சொல்வனத்தின் அசோகமித்திரன் சிறப்பிதழ் நடுவே அனுக்ரஹாவின் ’டைகர்’ சிறுகதையும் கிடைத்தது. நியூ யார்க்கர் போன்ற இடங்களில் எளிதில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்த சிறுகதை. அதன் தொடர்ச்சியாக…
ஔவையார் சொன்னது போல் உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஹாஸ்டலில் வசிப்போர்; ஹாஸ்டலில் வசிக்காதோர்.
முனிசிரேஷ்டர்களைப் போன்றோர் ஹாஸ்டலில் வசிப்போர். அவர்களுக்கு தவம் செய்வது மட்டுமே குறிக்கோள். யார் ஹோமகுண்டத்தைத் தயார் செய்தார்கள், ஆகுதிக்கான அவிஸ் எப்படி உண்டானது என்றெல்லாம் கவலையில்லை. அதே போல், ஹாஸ்டல்வாசிகளும் படிப்பு அல்லது தங்கள் குறிக்கோளுக்கான பாதை அமைப்பது மட்டுமே இலட்சியம். யாருடைய சோப்பு, என்ன நேரத்தில் சாப்பாடு என்பதெல்லாம் பொருட்டேயல்ல.
“பார்த்திபன் கனவு” படத்தில் வரும் டயலாக் போல், “வீடு என்ன மியூசியமா? வைத்தது வைத்த இடத்தில் அலங்காரமாக பொருந்தியிருக்க!” என்பது பெரும்பாலான மைலாப்பூர் வர்க்க நடுத்தர வருமான குடும்பங்களுக்குப் பொருந்தும். சொல்லப் போனால் அவர்கள்தான், முதல் முதலாக மேலாண்மையில் புகழ்பெற்ற ”Effective shop floor oranization” என்பதை பயன்படுத்தியவர்கள். அந்தந்தப் பொருள் ஒருங்கே கோர்த்து பொருத்தமாக வைத்திருப்பதை விட, இந்தப் பொருள் எதற்குத் தேவையோ அதை பயன்பட்டிற்கு அருகாமையில் வைப்பது என்னும் நுட்பத்தை “போட்டது போட்டபடி கெடக்கு” என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஹாஸ்டல்வாசிகளுக்கு பின்னிரவுகளில் படிப்பைத் துவங்குவதுதான் விருப்பமாக இருக்கும். உணவு அசுத்தமானது என்று சொல்லுமாறு எதையும் சமைக்கும் கட்டாயத்திலும் அவர்கள் இல்லை. படிக்கும் நேரத்தைத் தவிர்த்து கொஞ்சம் கல்லூரி சம்பந்தமான வேலை; அதையும் விட்டால் அரட்டை; அப்படியும் நேரம் கிடைத்தல் உறக்கம்; அதற்குப் பிறகு கடுமையான அண்டார்டிகா குளிர்காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் வாய்க்கப் பெற்றால் அறையை சுத்தம் செய்யலாம். பெரும்பாலான சமயங்களில் சிரத்தையை வருங்காலத்திலும் அசிரத்தையை புறத்தோற்றத்திலும் அமைத்துக் கொள்வதற்கு மின்தட்டுப்பாடு கூட காரணம்.
டெல்லியில் இருந்தபோதும் சரி… பெங்களுரில் இருந்தபோதும் சரி… தொண்ணூறுகளில் விலைவாசியும் வீட்டு வாடகையும் இவ்வளவு எகிறவில்லை. எப்பொழுதுமே வீட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம். அதன் பிறகு இரண்டு பெட்ரூமானால் நான்கைந்து பேர்; மூன்று பெட்ரூமானால் ஆறேழு பேர் பிடிப்போம். கிட்டத்தட்ட ஒத்த மனது கொண்டவர்கள்; பைசா பைசாவாகக் கணக்கு பார்த்து வட்டி போட்டு பைசல் பண்ணாதவர்களாக, சமைக்கத் தெரிந்தவர் ஒருத்தர், பாத்திரம் கழுவ மட்டுமே தெரிந்த ஒருத்தர் என்று கலவையாகத் தேர்ந்தெடுப்போம். அனேகமாக ஓரிரு பெண்களும் அமைந்து விடுவார்கள். எல்லோருக்கும் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வாடகை வரும்.
எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியில் வேலைக்குப் போவதால், திரும்பி வீட்டுக்கு வருவதிலும் சிக்கலில்லை. ஒருவருக்கு வேலை தாமதமானால், இன்னுமொருவராவது அவருக்காக அலுவலில் தாமதித்தே அவருடன் கிளம்புவார். இதனால், இரவு பத்து மணிக்கு பெண் தனியாக வந்தால் எதிர்கொள்ளும் சிரமங்களும் தவிர்க்கப்பட்டது.
பெண்களும் கூட இருப்பதால் அவர்கள் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு பயந்தோ அல்லது அவர்களின் உதவியானாலோ அறைகள் ஓரளவு ஒழுங்காக சுத்தமாகவே இருக்கும். இந்தக் கதையில் வரும் பேயிங் கெஸ்ட் பிரச்சினையை தொடர்ச்சியாக எதிர்கொண்டதில்லை. அந்தவகையில் எனக்குப் பெரிய கொடுப்பினை. ஆனால், அலுவல் சம்பந்தமாக பிறரோடு வீட்டைப் பகிர்ந்தபோது, கொடுமையான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன். நிச்சயமான பெண்ணுடன் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர்கள், இரண்டு டாலர் பிரெட் பாக்கெட்டில் இருந்து இரு ரொட்டிகளை எடுத்ததற்காக ஒரு டாலர் தர வேண்டும் என்று வசூலித்தவர்கள், என்று விதவிதமாக எரிச்சலூட்டுபவர்கள் அறிமுகமானார்கள்.
இன்றைய நிலையில் பாதுகாப்பு என்பதை விட சௌகரியம் என்பது மட்டுமே பேயிங் கெஸ்ட் ஆக பெண்களை வசிக்க வைக்கிறதோ?