புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.
நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.
இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)
எனினும், தொடர்களை விடக்கூடாது.
இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)
நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.
இதெல்லாம் இலக்கியம்.
தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.
எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?










