மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளின் செல்வாக்கை வெளிப்படுத்தும் உரைகல்
சென்னை, செப். 14: தமிழக அரசியல் களத்தில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை வெளிப்படுத்த உதவும் உரைகல்லாக மதுரை மத்திய தொகுதிக்கான இடைத்தேர்தல் அமையும்.
குறிப்பாக தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் இடையேயான பலப் பரிட்சையாக இத்தேர்தல் திகழும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.வின் வளர்ச்சியையும் இத்தேர்தல் வெளிப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு.
சட்டப் பேரவைக்கு 8.5.2006-ல் தேர்தல் நடைபெற்றது. மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அகால மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியான இத்தொகுதிக்கு அக்டோபர் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் இடைத்தேர்தல்: தி.மு.க. அரசு அமைந்தபிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. தாங்கள் அறிவித்த -நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மக்களிடையே எந்த அளவுக்கு தங்களுக்கு ஆதரவைப் பெருக்கி உள்ளது என்பதை இத்தேர்தலின் மூலம் தி.மு.க. அரசு தெரிந்து கொள்ள முடியும்.
எடை போடலாம்: தி.மு.க. அரசுக்கு மட்டும் இன்றி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த இடைத்தேர்தல் அவற்றின் பலத்தை எடை போட உதவும் சோதனைத் தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. தீவிரம் காட்டும்: அ.தி.மு.க.வைப் பொருத்தவரை, இத்தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். அதன்மூலம் மக்களிடையே தனது செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பதை காட்ட வேண்டும் என்கிற நிலையில் உள்ளது.










