வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதியை படித்தவுடன் பரிதாபமாக இருக்கிறது.
மற்றவர்களுக்காவது எச்சரிக்கையாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இந்த செய்தியை வலையில் இடுகிறேன். படம் பார்க்க சென்று மாட்டிக்கொண்ட அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைத்துப் படங்களையும் Saw செய்பவரை வேண்டுகிறேன்.
மாற்றுகோணத்தில் சிந்தித்தால் வே.வி. போன்ற படங்களின் மூலமே கள்ளர்களின் திரைமறைவு வாழ்க்கை வெளிச்சமாகிறது என்பது பேருவகையை கொடுக்கிறது. சொல்ப பார்வையாளர்களே திரையரங்கிற்கு வரும் இந்தக் காலத்தில், கட்டணம் செலுத்தி குஷன் சேரில் உட்கார வரும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் சிறையில் தள்ளுவது, சொல்லொண்ணா இடரை உணர்த்துகிறது.
சீர்தூக்கி பார்க்கையில், ராகவன் டிஜிபியின் சாதுர்யங்களை தெரிந்து கொள்வதற்கு முன், உச்சகட்டம் முடிந்து கோட்டை விட்ட வில்லனின் ஓட்டைகளை அறிவதற்கு முன், விழிப்புடன் காவல்துறை செயல்படுகிறது என்பது பெருமை கலந்த பாராட்டுக்குரியது அல்லவா!?
படம் பார்த்தும் தப்பித்த இருவரைப் பார்த்தால் எனக்கு வருத்தம் கலந்த பொறாமை வருகிறது.
சினிமா தியேட்டரில் ரௌடி கைது: துப்பாக்கியால் சுட்டு போலீஸ் பிடித்தது
சென்னை, செப். 17: சென்னை சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரவுடியை, துப்பாக்கியால் வானில் சுட்டு போலீஸார் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
மதுராந்தகம் சூனாம்பேடைச் சேர்ந்தவர் செந்தில். இவர் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
போலீஸாரிடம் சிக்காமல் சென்னையில் தலைமறைவாக இருந்த இவர், சனிக்கிழமை மாலை காசி தியேட்டரில் “வேட்டையாடு விளையாடு’ படம் பார்க்கச் சென்றுள்ளார். அவருடன் இரு நண்பர்களும் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உளவாளி மூலம் காஞ்சிபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிந்தது. உடனே, 15 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அந்த தியேட்டருக்கு வந்தனர்.
செந்தில் தனது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து காரில் வெளியே வந்தார். தனிப்படை போலீஸார் அந்தக் காரை சுற்றி வளைத்துக் கொண்டனர். பயங்கர குற்றவாளி எனவே அவரை எச்சரிக்கும் நோக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, வானத்தை நோக்கி சுட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
செந்திலைப் போலஸார் கைது செய்து காஞ்சிபுரத்துக்குக் கொண்டு சென்றனர். அவருடைய 2 நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.











