தூர்தர்ஷன் தொகுப்பில் சன் டி.வி. மறுபிரவேசம்: புதிய இணைப்பு சன் நியூஸ்
ஏ.தங்கவேல்
புது தில்லி, செப்.21: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூர்தர்ஷனின் டிடிஎச் (கேபிள் இணைப்பின்றி, வீட்டுக்கு நேரடியாக டி.வி. இணைப்புப் பெறும் வசதி) தொகுப்பில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சந்தடியின்றி மறு பிரவேசம் செய்திருக்கிறது சன் டி.வி.
இதில் விசேஷம் என்னவெனில், சன் டி.வி. மட்டுமின்றி, கட்டண சானலான சன் நியூஸ் சானலும் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனின் டிடிஎச் ஒளிபரப்பில், 33 சானல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஐம்பதாக உயர்த்த பிரசார் பாரதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் தூர்தர்ஷன் சானல்கள் தவிர, இலவசமாக ஒளிபரப்பாகும் தனியார் சானல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில்தான் சன் டி.வி.யும் இடம் பெற்றிருந்தது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஜூன் 16-ம் தேதி சன் டி.வி. தூர்தர்ஷனின் (டிடி -டிடிஎச்) தொகுப்பிலிருந்து விலகிக் கொண்டது. டிடி-டிடிஎச் ஒளிபரப்புத்தரம் மிகவும் மோசமாக இருப்பதால் விலகியதாக அப்போது காரணம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், சன் டி.வி. கட்டண சானலாக மாறப் போகிறது என்றும் பேச்சு அடிபட்டது.
ஆனால், இதுவரை இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சானல்கள், இனிமேல் ஒளிபரப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று பிரசார் பாரதி புதிய விதியை அமல்படுத்தியதே சன் டி.வி.யின் கோபத்துக்குக் காரணம்.
சன் டி.வி டிடி தொகுப்பிலிருந்து வெளியேறியதும், அந்த இடம் (அலைவரிசை 12534) ஜெயா டி.வி.க்குக் கொடுக்கப்பட்டது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி கட்டணத் தொகையையும் ஜெயா டி.வி. செலுத்திவிட்டது.
ஆனால், தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 15-ம் தேதி முதல் மீண்டும் டிடி-டிடிஎச் தொகுப்பிலிருந்து சன் டி.வி. ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கிறது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி ரூபாய் கட்டணத்தையும் செலுத்திவிட்டது.
அதுமட்டுமன்றி, மேலும் ஒரு கோடி செலுத்தி, கட்டண சானலான சன் நியூஸ் சானலையும் இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள்.
பிரசார் பாரதி நிறுவன விதிகளின்படி, டிடி-டிடிஎச் தொகுப்பில் ஒளிபரப்பாகும் எந்தச் சானலும் கட்டணச் சானலாக இருக்க முடியாது. இதுபற்றி தினமணிக்குப் பேட்டியளித்த பிரசார் பாரதியின் பொது மேலாளர் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு) மணீஷ் தேசாய், “இலவச சானலாக டிடி தொகுப்பில் சேர்ந்த பிறகு, கட்டணச் சானலாக மாற முடிவெடுத்தால், அந்தத் தொகுப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்றார்.
“சன் நியூஸ் தொலைக்காட்சி டிடி தொகுப்பில் சேர்ந்ததால் பிரசார் பாரதியின் கொள்கைகளில் எந்தப் பாதிப்பும் வராது. இத்தொகுப்பில் உள்ள எல்லா சானல்களும் இலவச சானல்கள் என்ற கொள்கையை சன் டி.வி. நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்றார் தேசாய்.
சன் டி.வி அலைவரிசையில் இருந்த ஜெயா, ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிகள், சன் டி.வி.யின் மறுபிரவேசத்தால் புதிய அலைவரிசைக்கு (10977) மாற்றப்பட்டன. அதாவது, சன் டி.வி.யில் இருந்து 30 சானல்கள் பின்னால் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் பற்றி ஜெயா டி.வி. நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அந் நிறுவனத்தின் சார்பில் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்த பிறகுதான் மாற்றம் பற்றிய தகவல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
“சன் டி.வி. நீண்டகால சந்தாதாரர் என்பதால் அவர்களுக்கு பழைய இடமே கொடுக்கப்பட்டது. அதனால், ஜெயா டி.வி.யைப் புறக்கணிப்பதாக அர்த்தம் இல்லை’ என்றார் தேசாய்.
சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவரான (தொழில்நுட்பம்) கண்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சன் நியூஸ் தொலைக்காட்சியும் டிடி தொகுப்பில் சேர்ந்திருப்பதை உறுதி செய்தார்.
ஆனால், டிடி தொகுப்பிலிருந்து வெளியேறி மூன்று மாத இடைவெளியில் மறுபிரவேசம் செய்திருப்பது ஏன்? தூர்தர்ஷனின் தொகுப்பிலிருந்து விலகியதால், ஜெயா டி.வி. தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், தரப்பட்டியலில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்றும் சன் கருதியிருக்கலாம்.
மேலும், சமீபத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, ஜனவரி 1 முதல் ஒரு தொலைக்காட்சிக்கு சந்தாதாரரிடம் மாதம் ரூ.5 மட்டுமே வசூலிக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தில் உள்ள எல்லா சானல்களையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதனால், எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று அச்சமடைந்திருக்கலாம்.
அத்துடன், திமுகவின் சாதனைப் பிரசார விளம்பரங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய தூர்தர்ஷனின் தொகுப்புதான் சரியான வழியாக இருக்கும் என்றும் முடிவெடுத்திருக்கலாம்.










