Dinamani.com – TamilNadu Page :: பேரூராட்சி தலைவர் பதவியைப் பெற முயற்சி
சேந்தமங்கலம், செப். 25: ரூ.20 லட்சம் விலை கொடுத்து காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவியைப் பெறும் முயற்சியைப் போலீஸôர் முறியடித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ளது காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி. இப் பேரூராட்சிக்குட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. தற்போது, நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டு, பேரூராட்சி வளர்ச்சிக்காக யார் அதிக தொகை வழங்குகின்றனரோ அவருக்கே தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
பேரூராட்சிப் பகுதியில் உள்ள 3 கோயில்களுக்கும் பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கும் ரூ.20 லட்சம் வழங்குபவருக்குப் பதவியை விட்டுத்தரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, சேந்தமங்கலம் போலீஸôருக்குத் தகவல் கிடைத்ததும் காளப்பநாயக்கன்பட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்து பேரூராட்சிப்பகுதி முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர். தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி தலைவர் பதவியைத் தேர்ந்தெடுப்போம் என எழுத்து மூலமாக அவர்களிடம் கடிதம் பெற்றனர். ஏலம் விடுவது தொடர்பாக யாரேனும் கூட்டம் நடத்தினாலும், தேர்தல் விதிமுறைகளை மீறினாலும் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
ரூ.4 லட்சத்துக்கு தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஏலம்
செஞ்சி, செப். 25: செஞ்சி வட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ரூ.4 லட்சத்து 37ஆயிரத்துக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
செஞ்சி வட்டம் பொன்னங்குப்பம் மற்றும் துத்திப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை சக்கரபாணி என்பவர் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்து விட்டதாக இந்த கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்துள்ளனர்.
இதே போல் பொன்னங்குப்பம், துத்திப்பட்டு, அணேயேரி, முள்ளூர்புதூர், கோணங்குட்டை கிராமங்களைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை ரூ.1லட்சத்து 27ஆயிரத்துக்கு சிகாமணி என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளாக இந்த ஊர்களில் தண்டோராமூலம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனர்.
இதேபோல் செஞ்சி பகுதியில் பல கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளை ஏலத்தில் விட பேரம் பேசி வருகின்றனர்.
ஏலம் போகும் ஊராட்சித் தலைவர் பதவிகள்
தருமபுரி, செப். 25: தருமபுரி மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர் பதவிகள் விலை பேசப்பட்டுள்ளன
தருமபுரிக்கு அருகேயுள்ளது செம்மாண்டகுப்பம் ஊராட்சி. இதுவரை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த ஊராட்சி, இம்முறை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை அருள்மொழி சரவணன், அதற்கு முன்பு பி.பானு பூமணி ஆகியோர் ஊராட்சித் தலைவர்களாக இருந்தனர்.
இந்த ஊராட்சியில் 7 கிராமங்கள் இருப்பினும், குண்டல்பட்டி, எஸ்.கொட்டாவூர் இடையேதான் பிரதானப் போட்டி. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குண்டல்பட்டியைச் சேர்ந்த ஒருவரே வெற்றிக்கனியைப் பறித்து வருகிறார்.
வழக்கம்போல் இம்முறையும் கடும் போட்டி ஏற்பட இருந்த சூழலில், குண்டல்பட்டியில் இருந்து ஊராட்சித் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஊர் பொதுத்திடலில் கடந்த வியாழக்கிழமை ஊர்த் தலைவர்கள், பொது மக்கள் திரண்டனர்.
ஊரில் பொதுநிதி இல்லாததால் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் வந்தும் அதற்கான நிலத்தை வாங்கிட இயலவில்லை; மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன. எனவே பொதுப்பணிக்குப் பணம் தேவை என ஊர் தலைவர்கள் “கூட்டப் பொருளை’ முன்வைத்துள்ளனர்.
அதில் பூமணி என்பவர் ஊர் நலனுக்காக ரூ.4.02 லட்சம் பணம் தருவதாக ஒப்புக் கொண்டதால் அவர் அக் கிராம பொது வேட்பாளராக ஏற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கடத்தூரை அடுத்த வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.1.58 லட்சம் விலை பேசியுள்ளனர் வி.புதூர் கிராம மக்கள்.
கடந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவி, இம்முறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மங்கம்மாள் பசவன் ஊராட்சித் தலைவராக இருந்தார்.
வெங்கடதாரஅள்ளி, வி.புதூர் ஆகிய 2 கிராமங்களை மட்டுமே கொண்ட அந்த ஊராட்சியில் பெரும்பான்மை வாக்குகள் வி.புதூரில் உள்ளன
இந்நிலையில் வி.புதூர் ஊர்ப் பொதுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை ஊர் கூடியது. ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள பி.சண்முகம், ஏசுந்தரம், டி.கோவிந்தன், மகளிர் குழு நிர்வாகி எஸ்.மீனா ஆகியோரிடம் கோயில் விழாவுக்கு எனக்கூறி ரூ.10 ஆயிரம் வீதம் முதலில் டெபாசிட் பெறப்பட்டுள்ளது.
பின்னர், கோயில் திருவிழாவுக்கு அதிக நிதி தருவோர் போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ரூ.1.58 லட்சம் அளிப்பதாகக் கூறிய பி.சண்முகம், பொது வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன ஏனையோருக்கு பணம் வாபஸ் தந்துள்ளனர்.
ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு:
செம்மாண்டகுப்பம், வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிகள் விலை பேசப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரை விசாரிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பங்கஜ்குமார் பன்சல் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட ஊராட்சித் தலைவர் பதவி விலை பேசப்பட்டது நிரூபணமானால் உள்ளாட்சித் தேர்தல் விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் ஐயமில்லை என்றார் ஆட்சியர்.