அதிமுக ஆட்சிக் காலத்தில் கோப்புகள் தேங்கியிருந்ததை நிரூபிக்கத் தயார்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
சென்னை, செப். 9: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் அதிக கோப்புகள் தேங்கியிருந்தன என்பதை நிரூபிக்கத் தயார் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் கோப்புகள் தேங்கியிருந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம்:
எனது ஆட்சிக்காலத்தில் கோப்புகள் தேங்கியிருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையல்லை என்பதை பத்திரிகையாளர்கள், படித்தவர்கள், அதிகாரிகள் ஆகியோரடங்கிய பிரதிநிதிகள் குழு முன்னர் நிரூபிக்கத் தயார். எனது குற்றச்சாட்டு பொய் என்றால், அந்தக் குழு கூறுகிற தண்டனையை ஏற்கவும் தயார்.
ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியிருப்பதாக அவர் அநாகரிகமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். என்னிடம் பணியாற்றும் 5 செயலாளர்களில் ஒருவர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுக்காலம் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டிருந்தவர். மற்றொருவர் என்னிடம் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுபவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் 9 ஆண்டுக்காலம் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டவர்.
ஜெயலலிதாவும், தனது ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளான ஜானகி ராமன், தேவாரம் ஆகியோரை பணியில் அமர்த்தியிருந்தார்.
மேலும் யாருடைய ஆட்சிக் காலத்தில் டிஜிபி-யும், உள்துறைச் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும்.
பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக டிஜிபி ரவீந்திரநாத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர் தவறு செய்திருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணம் ஏன் என்பது தெரியவில்லை.
உள்துறைச் செயலாளராக இருந்த முனீர் ஹோதாவை தாற்காலிகப் பணி நீக்கம் செய்த உத்தரவை மத்திய அரசே மேற்கொள்ள மறுத்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முனீர் ஹோதா துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து மசூரியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சிக் கழகத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதேபோல சிறுபான்மையோர் உரிமை நாள் கொண்டாட வேண்டுமென்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. சிறுபான்மையோர் உரிமை நாளைக் கொண்டாட ரூ. 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யும்படி ஜனவரி 4, 2005-ல் கோப்பு ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. ஓராண்டுக்காலம் அந்த கோப்பு முதல்வர் அலுவலகத்திலேயே கையெழுத்தாகாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் 6-ம் தேதி அந்த கோப்பில் நான் கையெழுத்திட்டேன்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்றது முதலமைச்சர் மாநாடு அல்ல. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவு அணுகுமுறை ஆவணத்தை பரிசீலிப்பதற்கான வட்டாரக் கலந்தாய்வுக் கூட்டம்தான். இம்மாநாடு ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அதே நாளன்று தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் காரணமாக, எனக்குப் பதில் இக்கூட்டத்தில் தமிழக திட்டக் குழு துணைத் தலைவரான நாகநாதன் பங்கேற்றார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கூட்டங்களில் முதலமைச்சரான அவரோ அல்லது நிதி அமைச்சரோ ஒரு முறை கூட பங்கேற்றது கிடையாது.
இம்மாதம் 5-ம் தேதி தில்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 4-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இரண்டில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால் 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை: நிரூபிக்கத் தயார்- ஜெ. அறிவிப்பு
சென்னை, செப். 9: எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை. இதை பத்திரிகையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தத் தயார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வருக்கு உதவி செய்ய சில ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பல துறைகளிலிருந்து கோப்புகள் அனுப்பப்படும். அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக பல துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட கோப்புகளை அந்தந்த துறை பொறுப்புள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பல காரண காரியங்களையும் ரகசிய சவுகரியங்களையும் முன்னிட்டு முதல்வர் கருணாநிதி தற்போது நியமித்து இருப்பது போல் நான் செய்யவில்லை. அம்மாதியான தேவைகள் எனக்கு இல்லை. எனவே ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேவையில்லை என்று முடிவு செய்து இன்றைக்கும் பணியில் இருக்கின்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளை என் அலுவலகத்தில் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட நிர்வாக விஷயமாக எனக்கு உதவி செய்ய நியமித்து இருந்தேன். நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கோப்புகள் தேங்கியதாகவோ கோப்புகள் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றோ எந்த பேச்சும் கிடையாது.
என்னிடம் பணியாற்றிய அதிகாரிகள் தங்கள் துறை சம்பந்தபட்ட கோப்புகளை அதற்கு உரிய நாள்களில் அதனுடைய அவசியம் கருதி, தன்மை கருதி என் கவனத்துக்குக் கொண்டு வந்து என் உத்தரவினை அவ்வப்போது பெற்றிருக்கின்றனர். கருணாநிதி சொல்வது போல் கோப்புகள் தேங்கி இருக்க வேண்டிய அவசியம் என் நிர்வாகத்தில் இல்லை.
இன்றைய சூழ்நிலையில் என்னிடம் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அந்தக் கோப்புகளை என்னிடம் காட்டினால் பத்திரிகையாளர் முன்னிலையில் அது எந்தக் கோப்பு, என்ன காரணம் காட்டி பைசல் செய்யப்பட்டது என்ற விவரங்களை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். இதையெல்லாம் விடுத்து வீண்பழி போடுவதும் அவதூறு செய்து கொண்டிருப்பதும் எந்த விதத்திலும் உண்மையாகிவிடாது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
தில்லி முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்ளாதது ஏன்? ஜெ.
சென்னை, செப். 9: உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரம் இருக்கும்போது பிரதமர் கூட்டிய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதிக்கு நேரமில்லையா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு இரண்டு முதலமைச்சர்கள் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரண்டிலும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமது சொந்தக்காரர் நாகநாதனை, எந்தவித ரகசிய காப்புப் பிரமாணமோ அல்லது பதவி ஏற்பு உறுதிமொழியோ எதுவும் எடுத்துக் கொள்ளாத, எந்த விதத்திலும் அரசின் அன்றாட நிர்வாகத்துக்குச் சம்பந்தம் இல்லாத நாகநாதனை, உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி அனுப்பி வைத்தார்.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தில்லியில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடந்தது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றி கலந்தாலோசனை செய்ய இந்த மாநாடு நடைபெற்றது. இதிலும் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக எந்த அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை. தலைமைச் செயலாளர் மட்டும் கலந்துகொண்டார்.
உறவினரின் முடிவெட்டும் நிலையத்தைத் திறந்து வைப்பதற்கு நேரம் இருந்த கருணாநிதிக்கு, உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய விஷயத்தில், பிரதமர் கூட்டிய முதல்வர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நேரமில்லை. என்னே தமிழர்கள் பாக்கியம். இவருடைய அமைச்சரவையில் ஆட்டுக்கு ஒரு மந்திரி, ஆட்டு தாடிக்கொரு மந்திரி, மாட்டுக்கு ஒரு மந்திரி, மாட்டு கொம்புக்கு ஒரு மந்திரி என 30 அமைச்சர்கள் உள்ளனர். இந்த 30 பேரில் ஒருவர் கூட உள் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில், அதுவும் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ள நேரம் இல்லை.
இவ்வகை மாநாடுகளை எப்போதுமே நான் புறக்கணித்ததில்லை. ஏறக்குறைய அனைத்து உயர்மட்டக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.
ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்த இந்த 100 நாள்களில் இரண்டு முறை நடந்த முதல்வர்கள் மாநாடுகளுக்கு இரண்டு முறையும் இவர் போகவில்லை. நிர்வாகத்தைப் பற்றி இவருக்குத் துளியும் கவலை இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதம் வலுவாக கால் பதித்துவிட்டது என்பதை இந்த 100 நாள்களில் நாம் பார்த்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.










