உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 5 நூல்கள்: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடு
பா. ஜெகதீசன்
சென்னை, செப். 22: உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் 5 நூல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயகத்தின் நாற்றங்கால்களாகத் திகழும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 13. 15-ல் இரு கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. புதன்கிழமையில் இருந்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி விட்டது.
சுமார் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், பொது மக்களும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் குறித்து எளிதாக அறிந்து கொள்ள உதவும் விளக்கக் கையேடுகளாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
சென்னையில் உள்ள “நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ வெளியிட்டுள்ள இந்த 5 கையேடுகளும் மொத்தம் ரூ.95 விலைக்கு விற்கப்படுகின்றன.
கையேடுகளின் பெயர்:
(1) சிற்றூராட்சி நிர்வாகம்,
(2) ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்,
(3) மாவட்ட ஊராட்சி நிர்வாகம்,
(4) சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்,
(5) கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்
என்கிற ஐந்து தலைப்புகளில் இந்த விளக்க நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி அமைப்புகளை மக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், வளர்ச்சியை உருவாக்கும் நிறுவனங்களாகவும் மாற்றும் நோக்கில் இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மக்கள் தலைவர்களுக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்து வரும் க. பழனித்துரை இந்த 5 நூல்களையும் எழுதி உள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் வரலாறு, அவற்றின் சட்ட விதிகள், உரிமைகள் -கடமைகள், வரி விதிப்பு முறைகள், மன்றக் கூட்டங்களை நடத்தும் விதம், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு உள்ள அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.











சிந்தித்து வாக்களிப்பீர் – ஒரு கேளிச்சித்திரம்
http://www.balachandar.net/node/187