வசதியுள்ளோருக்கு இடஒதுக்கீடு மறுக்கும் பரிந்துரை கூடாது: வீரமணி எதிர்ப்பு
சென்னை, செப்.12: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையில், பணவசதி படைத்தோருக்கு விலக்கு அளிக்கும் பரிந்துரையை ஏற்க முடியாது என தி.க. தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையை செப்.15-ல் அரசுக்கு சமர்ப்பிக்கப் போவதாக, அதற்கான குழுவின் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
பணவசதி படைத்தோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தையும் இதில் சேர்க்கப் போவதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, இதுபோன்ற திட்டத்தைச் சேர்க்க வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டது. எனவே, மேற்படி திட்டத்தை பரிந்துரையில் சேர்ப்பது, இந்த முடிவுக்கு முரணானதாகும்.
திறந்த போட்டிக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவுக்கோ இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை. அதுதான் சரியான சமூக நீதியாகும். பிற்படுத்தப்பட்டவர்கள் மீது மட்டும் ஏன் இந்தத் தாக்குதல் தொடுக்க வேண்டும்?
வீரப்ப மொய்லியின் அறிக்கையில் இதுகுறித்த பரிந்துரை இருக்குமானால், நாடு முழுவதும் அந்த அறிக்கையை தி.க. சார்பில் எரிப்போம் என வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிற்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி, செப். 12: பிற்பட்ட வகுப்பினரில், “கிரீமிலேயர்‘ என அழைக்கப்படும் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 1992-ம் ஆண்டு மண்டல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் கூறியதை அடுத்து, நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் அல்டமாஸ் கபீர் ஆகியோர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தனர்.
“கன்ஸ்யூமர் கேர்’ என்ற நுகர்வோர் அமைப்பு, இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. விவரம்:
மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பிற்பட்ட வகுப்பினரில் யாரைச் சேர்ப்பது, உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா, இல்லையா என்பதைப் பார்த்து, அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்குமாறு மண்டல் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, அரசைக் கட்டுப்படுத்தும்.
தீர்ப்புக் கூறப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழகம் மட்டும் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றவில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், அவர்களில் வசதி படைத்தோர் அதிலிருந்து விலக்கப்படாததால், தகுதியுள்ளவர்களுக்கு அந்த சலுகை கிடைப்பதில்லை. எனவே, பிற்பட்டோரில் வசதி படைத்தோரை அடையாளம் கண்டு, அவர்கள் இட ஒதுக்கீடு பயனை அனுபவிப்பதிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.










