Monthly Archives: நவம்பர் 2024

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?

இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:

“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-

இனி என் பார்வை:

அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்

அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.

அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.

புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.

எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.

கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.

முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.

டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!

Generalization is the mother of all screwups.

ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?

நேற்று சரவணன் கேட்டிருந்த கேள்வி #1 : நீங்க யாரை ஆதரிக்கிறீங்கன்னு புலப்படவே இல்லையே…

முதல் கேள்வி எளிமையான விடையைக் கொண்டது.

என் வாக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத மாநிலத்தில் வசிக்கிறேன். நான் ஹாரிஸுக்கோ டிரம்ப்பிற்கோ வாக்களித்தாலும் – எங்கள் ஊரில் 100% ஜெயிக்கப் போகிறவர் கமலா ஹாரிஸ்.

மாஸசூஸட்ஸ் – முழுக்க முழுக்க டெமொகிரட்ஸ் சார்பு மாகாணம். 60-65 விழுக்காடு ஜனாதிபதியாக கமலாவையே விரும்புகிறார்கள். திரளாக ஆதரவைச் சொல்லிவிடுவார்கள்.
பாஸ்டனில் இரவு எட்டு மணிக்கு வாக்களிப்பு முடியும். அடுத்த நிமிடமே பாஸ்டனில் துணை ஜனாதிபதி, தேர்தலில் வென்றதாக கணித்து முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்து விடலாம்.
அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களில் 42/43 – இந்த மாதிரி ரகம்.

அப்படியானால், நம் வாக்கை உருப்படியாக எப்படி மாற்றுவது?

எனவே, நான் மூன்றாம் கட்சிப் பிரியன். லிபரேடேரியன் (libertarian) – சேஸ் ஆலிவர் (Chase Oliver) நிற்கிறார்.

இவர் ஓரினச்சேர்க்கையாளர். அந்த மாதிரி சமூகக் கொள்கைகளில் டெமொகிராட் போல் தோன்றுவார்.
போர் வேண்டாம் என்கிறார். பொருளாதாரம் தழைக்க கம்மியான சட்டதிட்டங்கள் போதும் என்பார். இதில் ரிபப்ளிகன் போல் தோன்றுவார்.
முக்கிய இரு கட்சிகளுக்கு மாற்று தேவை. எங்களைப் போன்ற சிறு ஆதரவாளர்கள் மட்டுமே மாற்று சக்தியாக, புதிய மக்கள் குரலாக விளங்குவார்கள். அவர்களுக்கு ஐந்து சதவிகிதமாவது வாக்கு விழ வேண்டும்.

தாராளவாதம் எனலாம். முற்போக்கு கட்சி எனலாம். கன்சர்வேடிவ் எண்ணங்கள் கொண்ட பழமைவாத ரிபப்ளிகன் சித்தாந்தத்திற்கு மாற்று – லிபரல் வேட்பாளர்.

இரண்டாம் வினாவிற்கான பதிவு, இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டியது: ”இந்திய diaspora யாரை ஆதரிக்கிறது ?”

நீங்கள் அமெரிக்காவில் வாக்குரிமை பெற்றவரா? எவருக்கு உங்கள் வாக்கு?

கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?

நேற்றைக்கு டானால்ட் ட்ரம்ப் ஏன் வென்று விடுவார்.

இன்றைக்கு துணை ஜனாதிபதி வென்றால் என்ன நடக்கும்?

1. சட்டவிரோதமாக குடிபுகுந்தோருக்கு மன்னிப்பு; கள்ள்த்தோணியில் பின்வாசல் வழி நுழைந்தோருக்கு வேலைவாய்ப்பு; குறைந்த பட்ச ஊதியத்தில் உழைக்கும் வந்தேறிகளுக்கு குடியுரிமை + வாக்குரிமை சட்டங்கள். பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் டெமோகிராட் வாக்கு 2026ல் இரட்டிப்பாகும்.

2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.

3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.

4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.

5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.

6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.

7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.

8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.

9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.

10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.

ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?

  1. ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
  2. வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
  3. எங்கே பார்த்தாலும் வாய்க்கால் தகராறு; உலகெங்கும் குட்டி குட்டி சண்டைகள்; உக்ரெயின், இரான், இஸ்ரேல், சூடான், ஜோர்டான், லெபனான் – முடியலடா சாமீ. நிம்மதியா இருக்கணும்னா டொனால்டு வேணும்.
  4. வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
  5. பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
  6. காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
  7. குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
  8. ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
  9. ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
  10. துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.

கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!