நலம். நாடலும் அதுவே.
கடிதம் பார்த்தவுடன் பதில் எழுதணும்னு தோணிச்சு. ஆனால், என்ன எழுதலாம் என்று தெரியல.
வேலையில் காய்ச்சு எடுத்துக் கொண்டிருந்தார்கள்னு ஒரு சால்ஜாப்பு சொல்லத் தோணுது. அதற்கப்புறமா இந்தியா + சென்னை போய் மூணு வாரம் ஓய்வெடுத்தப்போ கூட எழுத முடியாமப் போனதுக்கு வருத்தம் சொல்லிக்கறேன்.
மன்னிக்க 🙂
ஆணி புடுங்கறதுனு அலுத்துக்கொள்வது எங்களுக்கு கைவந்த கலை. எழுத்துத் திறமைக்கு மதிப்பில்ல என்று சலித்துக் கொள்வது படைப்பாளிக்கு வலை வந்த கலை.
சென்னையில் ஆட்டோ ஓட்டுறவனோடு பேசிக் கொண்டிருந்தேன். கார்த்தால நாலு மணிக்கு எந்திரிச்சு நாலரைக்கு வண்டிய ஆரம்பிக்கிறவன், மதியானம் ஒன்றரை மணி வரை ஓட்டுறான். அப்புறம் சாப்பாடு; கொஞ்சம் ரெஸ்ட். வெயில் தாழ, நாலு மணிக்கு மீண்டும் இன்னொரு ஷிஃப்ட் போட்டு ராத்திரி 11 மணி வரை அடுத்த ஓட்டம். அதற்கப்புறமும் உழைக்க அவன் ரெடியாம். சவாரி வருவதில்லை என்பதால் உறக்கம்.
நானா இருந்தா இந்தக் கொடுமைய நினைந்து நினைந்து உருகி நாலு பதிவு போட்டிருப்பேன். அவன் ‘சொந்த ஆட்டோ’ என்று பெருமிதம் கொண்டிருந்தான்.
அடுத்தவரை நினைத்து தன்னை மதிப்பிடுபவனுக்கு என்றுமே நிம்மதியில்லை என்பதை இன்றைய நியு யார்க் டைம்சில் பிகோ ஐயரும் சொல்லியுள்ளார். மகிழ்ச்சி என்பது காசினால் வருவதில்லையாம்.
வீட்டில் அனைவரும் நலம்.
மகளுக்கு அவ்வப்பொழுது பொது அறிவு சிற்றுரையாடுகிறேன். கொஞ்சமாய் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முயல்கிறேன். தினமும் அரை மணி நேரம் அவளுடன் செலவழிக்க முடிகிறது.
மற்ற நேரம் டிவி.
வாரயிறுதியில் காரில் பயணிக்கும் நேரம் அவள் கூட இருந்தாலும், இன்னும் சரியாக உபயோகிக்கலாம் என்னும் குற்றவுணர்வுடன் பறக்கிறது.
எம்பிஏ-விலோ எஞ்சினியரிங்கிலோ குழந்தை வளர்ப்பை கட்டாயப் பாடம் ஆக்கலாம். திருமணம் ஆவதற்கு முன் செர்டிஃபிகேட் படிப்பு முடித்தால்தான் தாலி என்றாவது வைக்க வேண்டும். சமைக்கக் கற்று கொடுத்தல் முதல் முதலுதவி மருத்துவம் வரை இதில் சேர்க்க வேண்டும்.
மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள். பிறகு சமாதானங்கள் என்று சௌகரியமாகவே வாழ்க்கை செல்கிறது.
சமீபத்தில் படித்த புத்தகம் எதுவும் மனதில் நிற்கவில்லை. குள்ளசித்தன் சரித்திரம், யாமம் போன்ற புகழ்பெற்ற வெகுசன நாவல்கள்; நூலகத்தில் எடுத்த சில ஆங்கிலப் புத்தகங்கள்… குறிப்பிட்டு பரிந்துரைக்க எதுவும் இல்லை.
நாளிதழ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டேன். இணையத்தில் மட்டுமே தினசரி செய்திகள். இங்கே பாஸ்டன் க்ளோப் திவாலாகும் நிலை.
இதுவரை இமையத்தை நான் வாசித்ததில்லை. இப்பொழுதுதான் கோவேறு கழுதைகள் நியு புக்லேன்ட்ஸில் வாங்கினேன்.
சென்ற வருடம் வரை கடல் ஷிப்பிங் இருந்தது. அமெரிக்கா வந்து சேர்வதற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டாலும் சல்லிசான காசு. இப்பொழுது அதை எடுத்துவிட்டார்கள். SAL என்கிறார்கள். சுண்டைக்காய் அரைப்பணம்; சுமகூலி முக்காப் பணம் கதை. 4000 ரூபாய்க்கு புத்தகம். அனுப்ப 5000த்திற்கு மேல் எடுக்கிறது! ஸ்பீட் போஸ்ட்டில் எட்டாயிரத்து சில்லறைதானாம்.
இன்னொருத்தர் பார்க்க புத்தகங்களை எடுப்பது எனக்கு ஒவ்வாதது. இந்த முறை உண்மைத் தமிழன அகப்பட்டு விட்டார். சொல்லவும் முடியாமல் நெளியவும் முடியாமல், படித்து, புரட்டி, அலசி தீர்மானித்தேன்.
நியூ புக்லேன்ட்சுக்கோ கடையை மூடும் நேரம். ஒரு நாள் கூத்துக்காக தாமதமாக திறந்து வைத்திருந்தார்கள்.
அங்கே ஒ ஏ கே தேவரின் மகன், சீரியலில் நடிப்பவர் வந்திருந்தார். குழந்தை வளர்ப்பு + பராமரிப்பு குறித்த புத்தகம் வாங்கிச் சென்றார்.
இருக்கும் புத்தகங்களை படித்தால்தான் புதியது வாங்குவது என்பது இனி மசான வைராக்கியம் அல்ல. வீட்டில் குவிந்திருக்கும் நூல்களை ஒரு முறையாவது அலசி ஆராய்ந்து விமர்சனமோ பதிவோ இட்ட பிறகுதான் இனி அடுத்த வாங்குதல் வைபவம்.
நியூ புக்லேன்ட்ஸ் முழுக்க நிறைய தெரிந்த, அறிந்த முகங்களின் புத்தகங்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் பொறாமையாகவும் இருந்தது. இத்தனை பேரை ஒரளவாவது நேரடியாக அறிந்திருக்கிறோமே என்பதில் சந்தோசம். இவர்கள் எல்லாம் எழுதும்போது நமக்கு எழுத வாய்க்க வகையில்லையே என்பதில் திறமை மீது ஏக்கம்.
எனக்கு இந்த வருட கோட்டா முடிந்தது. அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் ஜனவரியில்தான் சென்னை செல்ல வேண்டும் என்று ஆசை. அது கிடக்கிறது ஜனவரி 2011! பார்ப்போம்.
விடுமுறையில் சொந்த ஊர் சென்று வந்தால் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி’ என்று கன்னையாவாக அமிழ்ந்திருக்கும் மனசு புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. சொந்த பிசினெஸ் துவங்கணும், ஏதாவது புதுசாக் கத்துக்கணும், மனைவியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கா நேசிக்கணும், குழந்தைய மதிக்கணும் என்றெல்லாம் தோன்றுகிறது.
சொந்த இடம் வந்தவுடன் வேதாளம்… முருங்கை மரம்…
சீக்கிரம் ரிடையர் ஆகணும். இல்லை… கொஞ்சம் பெரிய லீவாப் போட்டு ஊர் நெடுக சுற்றிவிட்டு அலுத்தபிறகு மீண்டும் வேலைக்கு திரும்பணும்.
நிறைய புலம்பிட்டேன்.
யாரைப் பார்த்தாலும் இப்படி அட்வைஸும் ஆலோசனையுமாக சொற்பொழிவதை நிறுத்த வேண்டும் என்பதை திருப்பதியில் ஒரு மருந்துக்கடைகாரர் சொல்லிக் கொடுத்தார்.
எனக்கு தொண்டையில் கிச்கிச். ஹால்ஸ் எடுத்தோம். அதன் கூட இன்னொரு பெயர் தெரியாத வஸ்து தனிக்கட்டையாக இருந்தது. விக்ஸ் போல் இருமல் மாத்திரை என்று எடுத்துப் பார்த்தேன்.
அதுவோ, சப்புகிற மிட்டாய் அல்ல. கடித்துத் துவைக்கும் இனிப்பு மருந்து. வைத்துவிட்டேன்.
அண்ணன் பையனுக்கு அது பிடிக்கும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.
‘சின்னப் பயன் சார்… கேட்கிறத வாங்கிக் கொடுக்காவிட்டால் துவண்டு போயிடுவான்; பிஞ்சு வெம்பிடும்’ என்று கருத்து சொல்லி தள்ளிவிடப் பார்த்த ஓனரை பொரிந்து தள்ளியவுடன் தான் இன்டெர்னெட்டில் அனானிமஸ் வசதி எம்புட்டு பெருசு என்று புரிந்து கொண்டேன்.
வாழ்த்துகளுடன்,
அடியேன்