ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதன் எதிரொலி: கட்சிப் பதவியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ. நீக்கம்
சென்னை, செப். 14: உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் ஜெயலலிதா பேரவையின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார் அவர். தற்போது அப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்ட தொடக்க விழாவில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கலந்துகொண்டார்.
திராவிட இயக்கங்களை ஒற்றுமைப்படுத்தி சகோதர யுத்தத்துக்கு முடிவு கட்டி தமிழகத்தை பிரகாசிக்க செய்யும் பொறுப்பு மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது என்று அவர் பேசினார்.
அதோடு அரசியல் நாகரீகம் தெரிந்தவர், பண்பாளர் என்றெல்லாம் ஸ்டாலினைப் பாராட்டினார்.
இந்நிலையில் எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ. பதவியை சண்முகம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உள்பட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
60 ஆயிரம் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட நான், ஒருசிலர் கோருவதற்காக ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சண்முகம் கூறியுள்ளார்.
திமுக- அதிமுக இணைப்பை மக்கள் விரும்புகின்றனர்: மதுரை அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் பேட்டி
மதுரை, செப். 14: திமுக – அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர் என, மதுரை மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் (அதிமுக) தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
திராவிட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசியதில் தவறில்லை.
அதைத் தவறு என்று கூறினால், தொடர்ந்து அத்தவறை செய்யத் தயங்கமாட்டேன். நிர்பந்தங்களுக்கும் பயப்படமாட்டேன்.
திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைப்பு என்ற கருத்துடன், அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுடனும் மென்மையான அணுகுமுறையை திமுக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். எனவே என் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.
திராவிட இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் நாகரிகமான அரசியல் நடைமுறை ஏற்பட வேண்டும். மதுரை மேற்குத் தொகுதியில் நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம்.
திமுக-அதிமுக ஒருங்கிணைப்பை மக்கள் விரும்புகின்றனர். அதற்கான நல்ல விதையை விதைத்துள்ளேன். அது நன்றாக வளரும். இணைப்பு ஏற்படாவிட்டால் தேவையில்லாத தேமுதிக போன்ற அரசியல் களைகள் உருவாகிவிடும்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய கருத்துகளைக் கட்சித் தலைமையிடமும் தெரிவித்துள்ளேன். ஆனால், தலைமையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.
திமுக-அதிமுக இணைப்புக்கு நீண்ட காலத்திற்கு முன் தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் முயற்சி மேற்கொண்டார். தற்போது நான் முயற்சித்துள்ளேன்.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்து 38 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இன்று வரை இணையவில்லை.
இருப்பினும், ஒரே தளத்தில் நின்று செயல்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதுபோன்ற நிலை தி.மு.க- அ.தி.மு.க.விடமும் ஏற்படலாம்.
இக்கருத்தை தெரிவித்ததால் நான் அ.தி.மு.க.விலிருந்து விலகுகிறேன் என்று அர்த்தமல்ல. நான் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எனவே, அ.தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. என்னை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.வினருக்கும் இல்லை.
திமுக- அதிமுக ஒருங்கிணைப்புக் கருத்தைத் தெரிவித்ததால் என் மீது தாக்குதல் ஏதும் நடைபெறலாம் என்று கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் அவர்.










