தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு: உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் புறக்கணிப்பு
தேனி, செப். 28: தேனி மாவட்டம் ஒக்கரைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவி சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இவ் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் இவ்வூர் மக்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இந்த ஊராட்சியின் தலைவராக 1965-ம் ஆண்டிலிருந்து அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுழற்சி முறையில் ஊராட்சித் தலைவர் பதவி, இத்தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் 4 பேர் பொதுப் பிரிவிற்கும், 2 பேர் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த ஊராட்சி மக்கள் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேட்புமனு வாபஸ்?: ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு கிராம மக்கள் மனுத்தாக்கல் செய்யாமல் புறக்கணித்துள்ளதால், தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ள 4 பேரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இல்லையெனில் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்புச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.










