் ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்துகிறார்களே. சாரா பேலினையும் ஹில்லரி க்ளின்டனையும் இவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு பொருத்தமான அடைமொழி பயன்படுத்தி இருக்கலாமோ? முகஞ்சுளிக்க வைக்கிறதா? வேறு பேச்சுகள் ஏதாவது அதிர்ச்சி அடைய வைத்ததா?

அரசியல் என்றில்லை, பொதுவாகவே அலுவலகங்களில் கூட சில சமயங்களில் (குறிப்பாக பெண்கள் தலை பொறுப்பேற்கும்) இது போன்ற பிரயோகங்கள் சகஜமாக பயன்படுத்தப்படுகின்றன. முன்போல அல்லாமல், பெண்களும் பேசக்கேட்பது சகஜம், இங்கே (நியுஜெர்சி) நகரசபை கூட்டங்களில் சில சமயங்களில் இன்னமும் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல்,கைகலப்பில் எல்லாம் முடிந்திருக்கிறது.

ஆகக்கூடி பொதுவாழ்க்கை வருபவர்கள் ஆணானாலும் பெண்னானாலும் தடித்த தோலுடனான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இதில் முகம் சுளிக்க வைக்கவோ சினம் கொள்லவோ எதுவும் இல்லை. When you know it’s a pissing match, be ready with an umbrella is a common phrase!!

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

தொடரும்…

தொலைக்காட்சி நேரம்: அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள்

ஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:

ஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:

ஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:

(ஆதாரம்: For McCain and Team, a Host of Ties to Gambling – NYTimes.com)

நாய்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும்: Nature இதழின் அரசியல்?

முதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:

Rat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.

முதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.

அகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

செய்தி: Going to the dogs: How Nature magazine featured Obama and McCain … with an unfortunate ad on the back | Mail Online

பதிவு: Alterdestiny: Science, Obama and McCain

நேச்சர் இதழின் கவர் ஸ்டோரிக்காக அதிபர் வேட்பாளர்களிடம் அறிவியல் தொடர்பான 18 கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா கர்மசிரத்தையாக பதில் அனுப்ப, ஜான் மகயின் விடையளிக்க மறுத்துவிட்டார்.

FAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் – ஒபாமா x மெகயின்

1. யார் ஜெயித்தார்கள்?

குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.

2. யார் ஜெயித்திருக்க வேண்டும்?

கால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்?

கட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதலிடம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.

4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா?

ஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.

5. ஏன் பிசகியது?

ஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது!’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…

ஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.

6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்?

பராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்!”

7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா?

சில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.

8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு?

பராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்

  • மேலும் படை விஸ்தரிப்பு
  • ஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது
  • போதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது
  • பாகிஸ்தான் உறவு

9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்?

பராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்

  • அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்
  • அமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்

10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே! இன்றும் செய்தாரா?

சில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா?’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.

11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்?

ஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.

12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்?

நீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.

13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு?

ஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா? அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா!”

ஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.

14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்?

மீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எங்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.

15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா?

சாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.

16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா?

தாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா?

ஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.

18. பன்ச் டயலாக் ப்ளீஸ்!

‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.

  • 2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • இராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • சதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • ஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!

19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:

மகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.

20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது?

ஜான் மகயின் இருக்கிறாரே…

21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்?

ஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா? கே ஜி. பி’

22. நாயடி, பேயடி உண்டா?

அதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.

23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்?

நிச்சயமாய் பராக் ஒபாமா.

இன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.

அனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.

(பிற்சேர்க்கை)
24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்?

பனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”

சன்னாசி: கரிசல் » Lockjaw