Dinamani.com – TamilNadu Page
தமிழகத்தில் அக்.13, 15-ல் உள்ளாட்சித் தேர்தல்
சென்னை, செப். 20: தமிழகத்தில் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 13, 15 தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது.
வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப். 20) தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 18-ம் தேதி நடைபெறும்.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது.
எந்தெந்த இடங்களில்…: முதல் கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகளில் அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறும்.
2-ம் கட்டமாக மதுரை, திருச்சி மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அக்டோபர் 15-ல் நடைபெறும்.
1.31 லட்சம் பதவிகள்: சிற்றூராட்சிகளில் தொடங்கி மாநகராட்சி வரையிலான அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் நிர்வகிக்க ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 962 மக்கள் பிரதிகள் இத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
385 ஊராட்சி ஒன்றியங்களில் 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
29 மாவட்ட ஊராட்சிகளில் 656 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) 8,807 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 987 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.
டெபாசிட் தொகை: உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.
சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.
பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.500.
மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.
பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.
இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும்.
தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். பதற்றமான பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளில் அக்.13-ல் தேர்தல்
சென்னை, செப். 20: சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் அக். 13-ல் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. 2-வது கட்டமாக, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளுக்கு அக். 15-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
வேட்புமனுத் தாக்கல் – 20.09.2006
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் – 27.09.2006
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை – 28.09.2006
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் – 30.09.2006
வாக்குப்பதிவு – 13.10.2006, 15.10.2006
வாக்கு எண்ணிக்கை – 18.10.2006
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு – 25.10.2006
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் – 28.10.2006