மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள்: திமுக – பழனிவேல் ராஜன் மனைவி; அதிமுக – ஜக்கையன்?
சென்னை, செப். 14: அடுத்த மாதம் 11-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் மறைந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜக்கையனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (செப். 16) தொடங்குகிறது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. திமுக, அதிமுக மற்றும் விஜயகாந்த் கட்சியான தேமுதிக ஆகிய 3 கட்சிகள் களத்தில் குதிக்க உள்ளன.
இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 16-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 23-ம் தேதி.
மனுக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதி செப். 27.
தேர்தல் நடைபெறும் நாள் அக்டோபர் 11. வாக்கு எண்ணும் நாள் அக்டோபர் 14.
இத் தொகுதியை தக்கவைத்துக் கொள்வது ஆளும் திமுகவுக்கு கெüரவப் பிரச்சினை. எனவே, முழுமூச்சுடன் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் பேரவைத் தலைவர் காளிமுத்து, மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் ஏற்கெனவே போட்டியிட்ட ஜக்கையனுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
கடந்த தேர்தலில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக் கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன் 12039 வாக்குகள் பெற்றார்.
இடைத் தேர்தலிலும் சுந்தரராஜன் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. விஜயகாந்துக்கு மதுரை சொந்த ஊர். அதிலும் அவரது வீடு மதுரை மத்திய தொகுதியில் உள்ளது. எனவே, கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற போராடுவோம் என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்காளர்கள்: மதுரை மத்திய தொகுதியில்
மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 231.
ஆண் வாக்காளர்கள் 63 ஆயிரத்து 333;
பெண் வாக்காளர்கள் 65 ஆயிரத்து 898.
புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் முதல் முறையாக இத் தொகுதியில்தான் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுவிட்டது.










