Dinamani.com – TamilNadu Page:
மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகல்
மதுரை, செப். 18: அதிமுக முன்னாள் நகர் மாவட்டச் செயலரும், மதுரை முன்னாள் துணை மேயருமான சோ. நவநீதகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினார்.
தமது விலகல் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆரம்ப காலம் முதல் அதிமுகவில் இருந்துவருகிறேன். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். எனக்குத் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்துவந்தார்.
முதலில் வட்டச் செயலராகவும், பின்னர் நகர்மன்ற உறுப்பினராகவும், துணை மேயராகவும், மாவட்டச் செயலராகவும் என்னைப் பல்வேறு பதவிகளில் நியமித்தார். கட்சியின் ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்தார்.
அவர் மறைந்த பின், அவர் தொடங்கிய கட்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக கட்சியில் தொடர்ந்து பணியாற்றினேன்.
அவர் தந்த எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலராக இருந்தேன். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா வரவேண்டும் என முதலில் முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறோம். அதிமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. கட்சித் தலைவரை பார்க்கவோ, பேசவோ முடியாத நிலை நீடிக்கிறது.
இந்த நிலை தொடர்ந்ததால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்போது விலகி உள்ளேன். மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் எடுக்கப்பட்ட முடிவல்ல.
என்னைப் போன்று, அதிமுகவிலிருந்து விலகும் நிலையில் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் விலகுவார்கள்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக பகுதிக் கழகச் செயலராக இருந்த செல்லத்துரை மற்றும் துணைமேயராக இருந்த மிசா.பாண்டியன் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ளனர். தற்போது நானும் விலகியுள்ளேன். இதுவே அதிமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றார் சோ.நவநீதகிருஷ்ணன்.
மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி.சண்முகம் அரசு விழாவில் பங்கேற்று அதிமுக-திமுக இணையவேண்டும் எனக் கருத்துக் கூறிய நிலையில் சோ.நவநீதகிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகியிருப்பது மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் மும்முனை போட்டி?
மதுரை, செப்.18: மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.
மத்திய தொகுதி தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறக் கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதால் ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் பணியை கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடன் துவங்கியுள்ளனர்.
மத்திய தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று, தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனுத்தாக்கல் சனிக்கிழமை (அக்.16) தொடங்கியது. ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு: பாரம்பரியமாக இது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதி என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்ட போதிலும், கடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது நடைபெறும் இடைத் தேர்தலிலும் திமுகதான் இத் தொகுதியில் போட்டியிடும். இதர கூட்டணிக் கட்சிகள் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் என்பதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளராக மறைந்த இந்து அறநிலையத்துறை அமைச்சரின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியிட வாய்ப்பு அதிகம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் துணை மேயர் கௌஸ் பாட்சா, மாவட்டச் செயலர் வ. வேலுச்சாமி, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலினையில் உள்ளது என்றனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியிடம் இத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளாதா என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு,” வேட்பாளரை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். நான் போட்டியிட வேண்டும் என பெரும்பான்மையான கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புவது அவர்களுக்கு என்மீதுள்ள பற்றுதலைக் காட்டுகிறது. இருப்பினும் வேட்பாளரை கட்சித் தலைவர்தான் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பொருத்தமட்டில் கடந்த பொதுத் தேர்தலின்போது இத்தொகுதிக்கு மூன்று முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். அப்போது முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கா. காளிமுத்துவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேட்பாளர் மாற்றம் நடைபெற்றது.
இத் தொகுதியில் இம்முறை அதிமுக வேட்பாளராக மதுரை நகர் மாவட்டச் செயலர் வெ. ராஜன்செல்லப்பா போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பாளர் போட்டியில் மேலும் சில முன்னணி அதிமுக நிர்வாகிகளும் களத்தில் உள்ளனர். இத் தொகுதியில் தேமுதிக கடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது இடம் பெற்றிருந்தது. தேர்தலுக்குப்பின் எங்கள் கட்சிக்கு மக்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, இடைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அக்கட்சியின் பொருளாளரும் கடந்த தேர்தலில் இத் தொகுதியில் போட்டியிட்டவருமான சுந்தரராஜன் தெரிவித்தார். இத்தேர்தலில் சுந்தரராஜன் அல்லது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா போட்டியிடக் கூடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.














