Monthly Archives: செப்ரெம்பர் 2006

New York Upstate Lakes Tour

மண்ணும் மந்திரியும் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இதுதான் ப்ளாசிட் ஏரி. இந்த ஏரியின் பெயரில் ஆங்கிலப் படம் வெளி வந்திருக்கிறது. கொடைக்கானல் போல் மலை வாசஸ்தலம். கோடை காலம் கூடிய சீக்கிரமே பூப்பெய்தி இலைகளைத் துறப்பதால், காடுகள் மலைகள் பிரதேசத்திற்கு ஒரு சுற்றுலா.

உள்ளோட்டம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ப்ளாசிட் ஏரியில் இரு முறை குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடந்துள்ளது. 1980-இல் நடந்த பனி விளையாட்டு மைதானத்தை இங்கே காணலாம். உயர்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் இருவர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

கனவு :: ஞானக்கூத்தன் கவிதைகள்

மலைமுகடுகளின் பிரதிபலிப்பு ஏரியில் விழுகிறது. துடுப்பு படகு, சைக்கிள் படகு, பெடல் படகு என்று விருப்பமானதை வாடகை எடுத்து ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்றோ, ‘வசந்த கால நதிகளிலே’ என்றோ பாடி தேனிலவை அசை போட வைக்கிறது.

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடிராண்டாக் மலைப்பகுதியில் இந்த வகை ஈஸி-சேர் மிகவும் பிரபலம். அடிராண்டாக் இருக்கை என்றே அழைக்கிறார்கள். காலை முழுவதும் மலையேறி சிகரங்களைத் தொட்ட களைப்பு நீங்க மாலையில் ஏரிக்கரையோரமாக ஆற அமரச் சொல்கிறது.

யாரோ ஒருத்தர் தலையிலே :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடுக்கடுக்கான குழாய்களை வைத்து நீர்வீழ்ச்சியை சித்தரிக்கும் அமைப்பு. அருகில் உடைந்து போன சக்கரம். மறுசுழற்சியாகும் தண்ணீர். இயற்கையில் மேகம் என்னும் நீர்தொட்டி. பக்கத்திலேயே 700 அடி படிக்கட்டு அருவி. குளித்து நனைந்து மகிழ முடியாத சக்கரமாக என்னை நினைத்துப் பார்க்க வைத்தது.

உங்களுக்கு ஏதாவது கவித்துவமாக (aka அச்சுபிச்சுத்தனமாக) நினைக்க வைக்கிறதா?

மருதம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தப் பகுதி எப்படி உருவானது? எத்தனை வருடமாக இங்குள்ள பாறைகள் பழமையானது? ஆங்காங்கே காணப்படும் விநோத குழிகளின் காரணம் என்ன? போன்ற தகவல்களை அவ்வப்போது விளக்கும் பலகைகளையும் படித்துப் பயனடைந்தேன்.

மழைநாள் பாதை :: ஞானக்கூத்தன் கவிதைகள்

‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ அல்லது ‘அங்கும் இங்கும் பாதையுண்டு; இன்று நீ எந்தப் பக்கம்?’

சூரியனுக்குப் பின்பக்கம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ஜார்ஜ் ஏரி நகரத்தின் நீதிமன்றம். அந்தந்த ஊருக்கு சென்றவுடன் நுழையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள தலங்களை கண்டுபிடிப்பது பிடிக்கும்.

எழுதக் குவிந்த :: ஞானக்கூத்தன் கவிதைகள்

வெள்ளைமுக (வைட் ஃபேஸ்) மலையுச்சியில் இருந்து ப்ளாசிட் ஏரியின் இன்னொரு தோற்றம். பனிச்சறுக்கு காலங்களில் புகழ் பெற்ற மையம். மலையில் இருந்து சைக்கிள் ஓட்டி கீழே இறங்குவதை பலரும் தேர்ச்சியுடன் விரைவாக சாகஸமாக செய்தார்கள்.

மேலும் சில நிழற்படங்கள் (எட்டு ்ஞானக்கூத்தன் கவிதைகள்)


| | | |

Left parties to meet to review Two years of the Govt.

Dinamani.com – Headlines Page

மத்திய அரசின் 2 ஆண்டு செயல்பாடு: இடதுசாரி கட்சிகள் பரிசீலிக்க முடிவு

புதுதில்லி, செப். 7: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடு குறித்து பரிசீலிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன், வியாழக்கிழமை புதுதில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த இதர விவரம்:

இடதுசாரிக் கட்சிகள்-ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு விவகாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் ஆகியவை குறித்தும் மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  • சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
  • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
  • வனப்பகுதி நிலங்களின் உரிமைகளை விவசாயத் தொழிலாளர்களுக்கே உரிமையாக்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும் இடதுசாரிகள் கோரிவருகின்றனர்.

    குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் செல்வதை அனுமதிக்க இயலாது. எனவே அரசை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கான யோசனைகளை இடதுசாரிகள் தெரிவிப்பார்கள் என்றார் பரதன்.

  • Abu Salem wishes to contest for MLA from Mubharakpur

    Dinamani.com – Headlines Page

    உ.பி. தேர்தலில் போட்டியிட அபு சலீம் விருப்பம்

    மும்பை, செப். 7: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா அபு சலீம் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவர் முபாரக்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் முழு விருப்பத்துடனும் தெளிவான மனநிலையோடும் தான் இம்முடிவை எடுத்துள்ளார் என அபுசலீமின் வழக்கறிஞர் அசோக் சார்கி தெரிவித்திருந்தார்.

    அபுசலிம் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையில் அபு சலீம் மற்றும் தாவூத் இப்ராஹிமுற்கு அப்னா தளம் என்ற கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக அக்கட்சின் தலைவர் சோனிலால் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    கேள்வியும் நானே… பதிலும் நானே

    பாலாஜி,
    தமிழ் வலைப்பதிவுகளில்‘ என்ற பதத்தை பலரும் பிரயோகிப்பதில்லையே? ‘தமிழ்மணத்தில் நேற்று‘, ‘தமிழ்மணத்தில் சூடு‘ போன்ற உபயோகங்களையே கண்ணுறுகிறேன். ஏன் இந்த நிலை?

    பாலாஜி…
    இதற்கான விடையை நான் முன்பே Daedalus & Kamalhasan என்னும் பதிவில் கோடிட்டுள்ளேன்.

    அதாகப்பட்டது, வேலை தேடி பாரதத்தின் தலைநகரங்களில் அலைந்தபோது ஜெராக்ஸ் செய்திருப்பாயே; ஹௌ டு கோட் இன் சி++ போன்ற புத்தகங்களை 18 பைசாவிற்கு அடையார் ஜெராக்ஸில் கொடுத்தது போலத்தான் இந்தத் தமிழ்மண பயன்பாடும் இருக்கிறது. நிறுவனத்தின் பெயரை பொதுப்பெயராக மாற்றும் அளவு – நகல் எடுத்தலும் செராக்ஸ் நிறுவனமும் நாயகிகளுடன் பின்னிப் பிணைந்து கமல் கொடுக்கும் முத்தம் போல் ஒன்றையேக் குறிக்கிறது.

    காலில் ஒரு முள்ளு பட்டா ‘பாண்ட்-எயிட்‘ போடு; கண்ணில் ஒரு தூசி விழுந்தா ‘க்ளீனெக்ஸ்‘ எடுத்துக் கொடு என்பார்கள். அதுபோல் வலைப்பதிவுக்கு ஒரு நோவு; தமிழ்மணத்திற்கு இன்னொரு வலி என்பது இனி தமிழ் தட்டச்சும் நல்லுலகில் கிடையாது.


    பாலாஜி,
    நேற்று நான் வேலைக் களைப்பில் சோர்வுற்றிருந்தபோது டிசே தமிழனின் கட்டுரை படிக்க கிடைத்தது.

    DISPASSIONATED DJ: வாசிப்பு இடைமறிப்பு :: ராஜ் கெளதமனின் ‘தலித்திய விமர்சனக்கட்டுரைகளை’ முன்வைத்து….

    ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமான்வையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், ‘சிலுவைராஜ் சரித்திரம்’ ‘காலச்சுமை’ போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

    ராஜ்கெளதமன் புத்தகங்களின் வெளியீட்டாளர் மேல் ஆதாரமற்ற அவதூறு போல் அள்ளிவீசப்பட்ட குற்றச்சாட்டுக்களை படித்தவுடன் இது புத்தகத்தைப் பற்றியக் குறிப்பா, புத்தகப் பதிப்பாளர் பற்றிய மேலோட்டமான கிசுகிசுக்களா, வருங்காலத்தில் என்ன நடக்கும் என்னும் பயமுறுத்தல் ஆருடங்களா என்று குழம்பினேன். தட்டச்சுப் பலகை ‘வா வா’ என்று தூண்டி, அலுவல் ‘போ போ’ என்று துரத்தி என்னை பின்னூட்ட ஆலோசனை வழங்கத் தூண்டியது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

    பாலாஜி…
    உனக்கு பின்னூட்ட பெட்டியைக் கண்டால் கை பரபரக்கும் என்று அறியப் பெறுகிறேன்.

    ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவன் மாம்பழம் வேண்டுமென்றான்… ஒன்று கொடுத்தாலும் நகரவில்லை; இந்தக் கன்னி வேண்டுமென்றான்’ என்று ம.கோ.ரா. பாடல் காதில் ரீங்காரமிடுகிறது.

    புத்தகக் குறிப்பில் எதற்கு ராஜ்கௌதமனுக்கு ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா… வஞ்சகன் கண்ணனடா!’ போன்ற இடைச்செருகல்கள் என்று கேள்வி எழுப்ப எத்தனிக்கிறாய். எனக்கும் இவ்வாறு துடிதுடித்து நிறைய தேவையற்ற அடைமொழிகளையும் பொறுத்தமற்ற விளிப்புகளைகளையும், சுட்டிக் காட்டி வாங்கிக் கட்டியிருக்கிறேன்.

    அதன் பிறகு அங்கு நிலவும் மறுமொழி நிலவரத்தை உன்னால் கையாள இயலுமா என்பதை சிந்தித்துப் பார்க்கவும். தமிழினி மூலம் உன்னுடைய புத்தகம் வரப்போவதாக சொன்னால் வலைவாசகர்கள் முட்டாள்கள் இல்லாத காரணத்தால் நம்ப மாட்டார்கள் என்றாலும் உன் மீதும் அவர்கள் வருத்தம் கலந்த கோபம் பாயக்கூடும்.

    ஆனால், போகிற போக்கில் சேறு தெளிக்கப்பட்டவர்கள் மேல் பரிதாபப்படுவதில் தவறில்லை. இந்த சமயத்தில் எனக்கு நேர்ந்த சமீபத்திய நிகழ்வை நினைவு கூறுகிறேன்.

    முந்தாநாள் நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரியில் பின்மதியம் நான்கரை மணிக்கு குளம்பி வாங்குவதற்காக ஸ்டார்பக்ஸ் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவன் ‘கால் ஸ்பூன் சர்க்கரை; 1/2 & 1/2 பாதி; மீதத்திற்கு 2% பால்; அதி சூடு டிகாசன்’ என்று அனுபவித்து தனக்கு வேண்டிய காபியின் பாகங்களை விரிவாக சொல்லி முடித்தான். சொல்லி முடித்த அடுத்த நொடியே படு கோபமாக ‘எனக்கு ஏற்கனவே உங்க ஊரில் பார்க்கிங் டிக்கெட் ஒரு தடவை கொடுத்துட்டாங்க… சீக்கிரம் கலந்து கொடுங்க… உங்க தயவில் இன்னொன்றை உங்க குக்கிராமத்துக்குக் கொடுக்க தயாராக இல்லை’ என்று கடுமையாக சுடுசொல் உதிர்த்தான். அவனை கண்டிக்க மனசு முயன்றாலும், ஜிம்முக்கு போய் வளர்த்த ஆஜானுபாகத் தோற்றத்தைப் பார்த்த மூளைத் தடுத்து நிறுத்தியது.

    அவனுக்கு கொட்டை வடிநீர் வழங்கிய பிறகு, தேவையில்லாத சாடலுக்கு உள்ளான காபி தயாரித்து வழங்குபவர்களைப் பார்த்து ‘That was rude’ என்று பகிர்ந்தவுடன் மனசு லேசானது.

    அதே போல் முடிந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ஏன் இப்படி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம், எகத்தாளமாய் சேறு அள்ளித் தெளித்து மகிழ்கிறார்களோ’ என்று சொல்லவும். Fame invites scrutiny போன்ற பொன்மொழிகளைப் போட்டு சொல்வதும் சமயத்திற்கேற்ப பொருந்தலாம்.

    சில சமயம் காபி வாங்கிக் கொண்டு கதவருகே செல்பவர்களின் காதிலும் உன்னுடைய மறுமொழிகள் விழலாம். அதனால், தங்களின் இடைச்செருகல்களையும் ஜாதகக் கணிப்புகளையும் செவிவழி வம்புகளையும் அடுத்த முறை குறைத்தும் கொள்ளலாம்.


    | |

    Too busy; too filmy

    வலைப்பதிவுகளில் நேரமே கிடைக்க மாட்டேங்குது. ஆத்துல (அதாவது நட்டாற்றில்) ஒரு கால்; சேத்துல (அதாவது வேலையில்) ஒரு கால் என்று புலம்ப எண்ணம். இளையராஜா அடியொற்றி புலம்பல்.

    உள்ளொன்று வைக்கிறேன். வலைத்தோல் களைகிறேன்.

    நாசூக்கு உணவு உண்டு எழுத்துச்சுவை கூறு அறுக்கிறேன்.

    நாற்றமெடுக்கிறது. பற்பசை ஈஷிக்கொள்கிறேன்.

    விளையாட்டுத்தனமாக வளைந்தாலும் வீடியோ ஆட்டமாக வெல்ல நினைக்கிறேன்


    | |

    Satellite City Plan Dropped – Editorial & VaiKo Comments

    Dinamani.com – Editorial Page

    துணை நகரம்

    நாட்டின் நடப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற அதேநேரத்தில் தீர்க்க நோக்குடன் எதிர்காலத்திற்கான திட்டத்தைத் தீட்டுவது என்பது ஆட்சித் தலைமையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அத்தகைய எதிர்காலத் திட்டம், இப்போதுள்ள பிரச்சினைகள் கடுமையாக முற்றாமல் தடுப்பதுடன் எதிர்காலத்தில் இவைபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதாகவும் அமையும். சென்னை அருகே துணைநகரை அமைப்பது என்ற திட்டம் அவ்வகையிலானது.

    உள்ளபடியே சென்னை நகரின் மக்கள்தொகை பெருகி வருகிறது. நகரின் போக்குவரத்துப் பிரச்சினை, குடியிருப்புப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளும் மேலும் மேலும் கடுமையாகி வருகின்றன. என்னதான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் வருகிற ஆண்டுகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. சென்னை நகரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்தாலும் அது தற்போதுள்ள பிரச்சினைகளைத் திருப்திகரமான அளவுக்குத் தீர்க்கும் என்று தோன்றவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு அருகே ஒரு துணைநகரை அமைப்பது என்பது வரவேற்க வேண்டிய திட்டமாகும். நாம் இப்போதே நடவடிக்கை எடுத்தால்தான் அத் துணைநகரம் சில ஆண்டுகளில் உருப்பெறும்.

    எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.

    இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளில் சென்னை நகரம் விரிவடையாமல் அப்படியே இருந்து வந்துள்ளதாகக் கூற முடியாது. நகரம் தானாக விரிவடைய ஆரம்பித்து மீனம்பாக்கம் கிராமம், பல்லவபுரம் கிராமம் என மேலும் மேலும் பல இடங்களை விழுங்கி விரிவடைந்துள்ளது. இப்படி ஏற்பட்ட விரிவாக்கம் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகக் கூற முடியாது. திட்டமிடாமல் தாறுமாறாக ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகத்தான் சென்னையின் பல புறநகர்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.

    சென்னைக்கு அருகே துணைநகரை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மட்டுமன்றி சென்னைக்கு மேற்கிலும் வடக்கிலும் உள்ள இடங்களும் அங்குள்ள நஞ்சை, புஞ்சை தரிசு நிலங்களும் வருகிற ஆண்டுகளில் சென்னை நகரால் விழுங்கப்பட்டுவிடும். சென்னை இவ்விதம் விரிவடைவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. துணை நகரத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும் சென்னை அருகே துணை நகரம் என்ற பெயரில் இல்லாமல் பல புறநகர்கள் தாமாகத் தோன்றத்தான் போகின்றன. ஆனால் அத்தகைய வளர்ச்சி தாறுமாறாகத்தான் இருக்கும். அவ்விதமின்றி அந்த வளர்ச்சி நன்கு திட்டமிட்ட வகையில் இருக்கும்படி நாம் பார்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். திட்டமிட்ட முன்னேற்றம் என்பது எப்போதுமே நல்லது. மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். துணை நகரம் அமைய வேண்டிய இடம் குறித்து பொதுக்கருத்து ஒன்றை எட்டுவதற்கு ஒன்றுபட வேண்டும்.

    சென்னை நகரின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்ட தனியார் அமைப்புகள் பல உள்ளன. அவையும் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும், பிரமுகர்களும் அரசின் இத்தகைய திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்க வேண்டும்.


    Dinamani.com – TamilNadu Page :: துணை நகர விவகாரம்: வைகோ கருத்து

    சென்னை, செப். 5: சென்னை மாநகருக்கு துணை நகரம் என்ற அறிவிப்பும் அதிரடி வாபஸýம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பாருக்கு சரியான எடுத்துக் காட்டு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநதி அறிவித்தார்.

    துணைநகரம் அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், தங்கள் வீட்டையும் நிலங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆகும் அவதியும் அவலமும் ஏற்படும். பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வரும் மக்கள் சொல்லொணாத துன்பத்துக்கு ஆளாக நேரிடும். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று அறிவித்தார் முதல்வர்.

    இந்த நிலையில் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியதோடு, துணை நகரத் திட்டத்தால் அல்லல்படப் போகும் மக்களின் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் சுட்டிக்காட்டி துணைநகரத் திட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதற்குப் பின்னரும் சட்டப்பேரவையில் எவர் எதிர்த்தாலும் துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று முழங்கினார். முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல்டி அடித்ததன் மூலம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பார் முரண்பாடுகளுக்கும் தடுமாற்றத்துக்கும் ஆளாகி இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

    Notable News Stories

    செய்தித் தொகுப்பு

  • மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சென்னையில் 4 மேம்பாலங்கள்: மாநகராட்சியில் தீர்மானம் (ஸ்டாலின் இல்லாவிட்டாலும் மேம்பாலம் கட்டப்படுகிறதே!)

  • 10 ஆண்டுகள் முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை: வழக்கறிஞர் சங்கம் நன்றி (இனிமேல் வழக்குகளுக்கு பஞ்சம் இருக்காது!)

  • போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு:

    இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

  • மெக்கா செல்ல அரசு நிதியுதவி கொடுக்க கூடாது – இந்தியாவின் அலஹாபாத் நீதிமன்றம்
    1. பத்ரியின் வலைப்பதிவுகள் – ஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு் (டிசம்பர் 23, 2003)
    2. அரவிந்த் லவாகரே, ரீடிஃப், 13 மார்ச் 2001
    3. சையத் சஹாபுத்தீன், தி மில்லி கெஸட், 15 செப்டம்பர் 2002
  • தமிழ்ப் பாடல்களுக்கு தனி இணையதளம் முதல்வர் தொடங்குகிறார்: www.tamil-songs.co.in

  • அமெரிக்கா செல்ல 2 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விசா மறுப்பு
  • குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை :: வைகைச் செல்வி:

    பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

    நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

  • கிருஷ்ணர் வேடத்தில் ரஜினிகாந்த்

  • இராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் 150 க்கும் அதிகமானோர் பலி

  • ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

  • பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும் நாடுகளுக்கு அமெரிக்கா அதீத உதவி

  • உலக வணிகம் எட்டாக் கனியா? :: மு. இராமனாதன்:

    கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த WTO-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, WTO எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.

  • “உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர் :: உதயை மு. வீரையன் – நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சில வாழ்க்கை குறிப்புகள்.

    சென்ற வார செய்தித் தொகுப்பு


    | |

  • Satellite City near Chennai – DMK supports & PMK opposes

    Dinamani.com – TamilNadu Page

    வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

    சென்னை, செப். 1: சென்னை அருகே வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார்.

    சட்டப் பேரவையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவே, உள்கட்டமைப்பு வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றத் தேவையான இடவசதியும் இல்லை.

    இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொண்டது. வண்டலூர் -கேளம்பாக்கம் சாலைக்கு தென்பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் 45-ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் 1.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாக இக் குழுமம் தேர்வு செய்துள்ளது.

    இப் பகுதியில் தற்போது 13,000 குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோமீட்டரில் உள்ள இந் நிலப்பரப்பு, மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும்.

    இப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும்போது நீர்வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டு, தரிசாகவும், புஞ்சையாகவும் உள்ள நிலங்களே கையகப்படுத்தப்பட உள்ளன.

    நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். ஏற்கெனவே மக்கள் வாழும் இப் பகுதிகள், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய துணை நகரத்தின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்பாடு செய்யப்பட்டு, அவர்கள் பயனடையும் வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலைவாய்ப்புகள் இப் பகுதியில் ஏற்கெனவே வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி, அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைய வழிவகுக்கும்.

    இத் துணை நகரத் திட்டம் -வளர்ந்து வரும் சென்னைப் பெருநகரத்தின் நெரிசலைப் பெருமளவுக்குக் குறைப்பதோடு -உலகின் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும், தகவல் தொழில்நுட்ப நகரமாகவும் வளர்ந்து வரும் சென்னையை நோக்கி மேலும் தொழில் முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்த்திடவும், பொதுமக்களுக்குத் தரமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பயன்படும் என்றார் முதல்வர்.


    Dinamani.com – TamilNadu Page :: துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னை அருகே துணை நகரம் அமைய உள்ள உத்தேச பகுதி

    காஞ்சிபுரம், செப். 1: திருப்போரூர் தொகுதியில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களில் 44 கிராமங்களில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களின் கருத்தறியும் கூட்டம் பாமக சார்பில் ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    அப்போது ராமதாஸ் பேசியது: விவசாயிகளின் நிலங்களை பறித்து துணை நகரம் அமைக்கத் தேவையில்லை. இத்திட்டம் மேட்டுக்குடி மக்களுக்காக மட்டுமே பயன்படும். இதற்காக நஞ்சை, புஞ்சை நிலங்களை எடுக்கக் கூடாது. 44 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் நிலங்களை காக்க உயிரையும் துறக்கத் தயாராக உள்ளனர். அரசு அதிகாரிகள் துணை நகரம் அமைக்கும் திட்டம் தொடர்பாக முதல்வருக்கு தவறான தகவலை தந்து வருகின்றனர்.

    போராட்டம் நடத்தும் முதல் ஆள்
    100 நாள்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆனால் துணை நகரம் அமைக்கும் திட்டத்தால் கெட்ட பெயர் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன். எனவே இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

    வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நிலப் பகுதிகளை பயன்படுத்தி துணை நகரங்கள் அமைக்கலாம். ஓரே இடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது நன்றாக இருக்காது. செய்யூர், மதுராந்தகம் வட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.

    தற்கொலை முயற்சி
    பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் அருகே இருந்தவர்கள் அம்முயற்சியை தடுத்து விட்டனர். அவர், கொட்டமேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் (60) என விசாரணையில் தெரிய வந்தது.

    Periyar Cinema: Maniammai Role & Politicians cast aspersions

    Dinamani.com – TamilNadu Page

    “பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவுக்கு எதிர்ப்பு

    சென்னை, செப். 1: “பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு நடிகை குஷ்புவுக்கு பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதுகுறித்த விவரம்:

    “மோகமுள்’, “பாரதி’ போன்ற தரமான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் அடுத்ததாக நடிகர் சத்யராஜை வைத்து “பெரியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வறட்சியான சிந்தனை, மலிவான ரசனைகளுக்கு அப்பாற்பட்ட இவரது படங்கள் யதார்த்த களத்திலிருந்து தடம் புரளாத வகையைச் சார்ந்தவை. ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து வியாபாரியாக இருந்து 29 அரசு பதவிகளை வகித்த ஈரோடு ராமசாமிக்குள் திடீரென சமூக பிரச்சினை நுழைந்தது எப்படி என்பதையும், சராசரி மனிதனாக இருந்த ஒருவர் பெரியாராக மாறியது எப்படி என்பது பற்றியும் சொல்வதுதான் “பெரியார்’ திரைப்படத்தின் கதை.

    பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் மீண்டும் எடுத்துச் செல்லும் வகையில் படம் உருவாகி வருவதால் இந்தப் படத் தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதில் பெரியாரின் முதல் மனைவி நாகம்மை வேடத்தில் “தலைநகரம்‘ படத்தில் நடித்த ஜோதிர்மயி நடித்து வருகிறார். பெரியாரின் இரண்டாவது மனைவியான மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கக் கூடாது என பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

    பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன்: தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மதிக்காமல் “கற்பு’ பற்றி தவறானதொரு கருத்தை வெளியிட்ட ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்?

    மக்கள் வரிப்பணத்திலிருந்து தமிழக அரசு தந்த ரூ.95 லட்சம் நிதியுதவி பெற்ற படம் என்பதால் “பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார் வேல்முருகன் எம்.எல்.ஏ.

    திருமாவளவன்: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “பெரியார்’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையைத் திணிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. குஷ்பு நடிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் அது ஒரு களங்கமாகிவிடும். எனவே குஷ்புவை படத்தில் தவிர்ப்பது நல்லது என்றார்.

    நடித்தே தீருவேன்: குஷ்பு: “பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்க நான் தேர்வுசெய்யப்பட்டிருப்பது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். இது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. தமிழ் கலாசாரத்தை அவமதித்துவிட்டதாக முன்பு என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தப் பிரச்சினை குறித்து நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பல பிரச்சினைகள் வந்தன. கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்.

    இப்போதும் அப்படித்தான் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும்தான் பிரச்சினை என்பது போல் பேசுகிறார்கள்.

    இவற்றையெல்லாம் தாண்டி “பெரியார்’ படத்தில் நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் மூலம் தமிழகத்தில் எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். நான் தமிழ்நாட்டின் மருமகள். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன் என்கிறார் குஷ்பு.

    மணியம்மை வேடத்துக்குப் பொருத்தமானவர் குஷ்புதான்: சத்யராஜ்: படத்தை இயக்கும் ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. “பெரியார்’ பற்றிய தகவல்கள், புகைப்படங்களை மட்டும் ஒரு வருட காலம் திரட்டியிருக்கிறார். திரைக்கதை அமைக்க மூன்று வருட காலம் எடுத்திருக்கிறார். தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்பே என்னை அந்த வேடத்துக்குத் தேர்ந்தெடுத்தார். மேலும் படத்தில் காந்தி, ராஜாஜி போன்ற கதாபாத்திரங்களும் வருகின்றன. ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனையைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தினரே வியந்திருக்கிறார்கள்.

    அதேபோலத்தான் குஷ்புவையும் தேர்ந்தெடுத்திருப்பார். குஷ்புவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவரைப் பற்றி நன்கு தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்த வேடத்துக்கு குஷ்பு பொருத்தமாயிருப்பார் என்றார் சத்தியராஜ்.

    படத்திலிருந்து தங்கர்பச்சான் விலகல்?: “பெரியார்’ படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றிருப்பவர் தங்கர்பச்சான்.

    கடந்த வருடம் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பாக தங்கர்பச்சான் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையில் தங்கர்பச்சானுக்கு எதிராக குஷ்பு மிகவும் ஆவேசமான கருத்துகளை கூறினார். தற்போது தங்கர்பச்சானைச் சார்ந்தவர்கள் குஷ்பு படத்தில் பணியாற்றத்தான் வேண்டுமா? அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது.

    இதுதொடர்பாக தங்கர்பச்சானைக் கேட்ட போது இதுவரை தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றும் கூறினார். பிரச்சினை வலுக்கும் பட்சத்தில் படத்திலிருந்து அவர் விலகுவார் என்று தெரிகிறது.