1.31 லட்சம் பதவிகளை உருவாக்கும் உள்ளாட்சித் தேர்தல்
சென்னை, செப். 14: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான நடவடிக்கைகள் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆரம்பம் ஆகிறது.
சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.
இத்தேர்தலை அக்டோபர் 24-ம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
இத்தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் இருந்து மொத்தம் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 385 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
29 மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 686 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) இருந்து 8,825 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் இருந்து 969 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் இருந்து 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் இருந்து 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.
எந்தப் பதவிக்கு எவ்வளவு டெபாசிட்: இப்பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.
சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.
பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.250.
மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.
பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.
இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும். எனினும், தேர்தல் முடிவுகளை மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக உடனுக்குடன் ஆன்-லைனில் வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அக்.24-க்குள் தேர்தல்: தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இத்தேர்தலைத் தள்ளி வைக்க இயலாது. எனவே, அக்டோபர் 24-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சிகள் பல்வேறு கட்டங்களாக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் மொத்தம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
பதற்றம் ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி வாக்குப் பதிவை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.










