பேராசிரியர் வாழ்ந்த காலத்தில் அவரின் எழுத்துக்களை – நகைச்சுவையை எள்ளி, நகைத்த இடது சாரிகள், இன்று பேராசிரியர் கல்கி தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டை, தமிழ் இசைக்கு அவர் தொடர்ந்து செய்து வந்த பிரச்சாரத்தை, தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் மேன்மைக்கு அவர் புரிந்த பங்களிப்பை இன்னும் பத்திரிகைத்துறை, அரசியல், காந்தியம் ஆகிய அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு உழைத்து உயர்ந்த அந்த மனிதரை இன்று கட்சி பேதம் பாராமல் வாழ்த்தி வணங்கி வரவேற்கிறார்கள்.
…
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த அன்று கல்கி அச்சக ஊழியர்களிடையே குதூகலம் காணப்பட்டது.
அச்சக வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் கல்கி பத்திரிகை இருபத்தெட்டாயிரம் பிரதிகள் அச்சாயின. விலை நான்கு அணா.
அந்தக் காலத்தில் ‘கல்கி’ தீபாவளி மலர் அய்யாயிரம் பிரதிகள்தான் அச்சிடுவார்கள்.
ஓவியர் வர்மா, ‘சிவகாமியின் சபதம்’, மணியம் ‘பொன்னியின் செல்வன்’, சந்திரா ‘அலை ஓசை’ என்று இவர்கள் அனைவரும் பேராசிரியர் எழுத்தில் வடித்த கதை மாந்தர்களுக்கு உயிர் கொடுத்து உலவவிட்டார்கள்.
‘அலையோசை’ தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்து கொண்டிருந்த போது அத்தொடர்கதையை தனிப் ‘பார’மாக அச்சிட்டு இதழ் விலைக்கே விற்று வாசகரிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்த்த சிறப்பு, எழுத்தின் வலிமை கல்கி அவர்களுக்கே உண்டு.
ஒரு சமயம் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் சென்னை மாநகருக்கு வருகை தந்தபோது கல்கி அலுவலகத்திற்கும் வருகை தந்தார். அச்சமயத்தில் சமதர்ம சமத்துவக் கொள்கையில் மன்னனாக விளங்கிய நேரு அவர்கட்கு, ஓரளவு கல்வியறிவு பெற்ற தோட்டத் தொழிலாளி ஏகாம்பரத்தை அறிமுகப் படுத்தியதோடு கை குலுக்கவும் செய்தார்கள். அந்த அரிய காட்சியைப் புகைப்படம் எடுத்து கல்கி பத்திரிகையில் வெளியிட்டு சமதர்ம சமத்துவக் கொள்கையில் தமக்குள்ள பற்றை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
1954ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஒருநாள் பேராசிரியர் கல்கி அவர்கள் அமரரானார்.
அச்சமயம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., “கல்கியின் மறைவு தமிழ்த் தாய் தன் கையிலிருந்த வீணையை வீசி எறிந்து விட்டது போலிருக்கிறது!” என்றார்.
எழுத்தாளர் விந்தன், “ஆசிரியர் கல்கி அவர்கள் தமிழுக்கு ஒருவர் அல்ல, தமிழ் நாட்டுக்கு ஒருவர் அல்ல, உலகத்துக்கே ஒருவர்!” என்று தம் மனிதன் இதழில் எழுதினார்.
*
“நடிகன் வீட்டுக்கு கதை சொல்ல போக மாட்டேன். என் கதை வேண்டுமானால் என் வீட்டுக்கு நடிகன் வரட்டும்!” என்று திரை உலகில் நடிகர்கள் ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்தில் நடிகர் வீட்டுக்கு ‘கதை சொல்ல போக மறுத்தார் சுயமரியாதை உணர்வுமிக்க திரைப்பட கதை – வசனகர்த்தா தோழர் எம்.எஸ். கண்ணன்.
- கல்கி முதல் கண்ணன் வரை / புதுமைப்பித்தன் பதிப்பகம் / சந்தியா வெளியீடு