Monthly Archives: ஓகஸ்ட் 2024

Happy Birthday – Nambi Krishnan

G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??

எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.

கோட் என்றால் ?

—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.

—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.

நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.

அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.

அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?

பெயர்த்திரிசொல்

சாட்ஜிபிடி இடம் சில கேள்விகள் எழுப்பினேன்:

1. சினிமாவில் எவ்வாறு செவ்வியல் இசை இடம் பிடிக்கிறது?
அருமையான பதில் வந்தது. கூடவே…
அது பதில் கேள்வி போட்டு தொக்கி நின்றது:

உங்களுக்குப் பிடித்த படத்தின் பின்னணி இசை, எவ்வாறு செவ்வியல் தாக்கத்துக்கு உள்பட்டது?

2. புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களையும் அதில் வரும் பாரம்பரிய இசையையும் சொல்லுக:
மீண்டும் தகவல்களும் துல்லியமும் கொண்ட விடை.
அதன் கேள்வி:

மீளொலி (Leitmotifs) எவ்வாறு திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியுமா?

3. இல்லை. சொல்லேன்…
சொன்னது. என்னிடம் சற்றே கடுப்பு எட்டிப் பார்க்கிறது.
அதன் மறுவினா:

எளிமையியின் உச்சம் (மினிமலிசம்) எவ்வாறு கதாமாந்தர்களோடும் காட்சியோடும் ஒன்ற வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீரா?

பிரமிக்க வைக்கும் பிரவாகம்! அசரடிக்கும் அறியாவினாக்கள். எனக்கு ‘கற்றது விரலளவு’ என்று உணரும் தருணம். சாட்ஜிபிடி-யை பார்த்து நகையாட வைத்தது…
அது வரை ஆங்கிலம். இனி… கேட்டேன் பார் கேள்வியை – தமிழில்.

4. எனக்கு ராஜாவின் இசையில் தனித்துவம் தெரியும். அவரின் ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த அணுகுமுறை சாத்தியம். அதற்கு உதாரணங்கள் தர வேண்டுகிறேன்

ரொம்ப நேரம் யோசித்தது:

“மூன்றாம் பிறை” படத்தில் “வாழ்வே மாயம்” பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

பத்தியா? டைரியா? கிறுக்கலா?

’கற்றதும் பெற்றதும்’; ‘தெரிந்தது மட்டும்’; ‘ராயர் காபி கிளப்’; ‘பா.கே.ப.’; ‘கோணல் பக்கங்கள்’; ‘நேசமுடன்’; ‘துணையெழுத்து’…

என்று துவங்கி நிறைய பத்தி எழுத்தாளர்கள் உண்டு.

இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.

பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.

அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.

வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!

சொல்வனம் 325-ல் பல முக்கிய ஆக்கங்கள்.

தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது.
விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.

இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம்.
எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள்.
மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’
ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை
வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்

இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!

ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு.
நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.

AI Generated

அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.

முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது.
அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி.
கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.

தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.