‘நேசமுடன்’ வெங்கடேஷ் மீன்டும் மின்னஞ்சல் மூலம் தன் எண்ணங்களைப் பகிர அரம்பித்திருக்கிறார்: நேசமுடன் – மடல் இதழ்
தொடர்பான பதிவுகள், விளக்கங்கள்:
1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்
2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்
பத்து போட்டுவிடலாமா?
அ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)
ஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூகிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…
இ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.
ஈ) இந்த மாதிரி கேட்காமல் கொடுக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை. மேலும், இந்தப் பதிவெல்லாம் நேசமுடன் வலையக சேமிப்பில் கிடைக்கவும் செய்கிறது. அப்படியிருக்க, ஏன் தனி மடலில் படிக்க வேண்டும்?
உ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா?
ஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி
எ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை?
ஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.
ஐ) ஒரு வேளை இது கடித இலக்கியம். நமக்குத்தான் மேட்டர் புரியவில்லையா? (தொடர்புள்ள பதிவு: கடித இலக்கியம் :: கடிதச் சேகரம்: “கல்யாண்ஜி”
ஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.
இவ்வளவு செல்லமாக மிரட்டிவிட்டு, டிஸ்க்ளெய்மர் இல்லாவிட்டால் எப்படி: பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசு என்றால், பதிவு எப்படி வருது என்று டெல்வரி மெகானிசத்தைப் பற்றி மட்டும் அங்கலாய்க்கிறானே இவன்! (மனசாட்சி)
ரொம்பவே சரியான வாதம். தலைப்பை மட்டும் மடலில் அனுப்பலாம் அல்லது சுருக்கமாக குங்குமம் போல் `இந்த வாரம்` என ஆர்வத்தை தூண்டி லிங்க்கலாம்.
கிரி, நன்றி.
தனியாகப் புலம்பினேனோ என்னும் வருத்தம் தொலைந்தது 😛
பாபா,
நீங்கள் தவறவிடுகிற ஒரு விஷயம், எல்லோரும் ப்ளாக் படிப்பதில்லை, எல்லோருக்கும் ஆர்.எஸ்.எஸ். தொழில்நுட்பங்கள் தெரிந்திருப்பதில்லை.
உதாரணமாக, என் அப்பா அல்லது சகோதரரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு ஈமெயில் தெரியும், லிங்க் கொடுத்தால் க்ளிக்குவார்கள், பதிவுக்கு அடிக்கடி சென்று படிப்பது, ஆர்.எஸ்.எஸ்.மூலம் வரவழைத்துப் படிப்பதெல்லாம் தெரியாது, அல்லது ஆர்வம் இல்லை,. அப்படிப்பட்ட ஆடியன்ஸை வெங்கடேஷ் நேரடியாக அவர்களுடைய மின்னஞ்சல் பெட்டியில் அணுகுவதுதான் சரி என்று நான் நினைக்கிறேன்.
அவருடைய கருத்துகளை மின்னஞ்சலில் கால் மணி நேரம் செலவிட்டுப் படிக்க ஆர்வம் உள்ளவர்களை அவர் இதன்மூலம் சென்றடைகிறார், மற்றவர்கள் ப்ளாக்மூலம் வருவதற்கும் வழி செய்து கொடுத்திருக்கிறார், ‘மேல் விவரங்களுக்கு என் ஈமெயிலை அணுகவும்’ அல்லது ‘மேலே படிக்க என் ப்ளாகுக்கு வரவும்’ என்று திரை போடாமல் இரண்டு விதமாகவும் வாசிக்கத் தருகிறார் – இதில் என்ன தப்பு?
பை தி வே, நான் ப்ளாக் நிறையப் படிக்கிறவன், நாள்முழுக்க கூகுள் ரீடருடன் உறவாடுகிறவன், ஆனாலும் இந்த ‘நேசமுடன்’ மடல்களை ஈமெயிலில்தான் படிக்கிறேன் – அந்த unique branding எனக்குப் பிடித்திருக்கிறது.
– என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்ஸ், __/\__
இது நாபிமுமூகா ஆகிவிடும் அபாய வாதம் என்னும் உரிமைதுறப்புடன் 🙂
—-நீங்கள் தவறவிடுகிற ஒரு விஷயம், எல்லோரும் ப்ளாக் படிப்பதில்லை, —-
100% ஒத்துக்கறேன். இந்திரா பார்த்தசாரதி, ஹரியண்ணா போன்றவர்கள் இப்படித்தான் வாசிக்க எளிது.
நான் சொல்வது என்னைப் போன்றோருக்கும், ‘எரிதமா’கப் பெறுபவர்களை மட்டுமே.
மேலும், நான் அச்சு மட்டும்தான் பார்ப்பேன், இணையம் பார்க்கமாட்டேன் என்று சொன்ன என் அம்மா கூட, இப்பொழுது வலையில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மின்னஞ்சல்தான் கதி என்று இருப்பவர்களை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டாமா 😉
—-திரை போடாமல் இரண்டு விதமாகவும் வாசிக்கத் தருகிறார் – இதில் என்ன தப்பு?—-
எளிதாகச் சொன்னால் ரிப்பெட்டீஷன். நான் ஒரு கட்டுரை எழுதி அதை ஃபேஸ்புக், 10 டிவிட், இந்தப் பதிவு, 10 ஹாட் பதிவு என்று எல்லா இடத்திலும் இடுவது போல்…
கேட்டால், என்னை முகப்புத்தகத்தில் மட்டும் தொடர்பவர் இருக்கிறார்கள் (அவர்களுக்காக ஃபேஸ்புக்கில் இடுகிறேன்); ட்விட்டரில் மட்டும் கண்காணிப்பவர்கள் உண்டு (அதற்கு ட்விட்ஸ்); பதிவாக இருந்தால் குறிச்சொல் இடலாம்… எனவே.
ஒப்புமை கொஞ்சம் அதீதம் என்றாலும்…
ஒரு தடவை அறிமுகம் செய்வித்துக் கொண்டு, ‘இந்த மாதிரி நான் உங்களோட தொடர்ந்து உரையாடணும் என்றால்…’ அப்படீன்னு கொக்கி போட்டு, பதில் வாங்கி, உணமையான சப்ஸ்க்ரைபரைப் பிடிக்கலாம்.
மேலும், எரிதம் என்று நினைப்பவர்கள் இப்பொழுதெல்லாம் unsubscribe செய்யச்சொல்லி பதில் இடுவதில்லை. Mark as Spam. அம்புட்டுதான். அதன்பிறகு அவர்களின் இன்-பாக்ஸை அது தீண்டவே தீண்டாது.
என்னைப் போன்ற ரெண்டுங்கெட்டான்கள், படிக்காமல் பத்திரமாக அஞ்சற்பெட்டியிலேயே வைத்திருப்போம்.
இப்பொழுது ஒரு பேச்சுக்கு, அவரே கணக்கு எடுக்கிறார் என்று வைப்போம். எரிதம் என்று குறிப்பிட்டவர்களையும் சேர்த்துதானே கூட்டுத் தொகை அமையும்? அப்பொழுது ஒரு போலி நம்பிக்கைக்கும் ஏதுவாகிறது.
பதிவாக இருப்பதின் லாபம், உடனடித் தன்மை. ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று காத்திருக்க வேண்டாம் என்பது கொசுறு லாபம்.
மறுக்கா திருப்பி 140 எழுத்துக்குள் சொன்னா: Ask once with a genuine email about blog posts being sent to U every time; If replied back with an ack, then send; otherwise, don’t send.
பாலாஜி,
நீங்கள் பத்து கேள்விகள் போட்டதற்கு நன்றி. பத்துக்கும் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. உங்கள் வாதங்கள் சரி என்பதை ஒத்துக்கொண்டு
மேலே தொடர்வதுதான் சரி.
ஏன் இமெயில் வடிவத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்ற கேள்விதான் மேலே உள்ள பத்துக்கும் அடிநாதம்.
1 கையால் எழுதும் கடிதத்துக்குப் பின், நான் அறிந்து, இமெயில்தான் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதில் ஒரு சப்ஜெட்டிவ்விட்டி இருக்கிறது.
வலைப்பதிவோ, டிவிட்டரோ எல்லாமே உணர்வு ரீதியாகக் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது (இது என்னுடைய அபிப்பிராயம்). நான் ஏதோ சொல்றேன், இஷ்டமிருந்தால் படித்துக்கொள் என்பது வெப் 2.0 கருத்துக்கே முரண்பாடானது அல்லவா?
வலைப்பதிவோ டிவிட்டரோ மனிதர்களிடையே நெருக்கத்தை உருவாக்குவதற்கு பதில், அது அவசர செய்தியை அல்லது ஒரு செய்தித் துணுக்கைப் பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுகின்றன. ஒரு பத்திரிகை செய்திக்கும் வலைப்பதிவுக்கும் என்ன வித்தியாசம்?
சப்ஜெக்டிவிட்டிதானே?
அந்த சப்ஜெக்டிவிட்டியை விட்டுவிட்டு, மீண்டும் அப்ஜெக்டிவ்வாக இருப்பதால், என்ன லாபம்?
இமெயில் இந்த சப்ஜெக்ட்டிவ்விட்டியை கைவிட்டு விட வில்லை.
2. இதைச் சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழில் வலைப்பதிவுகள் எழுதும் பலருக்கு பின்னூட்ட / மறுமொழி மயக்கம் அதிகமாகவே இருக்கிறது.
சட்டெனத் தன்னைச் சுற்றி ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருக்கிறது, பலர் பாராட்டுகிறார்கள், முரண்படுகிறார்கள், தன்னை முக்கியமான ஒருவனாகக் கருதுகிறார்கள், தன் கருத்தை வெட்டியோ ஒட்டியோ கருத்துகள் வெளியிடுகிறார்கள் என்ற மாயத் தோற்றம் இங்கே அதிகம். இதைக் குறை சொல்ல நான் வரவில்லை. அடிப்படையில் மனிதனுக்கு இருக்கும் புகழ் ஆசையின் வெளிப்பாடு இது.
தப்பில்லை.
ஆனால், வலைப்பதிவுகளில் சத்தே இல்லாமல் மொக்கை போடுவது, அதிக பின்னூட்டங்களைக் கொண்டுவரும் விஷயங்களையே மீண்டும் மீண்டும் எழுதித் தேய்ப்பது, பதில் எழுதுவது, பதிலுக்கு பதில் எழுதுவது என்று ஒருவித மயக்கப் பாரம்பரியம் தமிழ் வலைப்பதிவுலகில் தோன்றியிருக்கிறது. இமெயிலில் இந்தத் தொந்தரவு எதுவுமே இல்லை. பதில் போட்டால் எனக்குத்தான் பதில் போடவேண்டும். அதை என் வலைப்பதிவில் வெளியிடுவதா வேண்டாமா என்பது என் முடிவு.
3. என் இமெயில் நேசமுடன், வாசகர்களோடு அந்தரங்கமாக உரையாடக் கூடியது. பலர் அதை எரிதங்களாக நினைத்து ஒதுக்கிவிடலாம். பரவாயில்லை. படிக்கக் கூடிய பத்து, இருபது பேர் மனத்தில் என் எழுத்து போய்ச் சேருகிறது. அது போதும். இந்த பத்து இருபது பேர்கள் தான் மெல்ல மெல்ல வளருவார்கள். எனக்கு இன்ஸ்டண்ட் கிராடிபிகேஷனில் நம்பிக்கை இல்லை. டிலேயிட் கிராடிபிகேஷனுக்கு நான் தயார். இது என் ஊடகம். அவ்வளவுதான்.
4. இமெயில்கள் சின்னதாக நறுக்கென்று இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு: இந்த எண்ணமே வெகுஜன கலாசாரம் திணித்த மெண்டாலிட்டி. வேலை, அவசரம், நேரமே இல்லை, ஓடிக்கொண்டே இருக்கிறேன், படிக்கவே முடிவதில்லை என்பதெல்லாம் நம்மை நாமே அதிகம் காதலிப்பதால் வரும் எண்ணங்கள்! இப்படியெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறோம்!! நம்ப நினைக்கும் பொய்கள்!!! இதில் எனக்குக் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. நேசமுடன் இமெயிலை தலைவலியாக நினைப்பவர்கள் தெரிவித்துவிடுங்கள். உங்களின் ஐடிக்களை உடனடியாக என் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட சித்தமாயிருக்கிறேன்.
நேசமுடன்
வெங்கடேஷ்
விரிவான பதிலுக்கு நன்றி வெங்கடேஷ்.
—1 கையால் எழுதும் கடிதத்துக்குப் பின், நான் அறிந்து, இமெயில்தான் மிகவும் நெருக்கமாக இருக்கிறது.—
ஒத்துக் கொள்கிறேன்.
2. —வலைப்பதிவுகள் எழுதும் பலருக்கு பின்னூட்ட / மறுமொழி மயக்கம் அதிகமாகவே இருக்கிறது.—
மறுபடியும் 100% உண்மை.
எனினும், நீங்கள் பதிவில் தொகுப்பதை விட்டுவிடவில்லையே! அங்கும் மறுமொழி வசதி இருக்கிறதே.
அவ்வாறு இருப்பது முக்கியமானது. நாளைய தேதியில் ரெஃபர் செய்வதற்காக, தேடுபவர்கள் அப்படித்தான் வந்தடைவார்கள். அப்பொழுது வசதியாக முழு விவாதமும் கிடைக்கும்.
பதிவில் கிடைக்கும் ‘மீ தி ஃபர்ஸ்ட்டு’, ‘பார்ப்பனிய’ திட்டுகள் மின்னஞ்சலில் தவிர்க்கப்படும். எனினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத நிலையில்தான் தங்களை நான் அறிவேன்.
4. —இமெயில்கள் சின்னதாக நறுக்கென்று இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு: இந்த எண்ணமே வெகுஜன கலாசாரம் திணித்த மெண்டாலிட்டி. வேலை, அவசரம், நேரமே இல்லை, ஓடிக்கொண்டே இருக்கிறேன், படிக்கவே முடிவதில்லை —
தூள் அப்சர்வேஷன்.
—உங்களின் ஐடிக்களை உடனடியாக என் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட சித்தமாயிருக்கிறேன். —
இதைத் தானியங்கியாக இயங்கும் மெயிலிங் லிஸ்ட் வழக்கியிடம் அனுப்பி சொல்வது எளிது. அந்தப் புள்ளிவிவரங்களை அட்மின் பார்க்கவியலும் என்றாலும், அதில் முகத்திலடித்தாற் போல் சொல்லும் தொனி கிடையாது. ஆனால், நேரடியாக சொல்வதில் சிலருக்கு பிரச்சினை இருக்கும்.
எனக்கு தங்களின் மின்னஞ்சல் நினைவூட்டலாக, வசதியாக இருக்கிறது. ஜெயமோகன்.இன் கூட மின்னஞ்சல் சந்தாதாரர் ஆகி இருக்கிறேன். அது தவிர செய்தியோடையும் சப்ஸ்க்ரைப் செய்துள்ளேன்.
ஆனால், நான் தங்களை (பெரும்பாலான வலைப்பதிவுகளை) தங்கள் பதிவுக்கு சென்றுதான் வாசிக்கிறேன். (அல்லது கூகிள் ரீடர்) அதுதான் எனக்கு வசதி.
இமெயில் வழியாக நண்பர்களைத் தொடுவது மிக மிக வித்தியாசமான விஷயம். சொல்லப் போனால், ரா.கா.கி காலத்தில் கிடைத்த பரிச்சயம்தான் இன்றும் தொடர்கிறது. இல்லையென்றால், நீங்கள் தொட முடியாத உயரத்தில் இருப்பவர் என்று ஒதுங்கியே இருந்திருப்பேன். எளிதில் பழகக்கூடிய ஆளுமை, சராசரிகளோடும் சரிசமமாகப் பழககூடியவர் என்பது தெரியவே வந்திருக்காது.
ஆனால், அந்த ஸ்டைல் இப்போதைய நேசமுடன் அஞ்சலிலும் இருக்கிறதா?
உள்ளடக்கத்தை சொல்லவில்லை.
மடலின் துவக்கத்தில் இன்ஃபார்மலாக கடந்த வாரம் நடந்தது குறித்த நாலு வார்த்தை வைத்தாலே போதுமானது…
இப்போதைக்கு ஜஸ்ட் மூன்று பதிவுகளின் தொகுப்பாகத்தானே ‘நேசமுடன்’ மின்னஞ்சல் வருகிறது?
அதற்கு பதிலாக (அல்லது கூடுதலாக?) நீங்க சொன்ன பின்குறிப்புகளை கொஞ்சம் ஸ்பெஷலாக மடலில் கிடைப்பவர்களுக்கு மட்டும் சொன்னாலோ, வேறு வழியில் கொடுத்தாலோ, வெகு சுவாரசியம். (என் மனைவி இவ்விதழை படித்து முடித்துவிட்டார். அவர் கமெண்ட்…)
அஞ்சலில் பெறுபவர்களுக்கு யு.எஸ்.பி வேண்டாமா 🙂
நன்றி வெங்கடேஷ். விரிவாக பதில் எழுதும் வரை:
Teen Content Creators – Pew Research Center: According to the latest from Pew 64% of online teens between the age of 12 to 17 consider themselves content creators
மின்னஞ்சல் வழி பதிவுகள் என்பது நிச்சயம் புதிய விஷயம்தான். (வலைப்பூ இதழில் அஞ்சு வருஷத்துக்கு முன்னால் கூட குறிப்பிட்டேன்). ஆனால் அதை சரியாய் define செய்யவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதாவது இணையத்திலும் அது கிடைக்கும்போது அதன் தனித்தன்மையை இழந்து விடுவதாக படுகிறது. Mailing List -ற்கு எதிர் வடிவமாக இணையத்தில் டீசர் மட்டும் தந்து மின்னஞ்சலில்தான் கட்டுரைகளைப் பெற முடியும் என்றால் மின்னஞ்சல் இதழ் என்பதற்கான முழுமையான அர்த்தம் கிடைக்கிறது.
>>பிறர் அனுப்பும் கடிதங்கள் பார்சல் ?<<
Google Wave வந்த பின் வாசகர்கள் நேரடியாக மின்னஞ்சலுக்குள்ளேயே Feedback போட முடியும்.